அசாமில் ரயிலை நிறுத்தாமல் சென்ற பெண் டிரைவர்; பீதியடைந்த போராட்டக்காரர்கள்: உண்மை என்ன?

அரசியல் | Politics தமிழகம்

‘’அசாமில் ரயிலை நிறுத்தாமல் சென்ற பெண் டிரைவர்; பீதியடைந்து ஓடிப் போன போராட்டக்காரர்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link 

Time Pass என்ற ஃபேஸ்புக் ஐடி, டிசம்பர் 19, 2019 இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பெண் ரயில் டிரைவர் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’300 கலவரக்காரர்களின் உயிரை விட 1500க்கும் மேற்பட்ட அப்பாவி ரயில் பயணிகளின் உயிர் முக்கியம் என்று ரயிலை நிறுத்தாமல் சென்ற ரயில் ஓட்டுனர், அலறி ஓடிய அஸ்ஸாம் கலவரக்கார்கள்,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இதில் குறிப்பிட்டுள்ளதுபோல, அசாம் மாநிலத்தில் எதுவும் சம்பவம் நிகழ்ந்ததா என விவரம் தேடினோம். அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை. இதையடுத்து, குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக, நமது அசாம் பிரிவைச் சேர்ந்த நண்பரிடம் (Fact Crescendo Assamese) உதவி கேட்டோம். அவர் இதன்பேரில் வடகிழக்கு எல்லை பிராந்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுபாணன் சந்தா (Subhanan Chanda, Chief Public Relations Officer, N.F.Railway) அவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதுபற்றி விவரம் கேட்ட சுபாணன் சந்தா, இப்படி எந்த சம்பவமும் நிகழவில்லை என மறுத்துவிட்டார்.

இதையடுத்து, குறிப்பிட்ட புகைப்படத்தில் உள்ள பெண் ரயில் டிரைவர் யார் என விவரம் தேடினோம். அந்த புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம்.

அப்போது 2014ம் ஆண்டு டெலிகிராப் இந்தியா ஊடகம் இதுபற்றி வெளியிட்ட செய்தியின் லிங்க் கிடைத்தது. அதில், மேற்குறிப்பிட்ட புகைப்படத்தில் உள்ள பெண் பற்றிய விவரம் கூறப்பட்டிருந்தது. அவரது பெயர், Swagatika Priyadarshini என்றும், கிழக்கு கடலோர ரயில்வேயின் கீழ் வரும் குர்தா டிவிஷனில் ரயில் டிரைவராக பணிபுரிகிறார் என்றும் விவரம் கிடைத்தது.

Telegraphindia.com Link Archived Link 

இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண் டிரைவரை தொடர்புகொண்டு இதுபற்றி விளக்கம் பெற தீர்மானித்தோம். நமது ஒடிசா பிரிவில் பணிபுரியும் நண்பர் மூலமாக (Fact Crescendo Odia) உதவி கேட்டோம். அவரும் இதன்பேரில் குர்தா டிவிஷனில் பணிபுரியும் ஸ்வாகாதிகா பிரியதர்ஷினியிடம் தொலைபேசி வழியாக பேசி விளக்கம் பெற்றார்.

இந்த செய்தியை மறுத்துள்ள அவர், ‘’நான் ஒடிசாவில்தான் பணிபுரிகிறேன். அசாம் மாநிலத்தில் இல்லை. இப்படி எந்த சம்பவமும் நிகழவில்லை. நான் ரயில் ஓட்டிச் சென்றபோது யாரும் போராட்டக்காரர்கள் வழிமறிக்கவில்லை. அவர்களை இடிப்பதுபோல நான் வேகமாக ரயிலை ஓட்டிச் சென்றதும் இல்லை,’’ என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளதுபோல அசாம் மாநிலத்தில் எந்த சம்பவமும் நிகழவில்லை.
2) குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் ஒடிசா மாநிலத்தில் பணிபுரியும் ரயில் ஓட்டுனர் ஆவார். அவரிடமே தொலைபேசியில் பேசி மறுப்பு பெற்றுவிட்டோம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:அசாமில் ரயிலை நிறுத்தாமல் சென்ற பெண் டிரைவர்; பீதியடைந்த போராட்டக்காரர்கள்: உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer 

Result: False