
உத்தரப் பிரதேசத்தில் சிறுமி ஒருவரின் நாக்கை அறுத்து பூஜை நடத்தியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நாக்கு துண்டான பெண் ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “உத்திரப் பிரதேச மாநிலம் பண்டல்கண்டில் கொரோனாவிலிருந்து ஊரைக் காப்பாற்றுகிறோம் என்று 8வது படிக்கும் மாணவியின் நாக்கை அறுத்து பூஜை நடத்திய கொடூரம். யானைக்குப் பொங்கிய உத்தமர்கள் விராத்கோலி, மேனகா காந்தி, பிரகாஷ் ஜவடேகர் இதற்கு பொங்கமாட்டீர்களா..??” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Writer மொள்ளமாரி தாஸ் (மாரி தாஸ்) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Gladstone Jesey என்பவர் 2020 ஜூன் 7ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனாவுக்கு நாக்கை அறுத்து பூஜை நடத்திய கொடுமை என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் உண்மையில் உத்தரப்பிரதேசத்தில் நடந்ததா என்று கண்டறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பெண் ஒருவரின் நாக்கை வெட்டி பிராமணர்கள் பூஜை செய்ததாக பல வட இந்தியாவில் சமூக ஊடகங்களில் பரவியதாகவும் அது தவறு என்றும் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டிருப்பது தெரிந்தது.
அவற்றைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு வேறு ஏதும் செய்திகள் கிடைக்கிறதா என்று பார்த்தோம். உத்தரப்பிரதேசம், நாக்கு துண்டிப்பு ஆகிய கீ வார்த்தைகளை வைத்து ஆங்கிலம், இந்தியில் மொழியாக்கம் செய்து தேடிப் பார்த்தோம். அப்போது நியூஸ் 18 உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் கிடைத்தன.

கொரோனா பாதிப்பில் இருந்து கிராமத்தைக் காப்பாற்ற சிவன் கோவிலுக்கு தன்னுடைய நாக்கை இவர் அர்ப்பணித்ததாக அதில் கூறப்பட்டு இருந்தது. “சம்பவத்தன்று கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் தேடிச் சென்றுள்ளனர். கோவில் பார்த்தபோது சிறுமி மயக்கத்திலிருந்துள்ளார். வாயில் ரத்தம் வந்துள்ளது. சிவன் விக்ரகத்துக்கு அருகே துண்டிக்கப்பட்ட நாக்கு இருந்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுமியின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
மே 23ம் தேதியை ஒட்டி இது தொடர்பாக பல செய்திகள் வெளியாகி இருந்தன. சிறுமி தானாகவே நாக்கை வெட்டியதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன் மூலம் சிறுமியின் நாக்கை துண்டித்தனர் என்று கூறுவது தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. சிறுமி தானாக முன்வந்து நாக்கைத் துண்டித்துள்ளார். வேறு யாரும் சிறுமியின் நாக்கை அறுத்து பூஜை செய்யவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:உ.பி-யில் சிறுமியின் நாக்கை அறுத்து பூஜை செய்ததாக பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
