சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ் டானிக்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

சமூக ஊடகம் மருத்துவம் I Medical

‘’சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ் டானிக்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இது உண்மையா என சந்தேகத்தில் ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

இந்த Page இங்க லைக் பண்ணுங்க ப்ளிஸ்என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஏப்ரல் 9, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், Keva Stone Crush Tonic பாட்டிலின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் அருகே ஒரு கடிதத்தை இணைத்துள்ளனர். அதில், ‘’வணக்கம் என் பெயர் முரளி. சென்னை மடிப்பாக்கம். எனது மகன் தினேஷ்க்கு கிட்னியில் 7 எம்எம் கல் இருந்தது. எனது மகனுக்கு ஆபரேசன் செய்ய 50,000 ஆயிரம் செலவாகும் என்று டாக்டர்கள் சொன்னார்கள். 59 ரூபாய் மட்டும் உள்ள கேவாவின் ஸ்டோன் கிரஷ் சிரப்பு சாப்பிட்டதன் மூலம் கல் யூரின் வழியாக வெளியேறிவிட்டது. கேவா நிறுவனத்திற்கு நன்றி,’’ என எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவை உண்மை என நம்பி பல ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது உண்மையா என்ற சந்தேகத்தில் முதலில் Keva India அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று, குறிப்பிட்ட Stone Crush Tonic பற்றி தகவல் தேடினோம்.

ஆனால், அதில், இது மற்ற மருந்துகளைப் போல இதனை யாரும் பயன்படுத்தாமல், மருத்துவரின் உரிய ஆலோசனை பெற்று இதனை பயன்படுத்த வேண்டும் என, அந்நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இது தங்களது நோயை குணப்படுத்தும் என்றெண்ணி இந்த டானிக்கை பயன்படுத்தாமல் மருத்துவர் சொல்வதன் அடிப்படையில் பயன்படுத்துங்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதேசமயம், டானிக் போல இதனை தினசரி பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரகவியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.ஜி.சேகரிடம் பேசினோம். அவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பார்த்துவிட்டு, “7 எம்.எம் வரையிலான கற்களுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைப்பது இல்லை. பொதுவாக நாங்கள் பரிந்துரைக்கு மாத்திரை மருந்துடன், அதிகமாக தண்ணீர் அருந்தினாலே இந்த கற்கள் வெளியே வந்துவிடும். இதனுடன் வாழைத்தண்டு சாறு போன்ற நாட்டு வைத்தியம் எடுப்பதன் மூலம் பலருக்கும் இந்த கற்கள் வெளியே வந்துவிடுகின்றன. இதைவிட பெரிய கற்களுக்கு மட்டுமே அறுவைசிகிச்சை பரிந்துரைக்கிறோம். அதுவும் அந்த கல் எந்த இடத்தில் உள்ளது, ஏதேனும் வெளியேற முடியாத சிக்கலான இடத்தில் மாட்டிக்கொண்டதா என்பதைப் பொருத்து அறுவைசிகச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவல் வெறும் விளம்பர யுக்தி போல உள்ளது” என்றார்.

Picture: Doctor M.G.Sekhar, Chennai Apollo Hospitals.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்த உண்மையின் விவரம்,

1) 7 எம்.எம் அல்லது அதற்கும் குறைவான சிறுநீரகக் கற்களுக்கு அறுவை சிகிச்சை இன்றி டானிக், மருந்து, மாத்திரைகள் மூலமான சிகிச்சை பரிந்துரைக்கப்படுவது வழக்கம்தான். நிறைய நீர் அருந்தினாலே அளவு குறைவான சிறுநீரகக் கற்கள் வெளியே வந்துவிடும் என டாக்டர்கள் சொல்கின்றனர்.
2) மருத்துவர்கள் பரிந்துரை இன்றி இத்தகைய டானிக்குகளை முழுதாக நம்பி பயன்படுத்தக்கூடாது என்று சம்பந்தப்பட்ட நிறுவனமே விளக்கம் அளித்துள்ளது.
3) இது டானிக் மட்டுமே, முழுநேர மருந்து கிடையாது என்றும் சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனமே குறிப்பிட்டுள்ளது.
4) மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பார்த்தால் குறிப்பிட்ட டானிக் தயாரிப்பிற்கு விளம்பரம் தேடும் செயல் போல உள்ளது.
5) மருத்துவர் ஆலோசனையின்றி இதுபோன்ற சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களை நம்பி செயல்பட்டால் தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ் டானிக்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Mixture