இந்த வயதான தம்பதியினர் ஒடிசாவை சேர்ந்தவர்களா?
‘’ஒடிசாவைச் சேர்ந்த இந்த வயதான தம்பதியினர் ஒரே நாளில் இறந்துவிட்டனர்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதில், வயதான முதியவர் மற்றும் அவரது மனைவி இறந்து கிடக்கும் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ஒடிசா மாநிலத்தில் ஒரே நாளில் ஒரு மணி நேர இடைவெளியில் உயிரை விட்ட கணவன், மனைவி என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்ற சந்தேகத்தில் ஒடிசாவில் அண்மையில் இப்படியான சம்பவம் ஏதும் நிகழ்ந்ததா என்று விவரம் தேடினோம். நீண்ட நேரம் தேடியும் இதுதொடர்பான செய்தி எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை இது லைக் வாங்குவதற்காக பகிரப்பட்ட போலி செய்தியா என்ற சந்தேகம் மேலும் அதிகமானது.
இதையடுத்து, குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் முறையில் கூகுளில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இது கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே, சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படம் என தெரியவந்தது.
2019ம் ஆண்டு முதலே இந்த புகைப்படம் பகிரப்படுவதைக் காண முடிகிறது. எனினும், இந்த பதிவு இந்தியில் உள்ளதால், இதில் என்ன கூறியுள்ளனர் என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பார்த்தோம்.
அப்போது, இந்த அழகான ஜோடியை யாரும் பிரிக்க முடியாது, என்று எழுதியிருப்பதாக, அர்த்தம் கிடைத்தது.
இதே புகைப்படத்தை, 2020 ஜூன் மாதத்தில் வேறொரு நபர் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
இதனையும் கூகுள் உதவியுடன் மொழிபெயர்த்து பார்த்தோம். அப்போது, ‘’போர்ஸா பகுதியை சேர்ந்த பண்டிட் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். சில மணி நேரத்திலேயே அவரது தர்மபத்தினியும் உயிரிழந்துவிட்டார்,’’ என அர்த்தம் கிடைத்தது.
இதில் கூறியுள்ள Porsa என்ற பகுதி எங்கே உள்ளது என விவரம் தேடியபோது, அது மத்தியப் பிரதேசத்தில் உள்ளதாக தகவல் கிடைத்தது.
ஒரே புகைப்படத்தை ஒருவர் மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்தது எனக் கூறி பகிர, அதே புகைப்படத்தை மற்றொருவர் ஒடிசாவில் நிகழ்ந்தது என்று பகிர்வதைக் காண முடிகிறது. இது மட்டுமின்றி 2019ம் ஆண்டு முதலாக, இது சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படமாக உள்ளது.
எனவே, ஒரு பழைய புகைப்படத்தை வைத்து, அவரவர் விருப்பம்போல, முன்னுக்குப் பின் முரணான தகவலை பரப்பி வருவதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் முன்னுக்குப் பின் முரணான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.