கொரோனா தயவால் 10ம் வகுப்பில் வெற்றி பெற்ற முதியவர்!– ஃபேஸ்புக் வதந்தி
தெலங்கானாவில் முதியவர் ஒருவர் 47 ஆண்டுகளாக தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து வந்த நிலையில், அரசு ஆல் பாஸ் என்று அறிவித்ததால் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
முதியவர் ஒருவர் தேர்வு எழுதும் படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், "ஐயாவோட பெயர் முகமது பரக்கத் அலி. தெலுங்கானா மாநிலம். வயது 82. 47 ஆண்டுகளாக தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி பெற்றிருந்த நிலையில் இந்தாண்டு தேர்ச்சி பெற்றிருக்கிறார். வாழ்க கொரோனா" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை பொழுதை போக்குவோம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜூன் 10ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா காரணமாக மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்திய நிலையில் இதற்கான அறிவிப்பு வெளியானது. தமிழகம் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முந்தைய நாள் தெலங்கானா அரசு துணிச்சலோடு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைவரும் பாஸ் என்று அறிவித்தது.
இந்த நிலையில், 47 ஆண்டுகள் விடாமல் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய முதியவரும் இந்த ஆண்டு தெலங்கானா அரசு அறிவித்த ஆல் பாஸ் திட்டத்தால் தேர்ச்சி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த முதியவர் பற்றிய பல செய்திகள் நமக்குக் கிடைத்தன.
இந்த முதியவரின் பெயர் முகமது பரக்கத் அலி இல்லை, இவரது பெயர் சிவ் சரண் யாதவ். இவர் தெலங்கானா மாநிலத்தைச் சார்ந்தவர் இல்லை. இவர் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இவர் 47 முறை 10ம் வகுப்பில் தோல்வியடைந்து தற்போது அரசு அறிவிப்பால் வெற்றி பெற்றவர் இல்லை. இவர் தொடர்ந்து 10ம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்து வந்தாலும் தேர்வில் பங்கேற்பதிலிருந்து பின்வாங்கவில்லை. இளம் வயதில் எப்படியாவது 10ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டதாகவும் அதனால் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
1995ம் ஆண்டு கணிதம் தவிர்த்து மற்ற அனைத்து பாடங்களிலும் அவர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால், 2016ம் ஆண்டு நடந்த தேர்வில் அவர் ஒரு பாடத்திலும் வெற்றி பெறவில்லை என்பது தெரிந்தது.
2014 முதல் 2016ம் ஆண்டு வரை இவரைப் பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளன. கடைசியாக 2016ம் ஆண்டு அவர் தேர்வை எதிர்கொள்ள இருந்த செய்தியும் பின்னர் தேர்வில் தோல்வியடைந்த செய்தியும் வெளியாகி இருந்தது. அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
இதன் மூலம் இந்த முதியவர் தெலங்கானாவைச் சேர்ந்த முகமது பரக்கத் அலி இல்லை என்பதும் இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த ஃபேஸ்புக் பதிவு உண்மையும் தவறான தகவலும் கலந்த பதிவு என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:கொரோனா தயவால் 10ம் வகுப்பில் வெற்றி பெற்ற முதியவர்!– ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False