இரட்டை இலைக்கு ஓட்டுப் போட வேண்டாம்: ஜெயலலிதா பற்றி பரவும் ஃபோட்டோஷாப் பதிவு

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’நீங்கள் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட வேண்டாம்,’’ என மறைந்த ஜெயலலிதா சொல்வது போல ஒரு ஃபோட்டோஷாப் புகைப்படம் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பரவி வருகிறது. இதை பார்க்கும்போதே, ஃபோட்டோஷாப் செய்யப்பட்டதுதான் என தெளிவாக தெரிந்தாலும், ஆயிரக்கணக்கானோர் அதிகம் ஷேர் செய்வதால் இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தோம்.

தகவலின் விவரம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவை எம்பெட் செய்ய முடியவில்லை என்பதால், அதன் ஸ்கிரின்ஷாட்டை இங்கே இணைத்துள்ளோம்.

C:\Users\parthiban\Desktop\jayalalithaa 2.png

Archived Link

இந்த பதிவை Muthu Raj என்பவர் தமிழ் நண்பர்கள் குழுவுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். இதில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பகிர்ந்து, அவர் கையில் வைத்திருக்கும் பேப்பர் ஒன்றில், ‘’இரட்டை இலை என்னோடு முடிந்துவிட்டது, இப்போது இருப்பது மோடி சாப்பிட்ட எச்சில் இல்லை, அடிமை திமுக,’’ என எழுதியுள்ளனர். இது தவிர, ஜெயலலிதாவின் புகைப்படத்திற்றுகு மேலே, நீங்கள் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்றும், கீழே, அதிமக தொண்டர்களே சிந்தியுங்கள், மோடியை தோல்வியடைய செய்யுங்கள், என்றும் எழுதியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
இதை பார்க்கும்போதே, ஜெயலலிதா மீதுள்ள அனுதாபம் மற்றும் அஇஅதிமுக கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் மீதுள்ள அதிருப்தி காரணமாக, இப்படியான பதிவை வெளியிட்டுள்ளனர் என்பது புரிகிறது. இருந்தாலும் ஃபேஸ்புக் விதிமுறைகளின்படி, தவறாகச் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்வது ஏற்புடையதல்ல என்பதால், இந்த புகைப்படத்தின் உண்மை ஆதாரத்தை கண்டறிய தீர்மானித்தோம்.

இதன்படி, மேற்கண்ட புகைப்படத்தை, Yandex இணையதளத்தில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அதில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள ஜெயலலிதாவின் உண்மையான புகைப்பட ஆதாரம் கிடைத்தது.

C:\Users\parthiban\Desktop\jayalalithaa 3.png

இதன்படி, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டபோது, ஊடகத்தினருக்கு ஜெயலலிதா பேட்டி அளித்தார். அப்போது எடுக்கப்பட்டதுதான் இந்த புகைப்படம். இதுபற்றி பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இருந்தாலும், ஒன் இந்தியா தமிழ் இணையதளம் வெளியிட்ட செய்தி ஆதாரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில் ஜெயலலிதாவின் கையில் இருப்பது மத்திய அரசின் கெஜட் ஆகும். எனவே, மேற்கண்ட புகைப்படம், சுயலாபத்திற்காகச் சித்தரிக்கப்பட்ட ஃபோட்டோஷாப் புகைப்படம் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ எதையும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:இரட்டை இலைக்கு ஓட்டுப் போட வேண்டாம்: ஜெயலலிதா பற்றி பரவும் ஃபோட்டோஷாப் பதிவு

Fact Check By: Parthiban S 

Result: False