நெல்லை கண்ணனைக் கைது செய்யக் கோரும் எச்.ராஜாவைத்தான் கைது செய்திருக்க வேண்டும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

ANBUMANI 2.png
Facebook LinkArchived Link

டாக்டர் அன்புமணி ராமதாஸ் பற்றிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "நெல்லை கண்ணனைக் கைது செய்யக் கோரும் எச்.ராஜாவைத்தான் கைது செய்திருக்க வேண்டும். ஐகோர்ட்டாவது மயிராவது என்று கூறி சாவார்க்கரை போல மண்டியிட்டது எச்.ராஜாதான்- அன்புமணி ராமதாஸ்" என்று உள்ளது.

இந்த பதிவை, திமுக தகவல் தொழில்நுட்ப அணி என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sivasaami Sivaa‎ என்பவர் 2019 டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டுள்ளார். இதைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டை பயன்படுத்தி அதிக அளவில் போலிகள் பரப்பப்படுகின்றன. இதனால், அவ்வப்போது அவர்கள் நியூஸ் கார்டை மாற்றி வருகின்றனர். தற்போது அவர்கள் வெளியிடும் நியூஸ் கார்டு போல இது இல்லை. எனவே, இதை ஆய்வு செய்தோம்.

நியூஸ் கார்டில் பிப்ரவரி 23, 2019 என்று குறிப்பிட்டுள்ளனர். நெல்லைக் கண்ணன் விவகாரம் தற்போது நடந்து வருகிறது. இதன் மூலம், தேதியைக் கூட மாற்றத் தெரியாமல் போட்டோ எடிட் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. மேலும், வழக்கமாக நியூஸ் 7 தமிழ் பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட் இது இல்லை. அன்புமணியின் கருத்துப் பகுதி மட்டும் தனியாக சேர்க்கப்பட்டது துண்டாகத் தெரிகிறது. பழைய பதிவை சரியாக அழிக்காமல் விட்டதையும் காண முடிந்தது.

ANBUMANI 3.png

உண்மையில் பிப்ரவரி 23ம் தேதி நியூஸ் 7 வெளியிட்ட நியூஸ் கார்டை தேடிப்பார்த்தோம். “ ஆட்சிக்கு வருவது இல்லை பாமகவின் இலக்கு, தமிழகத்தை முன்னேற்றுவதே இலக்கு; 8 ஆண்டுகளாகக் கூட்டணி இல்லாமல் இருந்தோம், எந்த கட்சிக்கும் இந்த தைரியம் இல்லை” - அன்புமணி ராமதாஸ் என்று அதிலிருந்தது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியானது.

Archived Link

ஒருவேளை அன்புமணி ராமதாஸ் இப்படி ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளாரா என்று அவருடைய ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். கடைசியாக அவர் டிசம்பர் 18, 2019 அன்று ட்வீட் செய்திருந்தது தெரிந்தது.

ANBUMANI 4.png
Archived Link

பேட்டி ஏதும் அளித்துள்ளாரா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பேசியதாக செய்திகள் வெளியாகின. அதில் கூட அ.தி.மு.க கூட்டணி, உள்ளாட்சி தேர்தல் ஒதுக்கீடு பற்றி மட்டுமே பேசியதாக குறிப்பிட்டிருந்தனர். இதனால், பா.ம.க மூத்த நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம். "இது உண்மையில்லை, அவ்வாறு அன்புமணி பேசவில்லை" என்றார்.

நம்முடைய ஆய்வில்,

அன்புமணி தொடர்பான நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட அசல் நியூஸ் கார்டு கிடைத்துள்ளது.

எச்.ராஜா தொடர்பாக அன்புமணி ராமதாஸ் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், நெல்லை கண்ணனைக் கைது செய்யக் கோரும் எச்.ராஜாவைத்தான் கைது செய்திருக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:எச்.ராஜாவை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்: ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

Fact Check By: Chendur Pandian

Result: False