பாகிஸ்தானில் மரக் கன்றுகள் பிடுங்கி வீசப்பட்டதாக பரவும் வதந்தி!

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

பாகிஸ்தானில் மரக் கன்றுகள் நடுவது இஸ்லாமுக்கு எதிரானது என்று கூறி பொது மக்கள் நடப்பட்ட மரக் கன்றுகளை பிடுங்கி வீசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

வரிசையாக நடப்பட்ட மரக் கன்றுகளை மிகப்பெரிய கூட்டம் ஒன்று பிடுங்கி வீசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாடு பாலைவனமாகி கிடக்கேன்னு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உருப்படி ஒரு திட்டம் போட்டு ஊருக்குள்ள மரத்தை நட்டு வைக்க.. மரம் நடுவது இஸ்லாத்துக்கு எதிரானது சொல்லி மர செடியை பிடிங்கி போடும் முட்டா பயலுக்கு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவை Raja Rajan என்பவர் 2020 ஆகஸ்ட் 9ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உலகில் லட்சக் கணக்கான மரக் கன்றுகளை பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் நட்டு வருகின்றனர். மரக் கன்று நடுவது இஸ்லாமுக்கு எதிரானது என்று கூறியிருப்பது புதிதாக இருந்தது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்தது உறுதியானது. ஆனால், இது தொடர்பான செய்திகள் கிடைக்கவில்லை. ட்விட்டரில் பரவி வரும் வீடியோக்கள் மட்டுமே கிடைத்தது.

எனவே, பாகிஸ்தான், மரம் நடும் விழா, மரக்கன்றுகள் பிடுங்கி வீசுதல் உள்ளிட்ட கீ வார்த்தைகளை டைப் செய்து கூகுளில் தேடினோம்

அப்போது பாகிஸ்தான் பிரதமர் நாடு முழுக்க 2.16 லட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தை அறிவித்ததாகவும், அதன்படி பாகிஸ்தான் முழுவதும் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்ததாகவும் தெரிந்தது. மரக் கன்று நடுவது இஸ்லாமுக்கு எதிரானது என்றால் அவர் எப்படி மரக் கன்றுகள் நடும் திட்டத்தை அறிவித்திருப்பார் என்ற கேள்வி எழுந்தது.

dawn.comArchived Link 1
pakistantoday.com.pkArchived Link 2

இந்த வீடியோ கைபர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது என்று செய்தி கிடைத்தது. குறிப்பிட்ட அந்த நிலம் உள்ளூர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானதாம். அந்த நிலத்தை அபகரிக்க அதே ஊரில் மற்றொருவர் முயற்சி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நிலத்தில் மரக்கன்று நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மரக் கன்றுகள் பிடுங்கி வீசப்பட்டதாக செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் புதிதாக நடப்பட்ட மரக் கன்றுகளை பிடுங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அம்மாகாண முதல்வர் உத்தரவிட்டதாக செய்தி கிடைத்தது.

Archived Link 1wionews.comArchived Link 2

இந்திய ஊடகங்களிலும் இது தொடர்பான செய்தி கிடைத்தது. அதில், நார்வே நாட்டை சேர்ந்த எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) வெளியிட்டிருந்த ட்வீட் பதிவில் “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிக எண்ணிக்கையில் மரக் கன்று நடும் திட்டத்தை அறிவித்தார். ஆனால், இது இஸ்லாமுக்கு எதிரானது என்று கூறி சிலர் மரக் கன்றுகளை பிடுங்கி வீசியுள்ளார்களாம்” என்று பதிவிட்டிருந்தார்.

Archived Link

அதன் பிறகு உண்மை நிலை அறிந்த பிறகு, “பாகிஸ்தானில் உள்ளூர் நிலத் தகராறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மரம் நடுவதற்கும் மதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பிரதமர் இம்ரான் கான் முயற்சிக்கு ஆதரவு அளிப்போம். பூமித் தாயைக் காப்போம்” என்று கூறியிருப்பது தெரிந்தது.

எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்ட ட்விட் பதிவே தவறான தகவல் சமூக ஊடகங்களில் பரவ காரணமாகிவிட்டது. நில உரிமை தொடர்பான பிரச்னை காரணமாகவே மரக்கன்று நடும் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் மரக்கன்று நடுவது இஸ்லாமுக்கு எதிரானது என்று கூறி பிடுங்கி வீசிய மக்கள் என்று பகிரப்படும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பாகிஸ்தானில் மரக் கன்றுகள் பிடுங்கி வீசப்பட்டதாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •