FACT CHECK: தேர்தலில் ரூ.4 கோடி சம்பாதித்த ஏழை விவசாயி எச்.ராஜா?- பசுமை விகடன் பெயரில் வதந்தி!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தேர்தல் விவசாயத்தின் மூலம் 45 நாட்களில் ரூ.4 கோடியை அறுவடை செய்த காரைக்குடி ஏழை விவசாயி எச்.ராஜா என்று பசுமை விகடன் செய்தி வெளியிட்டதாக நையாண்டி பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

எச்.ராஜா டிராக்டர் ஓட்டுவது போன்ற பசுமை விகடன் இதழ் அட்டைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “குறைவான செலவு நிறைவான இலாபம். தேர்தல் விவசாயத்தின் மூலம் 45 நாட்களில் 4 கோடியை அறுவடை செய்த காரைக்குடி ஏழை விவசாயி சிறப்பிதழ்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்த பதிவை Arivu Ajay என்பவர் 2021 ஜூன் 23ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் பா.ஜ.க-வின் முன்னாள் தேசிய செயலாளரான எச்.ராஜா. இந்த தேர்தலில் செலவு செய்வதற்காக கட்சி கொடுத்த நிதியை எச்.ராஜா செலவு செய்யாமல் ரூ.4 கோடியில் வீடு ஒன்றைக் கட்டி வருவதாக பா.ஜ.க-வின் காரைக்குடி பெருநகரத் தலைவர் சந்திரன் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் காரைக்குடி பா.ஜ.க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அசல் பதிவைக் காண: vikatan.com I Archive 1 I news18.com I Archive 2

இந்த நிலையில் எச்.ராஜா தேர்தலில் நான்கு கோடி ரூபாய் அறுவடை செய்துவிட்டார் என்று பசுமை விகடன் என்ற விவசாயம் சார்ந்த இதழ் அட்டைப்படம் மற்றும் கட்டுரை வெளியிட்டிருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. எச்.ராஜா மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து பசுமை விகடன் பெயரை பயன்படுத்தி போலியாக பதிவிட்டிருப்பது தெரிந்தது. இருப்பினும் தேர்தல் விவசாயம், 45 நாளில் 4 கோடி அறுவை, காரைக்குடி ஏழை விவசாயி என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் எச்.ராஜாவை கிண்டல் செய்திருப்பது தெரிந்தது.

பசுமை விகடன் விவசாயம் சார்ந்த கட்டுரைகளை மட்டுமே வெளியிடும். தேர்தல் முறைகேடு பற்றிக் கட்டுரை வெளியிடுவதாக இருந்தால் அது ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் ஆகிய இதழ்களில் வெளியாகும். எனவே, விஷமத்தனமாக கிண்டல் / நையாண்டி பதிவு என்ற பெயரில் இதை  யாராவது வெளியிட்டிருக்கலாம் என்று கருதி விட்டுவிட்டோம். ஆனால், சமூக ஊடகங்களில் ஏராளமானவர்கள் இதை பகிர்ந்து வரவே இது போலியானது என்பதை உறுதி செய்ய இது பற்றி ஆய்வு செய்தோம்.

நிச்சயம் இது பசுமை விகடன் வெளியிட்டது இல்லை என்பது தெரியும். இருப்பினும் அதை தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்ய ஆய்வு மேற்கொண்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள பசுமை விகடன் இதழைத் தேடி எடுத்தோம். அந்த பசுமை விகடன் அட்டைப் படத்தில் தேதி நீக்கப்பட்டு இருந்தது. ஆனால், மேலே Volume: 14 Issue 1 என்று குறிப்பிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் விகடன் ஆர்கிவ் தளத்துக்குச் சென்று பசுமை விகடன் புத்தகத்தை தேடி எடுத்தோம். அது பசுமை விகடனின் 14ம் ஆண்டு சிறப்பிதழ் என்பது தெரிந்தது. அதில் எச்.ராஜா படம் இல்லை. இந்த புத்தகம் 2020ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி வெளியாகி இருந்தது. அதாவது சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு 14 மாதங்களுக்கு முன்பாகவே இந்த பசுமை விகடன் புத்தகம் வெளியாகி இருந்தது.

அசல் பதிவைக் காண: vikatan.com I Archive

2021 மே மாதத்துக்குப் பிறகு வெளியான பசுமை விகடன் புத்தகங்களை விகடன் ஆர்கிவ் தளத்துக்கு சென்று பார்வையிட்டோம். மே, ஜூன் மாதங்களில் தல இரண்டு என மொத்தம் 4 புத்தகங்கள் வெளியாகி இருந்தன.  அவற்றிலும் எச்.ராஜா இல்லை. 

பசுமை விகடன் அட்டைப் படம் என்று எச்.ராஜா படத்துடன் விஷமத்தனமான தகவல் பரவுவது பற்றி ஆனந்த விகடன் அலுவலகத்தில் உள்ள நண்பர்களைத் தொடர்புகொண்டு கேட்டோம். இது தொடர்பாக பசுமை விகடன் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் மறுப்பு வெளியிட்டுள்ளது என்ற தகவலை அவர்கள் நம்மிடம் தெரிவித்தனர். மேலும், ஃபேஸ்புக்கில் வெளியான மறுப்பு பதிவின் இணைப்பையும் நமக்கு அனுப்பி வைத்தனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் மீது “FAKE” என்று முத்திரை குத்தி பதிவிட்டிருந்தனர். மேலும் நிலைத் தகவலில், “இப்படி ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பசுமை விகடனின் பதிவல்ல. எடிட் செய்யப்பட்டு ஷேர் செய்யப்படுகிறது என்பதை பசுமை விகடன் வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதன் மூலம் யாரே விஷமத்தனமாக எச்.ராஜாவை கிண்டல் செய்யும் வகையில் பசுமை விகடன் பெயரை பயன்படுத்தி பதிவிட்டிருப்பதும், அதை பலரும் பகிர்ந்து வருவதும் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நான்கு கோடி ரூபாய் லாபம் பார்த்த ஏழை விவசாயி என்று எச்.ராஜா பற்றி பசுமை விகடன் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டதாகப் பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

எச் ராஜா நான்கு கோடி சம்பாதித்தார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் பசுமை விகடன் அட்டைப்படம் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தேர்தலில் ரூ.4 கோடி சம்பாதித்த ஏழை விவசாயி எச்.ராஜா?- பசுமை விகடன் பெயரில் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False