கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் ஆயிஷா; போலி ட்விட்டர் அக்கவுண்ட் சர்ச்சை!

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

கொரோனா பாதிப்பு காரணமாக இளம் பெண் மருத்துவர் பலியாகிவிட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

டாக்டர் ஆயிஷா என்ற பெயரில் ட்விட் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘’எனக்கு கோவிட் 19 பாதிப்பு உள்ளது. எனக்கு இன்னும் சில நேரத்தில் வெண்டிலேட்டர் பொருத்தப்பட உள்ளது, என்னுடைய சிரிப்பை நினைவு கூறுங்கள். உயிரைப் பறிக்கும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்” என்ற வகையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. 

நிலைத் தகவலில், “ஆழ்ந்த இரங்கள்… வெண்டிலேட்டர் வைக்க போகின்றார்கள் என்னையும் என் சிரிப்பையும் மறந்து விடாதீர்கள் கொரோனாவால் உயிரிழந்த இளம் மருத்துவர் ஆஷாவின் கடைசி பதிவு. அபாயகரமான இந்த கொரோனா வைரஸ் குறித்து அஜாக்கிரதையாக இருந்து விடாதீர்கள். டாக்டர் ஆஷா” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை நம்ம கடலூர் (Namma Cuddalore) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Om Prakash Vsl Cuddalore என்பவர் 2020 ஆகஸ்ட் 2ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வெண்டிலேட்டர் வைக்கும் அளவுக்கு பாதிப்பு உள்ள ஒருவர் சிரித்தபடி ட்வீட் போட்டது ஆச்சரியத்தை அளிக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து தள்ளியே இருங்கள் என்று நல்ல கருத்தைச் சொன்னாலும், இந்த பெண் மருத்துவர் உயிரிழந்தது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

முதலில் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் மருத்துவரின் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்ய முயன்றோம். அந்த ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டு இருந்தது. படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலம், மலையாளம் என பல மொழிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இந்த பெண் மருத்துவர் பற்றி தகவல் கிடைக்கிறதா என்று ஆய்வுக் கட்டுரைகளை எல்லாம் ஒதுக்கிவைத்துத் தேடினோம். ஆயிஷா மரணம் அடைந்துவிட்டதாக இரங்கல் தெரிவித்து ஏராளமானோர் பதிவிட்டிருந்தனர். 

https://twitter.com/fighterMamta/status/1289797428212686849
Archived Link

மேலும், ஆயிஷா என்ற பெயரில் போலி ட்விட்டர் அக்கவுண்டை வைத்து சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவியதாக பல முன்னணி ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. அந்த பெண்மணி யார், உண்மையில் மருத்துவமனையில் சிரித்தபடி, சோகமாக இருக்கும் படம் எங்கே எடுக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் வெண்டிலேட்டர் வைக்கப்படும் புகைப்படம் zaggocare.org என்ற இணையதளத்திலிருந்து எடுத்திருப்பது தெரிந்தது.

ஆயிஷா பற்றி மற்ற மொழிகளில் வதந்தி பரவத் தொடங்கிய நிலையில் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் இது தொடர்பாக ஆகஸ்ட் 3ம் தேதி ஆய்வுக் கட்டுரை வெளியிட்டிருந்தனர். அதே போல ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் இது தொடர்பான கட்டுரை வெளியாகி இருந்தது.

இதன்படி, தென் ஆப்பிரிக்காவை சார்ந்த ஒருவர் இந்த ட்விட்டர் அக்கவுண்டை தொடங்கி பதிவிட்டதாகவும், அதன் பிறகு பிரச்னை பெரிதாகவே அந்த ட்விட்டர் அக்கவுண்டையே ரத்து செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், படத்தில் இருக்கும் பெண்ணின் தலையணையில் உள்ள மருத்துவமனையின் பெயரை அடிப்படையாக வைத்துத் தேடியபோது, அது தெலங்கானாவின் காமரெட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு மருத்துவமனை என்று தெரியவந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, “எங்கள் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது இல்லை. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அனுமதி எங்கள் மருத்துவமனைக்கு இல்லை. எங்கள் மருத்துவமனையில் டாக்டர் ஆயிஷா என்று யாரும் இல்லை. அப்படி யாரும் இங்கு இறக்கவில்லை. எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” என்று குறிப்பிட்டனர்.

ட்விட்டரில் ஃபாலோயர்களை பெற குறுக்கு வழியாக பெண் படத்துடன் பதிவிட்டு வந்துள்ளனர். இந்திய அளவில் டிரெண்ட் ஆகவே, வேறு வழியின்றி அந்த ட்வீட் பதிவு மற்றும் ட்வீட் அக்கவுண்டை அழித்திருக்கலாம் என்று தெரிகிறது.

ட்விட்டர் அக்கவுண்ட் நீக்கப்பட்டு இருந்தது. ட்விட்டர் அக்கவுண்ட் தென் ஆப்ரிக்காவில் உள்ளது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த பெண் கூறியுள்ளார். ஆனால் அந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிஷா என்ற பெயரில் மருத்துவரோ, நோயாளியோ இறக்கவில்லை என்று அந்த மருத்துவமனை கூறியுள்ளது.

இதன் மூலம் போலியான ட்விட்டர் அக்கவுண்டை வைத்து விஷமத்தனமாக வதந்தி பரப்பப்பட்டு வந்திருப்பதையும், இது அறியாமல் நம் ஊரிலும் இந்த பதிவை ஷேர் செய்து வருவதும் உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் ஆயிஷா; போலி ட்விட்டர் அக்கவுண்ட் சர்ச்சை!

Fact Check By: Chendur Pandian 

Result: False