ஏ.டி.எம்-களில் பிராந்திய மொழி நீக்கமா? திருச்சி சிவா, நிர்மலா சீதாராமன் பற்றி பரவும் வதந்தி

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்-களில் பிராந்திய மொழிகளை நீக்க உத்தரவிட்டதாக திருச்சி சிவா கூறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தி.மு.க மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா ஆகியோர் புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆதாரம் கேட்ட நிதியமைச்சர் – முக்காடு போட்டுக்கொண்ட திமுக. ஆதாரம் கேட்ட நிதியமைச்சர் – முக்காடு போட்டுக்கொண்ட திமுக (வதந்தியை பரப்பும் திமுக). திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா இன்று (07.09.2020) தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசு நாடுமுழுவதும் உள்ள ATM களில் பிராந்திய மொழிகளை நீக்க உத்தரவிட்டுள்ளதாக கூறி கண்டனங்களை தெரிவித்திருந்தார். இந்த ட்விட்டுக்கு உடனே பதிலளித்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அது போன்ற எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை என்றும் அப்படி ஏதாவது தகவலோ, ஆதாரமோ இருந்தால் உடனே தனக்கு தெரிவிக்கும்படியும், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி இருந்தார். ஆனால் திமுக MP திருச்சி சிவா இதுவரை எவ்வித பதிலும் தராமல் மௌனம் காத்துவருகிறார்..!” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவை Senthil Muruga என்பவர் 2020 செப்டம்பர் 7ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2020 செப்டம்பர் 5ம் தேதி தமிழகத்தில் குடியாத்தத்தில் உள்ள ஏ.டி.எம்-களில் தமிழ் நீக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 7ம் தேதி திருச்சி சிவா ட்வீட் ஒன்றை வெளியிட்டார். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். இவற்றை வைத்து தவறான தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 

tamil.news18.comArchived Link

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில், ” ஆதாரம் கேட்ட நிதியமைச்சர் – முக்காடு போட்டுக்கொண்ட திமுக (வதந்தியை பரப்பும் திமுக)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசியலுக்குள் நாம் செல்லவில்லை. அந்த பதிவில்,

1) திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா இன்று (07.09.2020) தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசு நாடுமுழுவதும் உள்ள ATM களில் பிராந்திய மொழிகளை நீக்க உத்தரவிட்டுள்ளதாக கூறி கண்டனங்களை தெரிவித்திருந்தார். 

2) இந்த ட்விட்டுக்கு உடனே பதிலளித்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அது போன்ற எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை. அப்படி ஏதாவது தகவலோ, ஆதாரமோ இருந்தால் உடனே தனக்கு தெரிவிக்கும்படியும், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி இருந்தார். 

3) திமுக MP திருச்சி சிவா இதுவரை எவ்வித பதிலும் தராமல் மௌனம் காத்துவருகிறார், என்று கூறப்பட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டது போல, நாடு முழுவதும் ஏடிஎம்-களில் பிராந்திய மொழியை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது என்று திருச்சி சிவா ட்வீட் வெளியிட்டாரா…. மத்திய அரசு அப்படி உத்தரவு பிறப்பித்ததற்கான ஆதாரத்தைத் தரும்படி திருச்சி சிவாவை நிர்மலா சீதாராமன் கேட்டாரா என்பது உள்ளிட்ட மூன்று விஷயங்களை மட்டுமே ஆய்வு செய்தோம்.

Archived Link

முதலில் திருச்சி சிவா ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தபோது, செப்டம்பர் 7ம் தேதி பதிவிட்டது உண்மை என்பது தெரிந்தது. அதில், “We condemn strongly the removal of regional languages in Banks and ATMs and urge to immediately restore status quo. – Tiruchi Siva” என்று இருந்தது.

அதாவது, “வங்கி மற்றும் ஏ.டி.எம்-களில் பிராந்திய மொழி நீக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். பழைய நிலையே தொடர கேட்டுக்கொள்கிறேன் – திருச்சி சிவா” என்று மட்டுமே இருந்தது. எந்த இடத்திலும் “பிராந்திய மொழிகளை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது” என்று குறிப்பிடவில்லை.

