காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தியை கண்டித்த பெண்மணி: வீடியோ உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

காஷ்மீர் மக்களுக்கு ஏன் தொந்தரவு தருகின்றீர்கள். மோடி ஆட்சியில் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வது உங்களுக்குப் பொறுக்கவில்லையா என்று ராகுல் காந்தியைப் பார்த்து பெண் ஒருவர் கேட்டதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

RAHUL 2.png

Facebook Link I Archived Link 1 I Archived Link 2

29 விநாடிகள் ஓடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் பெண் ஒருவர் இந்தியில் பேசுவது போல் உள்ளது. அவரை ராகுல்காந்தி சமாதானம் செய்கிறார். என்ன பேசுகிறார் என்பது தெரியவில்லை. 

நிலைத்தகவலில், “நீங்க ஏன் இங்க வந்து காஷ்மீர் மக்களுக்கு தொந்தரவு கொடுக்குறீங்க ராகுல். மோடியின் ஆட்சியில் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வது உங்களுக்கு பொறுக்கலையா? எதுக்காக இங்க வந்தீங்க.. திரும்பி போங்க” இதை தான் கண்ணீர் பொங்க அந்த அம்மையார் கூறுகிறார், என்று பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை உலக ஹிந்து மக்கள் முகநூல் தளம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், Vijaya Kumar என்பவர் 2019 ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காஷ்மீரின் உண்மைநிலையை அறிய ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் அங்கு சென்றனர். ஆனால், அவர்களை காஷ்மீருக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி ராணுவத்தினர் திருப்பி அனுப்பிவிட்டனர். தன்னை மாநில ஆளுநர்தான் அழைத்ததாக ராகுல் காந்தி தெரிவித்தும் அவர்களுக்கு காஷ்மீருக்குள் செல்ல அனுமதி அளிக்கவில்லை. இதனால், டெல்லி திரும்பிய ராகுல் காந்தியிடம் பெண்மணி ஒருவர் காஷ்மீரில் தாங்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் பற்றி பேசியதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக தினமணி வெளியிட்ட செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

ட்விட்டரில் இது தொடர்பாக வெளியான வீடியோவை, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் எல்லோரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவைத்தான் Vijaya Kumar வெளியிட்டுள்ளார். ஆனால், ராகுல் காந்தியை திரும்பி போகும்படி அந்த பெண் கூறியதாக நிலைத்தகவலில் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அந்த பெண் என்ன பேசினார் என்று ஆய்வு மேற்கொண்டோம்.

இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ராதிகா என்பவர் வெளியிட்டதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. அனைத்து ஊடகங்களிலும் அந்த வீடியோ மற்றும் செய்தி வெளியாகி இருந்தது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த செய்தியில் அந்த பெண், “எங்களுடைய குழந்தைகள் எல்லாம் வெளியே செல்ல முடியவில்லை. வீட்டிலேயே முடங்கிகிடக்கின்றனர். என்னுடைய சகோதரர் இதய நோயாளி. அவரால் கடந்த 10 நாட்களாக மருத்துவரைக் கூட சென்று சந்திக்க முடியவில்லை. நாங்கள் பிரச்னையில் இருக்கிறோம்” என்று கூறியதாக மொழிபெயர்ப்பு செய்திருந்தனர்.

அருண் குமார் சிங் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். அதை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ரீட்வீட் செய்து, “இன்னும் எத்தனை நாட்களுக்கு இது தொடரும். தேசியவாதம் என்ற பெயரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள லட்சக் கணக்கான மக்களில் ஒருவரின் குமுறல் இது” என்று குறிப்பிட்டு இருந்தார். 

Archived Link

ஒன் இந்தியா தமிழ் வெளியிட்டிருந்த செய்தியில், காஷ்மீரில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வேறு ஒரு விமானம் மூலம் டெல்லி திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் இந்த பெண்மணி தன்னுடைய குமுறலை வெளிப்படுத்தினார். சரியாகிவிடும் என்று அவரை ராகுல்காந்தி சமாதானப்படுத்த முயன்றார் என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

உண்மை இப்படி இருக்க, காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு திரும்பிச் செல்லும் ராகுலைப் பார்த்து “ திரும்பிப்போங்கள்” என்று அந்த பெண்மணி கூறினார் என்று தவறாக பதிவிட்டுள்ளது உறுதியாகிறது.

நம்முடைய ஆய்வில் வீடியோவில் உள்ள பெண்மணி, காஷ்மீர் மக்கள் படும் அவஸ்தைகள் பற்றி ராகுல் காந்தியிடம் பேசியதும் அவரை ராகுல்காந்தி அமைதி படுத்தியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ராகுல் காந்தியை திரும்பிச் செல்லும்படி அந்த பெண்மணி கூறியதாக வெளியான மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தியை கண்டித்த பெண்மணி: வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False