சவுக்கு சங்கருடன் உணவு அருந்தும் கல்யாணசுந்தரம்- உண்மை என்ன?

அரசியல் | Politics தமிழ்நாடு | Tamilnadu

‘’சவுக்கு சங்கருடன் உணவு அருந்தும் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட துரோகிகள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link 

இதில், தமிழ்த் தேசிய ஆர்வலர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் உணவு அருந்தும் புகைப்படம் ஒன்றை இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’ துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ஒரு இனம் இந்த வரலாறு தொடர்கிறது அதற்கு சான்று இதோ சவுக்கு சங்கருடன் உணவு அருந்தும் ஒரு புகைப்படம்,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், கட்சியின் அடுத்த நிலை பொறுப்புகளில் இருந்த கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி உள்ளிட்டோருக்கும் இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன்காரணமாக, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருவதோடு, கட்சியில் இருந்து வெளியேறுவதாக, கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி அறிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. 

Vikatan News Link I OneIndiaTamil Link

இந்த பிரச்னைக்கு, சமூக ஆர்வலரான சவுக்கு சங்கர் என்பவர்தான் காரணம் என்று, நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் குற்றம்சாட்டப்படுகிறது. இதையொட்டி, நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் சவுக்கு சங்கரை கண்டித்து கருத்து பகிர்வதும் வழக்கமாகியுள்ளது.

இந்நிலையில்தான், மேற்கண்ட புகைப்பட பதிவும் பகிரப்பட்டுள்ளது. ஆனால், இதில் இருப்பவர்களில் ஒருவர் கூட சவுக்கு சங்கர் இல்லை. சவுக்கு சங்கர் பற்றிய அடையாளம் தெரியாமல் இந்த புகைப்பட பதிவு வெளியிடப்பட்டதாக, தோன்றுகிறது.

இதனை கேலி செய்து சவுக்கு சங்கரே அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். 

Savukku Shankar FB Post Archived Link 

மேலும், இதே புகைப்படத்தைச் சிலர் எடிட் செய்து, மீண்டும் சவுக்கு சங்கரை குற்றம் சாட்டி பகிர்வதாக, அவரே மற்றொரு ஃபேஸ்புக் பதிவையும் வெளியிட்டுள்ளார். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Savukku Shankar FB PostArchived Link


இந்த விவகாரம் தொடர்பாக, சவுக்கு சங்கர் நிறைய ஊடகங்களில் கருத்து கூறியிருக்கிறார். அதில் ஒன்றை ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம். 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) நாம் தமிழர் கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டிற்கு சவுக்கு சங்கர்தான் காரணம் என்று அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

2) இதையொட்டி, சவுக்கு சங்கர் யார் என்று தெரியாமலேயே அவருடன் கல்யாணசுந்தரம் ஒன்றாக உணவருந்தினார் எனக் கூறி, தவறான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து வருகின்றனர். 

3) இதில் இருப்பவர்கள் யாரும் சவுக்கு சங்கர் கிடையாது. இதனை அவரே தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தனிநபர் மீதான வன்மம் மற்றும் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த தகவல் பலரால் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சவுக்கு சங்கருடன் உணவு அருந்தும் கல்யாணசுந்தரம்- உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer 

Result: False