Archived Link

இதற்கு நிர்மலா சீதாராமன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெளிவான பதில் அளித்திருந்தார். ஆங்கிலப் பதிவில், “There are no instructions from @FinMinIndia to Banks and ATMs to “remove regional languages”. We encourage use of regional languages.If there is any instance of “removal”, please bring it to my notice; I assure speedy action” என்று கூறியிருந்தார்.

தமிழ் பதிவில், “மத்திய அரசின் நிதி அமைச்சரகத்திலிருந்து  வங்கிகளில் அல்லது ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகிப்பதைத் தடுத்து நிறுத்துமாறு எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பிறப்பிக்கும் எண்ணமோ/நோக்கமோ இல்லை. எங்கேனும் இடையூறு ஏற்பட்டால் தெரிவிக்கவும். உடனே நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார். 

அதாவது, ஏ.டி.எம்-ல் தமிழ் நீக்கப்பட்டது தொடர்பான தகவலை என் கவனத்துக்கு கொண்டு வந்தால் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவாகக் கூறியுள்ளார். குழப்பம் வரக் கூடாது என்பதற்காகத்தான் ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரண்டு மொழியிலும் விளக்கம் அளித்திருக்கிறார் போல.

இதன்மூலமாக, நிர்மலா சீதாராமன்  “மத்திய அரசு அப்படி உத்தரவிட்டது தொடர்பான ஆதாரத்தைத் தர வேண்டும்” என்று திருச்சி சிவாவை கேட்கவில்லை, என்பது உறுதியாகிறது.

இதற்கு திருச்சி சிவா, உடனடியாக ஆதாரங்களுடன் பதிலிட்டிருந்தார். இரு வங்கிகளின் சலான்கள் அதில் இணைக்கப்பட்டிருந்தன. அவருடைய பதிலில், “மிக விரைவாக பதில் அளித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததற்கு பாராட்டுக்கள். கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கியின் டிடி செலான், பணம் எடுக்கும் செலானை ஆதாரமாக வைத்துள்ளேன். நீங்கள் ஏற்கனவே தெரிவித்தது போல, நிதித்துறை அமைச்சகம் பிராந்திய மொழிகளை நீக்கும்படி கூறியிருக்காது. அதே நேரத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி தெரியாத மக்கள் பயன்பெறும் வகையில் மாநில மொழிகளை பயன்படுத்தும்படி வங்கிகளை அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன் – திருச்சி சிவா ” என்று கூறியுள்ளார்.

நிர்மலா சீதாராமன் கமெண்ட் செய்ததற்கு பிறகு தி.மு.க-வினர் குடியாத்தத்தில் உள்ள ஏ.டி.எம்-ல் தமிழ் நீக்கப்பட்டது தொடர்பான செய்தி ஆதாரத்தை இணைத்திருந்தனர். மேலும், வங்கி கிளை மேலாளரிடம் புகார் கொடுத்த வீடியோவையும் வெளியிட்டிருந்தனர். இதுவே அமைச்சருக்கான பதிலாக எடுத்துக்கொள்ள முடியும்.

Archived Link

மேலும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே பதில் அளித்திருந்தார் என்பதால், பரோடா வங்கி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. தி.மு.க-வினர் வெளியிட்டிருந்த புகார்களுக்கு கீழே, பரோடா வங்கி கமெண்ட் செய்திருந்தது. அதில், “எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. சம்பந்தப்பட்ட துறைக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தது.

இதன்மூலமாக, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவுக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே நடந்த ட்வீட் பதிவு உரையாடலில் இடம் பெறாத விஷயங்களை சேர்த்து, விஷமத்தனமாக மாற்றி தவறான தகவலை பகிர்ந்து வந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது. 

திருச்சி சிவா ட்வீட் வெளியிட்டதும், அதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்ததும் உண்மை. அவர் கேட்டுக்கொண்டது போல வங்கிகளில் தமிழ் மொழி இல்லாதது தொடர்பான ஆதாரங்களை திருச்சி சிவா வழங்கியதும் உண்மை.

ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்ற கருத்தை அவர்கள் இருவருமே பதிவிடவில்லை. இந்த பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் என்பதால் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ஏ.டி.எம்-களில் பிராந்திய மொழி நீக்கமா? திருச்சி சிவா, நிர்மலா சீதாராமன் பற்றி பரவும் வதந்தி

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading