ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை கொடுத்ததால் சுவிஸ் மலையில் இந்திய கொடிக்கு மரியாதையா?
இந்தியாவிடமிருந்து கொரோனாவுக்கான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையைப் பெற்றதால் ஆல்ப்ஸ் மலையில் இந்திய கொடியை அலங்கரித்து நன்றி தெரிவித்த சுவிட்சர்லாந்து என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலை மீது இந்திய தேசியக் கொடி ஒளிர்விக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், "இந்தியாவிடமிருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பெற்ற ஸ்விட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள சிகரத்தை மூவர்ணக் கொடியால் அலங்கரித்து நன்றி செலுத்தியது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, K.S. Sivaprakash என்பவர் 2020 ஏப்ரல் 18ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில தினங்களுக்கு முன்பு சுவிஸ் நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையின் மேட்டர்ஹார்ன் மலைச் சிகரத்தில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள், வாக்கியங்கள் ஒளிர்விக்கப்பட்டு வருகின்றன. சுவிஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என பல நாட்டு கொடிகளும் மலை சிகரத்தில் லேசர் ஒளியால் ஒளியூட்டப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவிலோ, இந்தியா கொரோனாவுக்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை சுவிஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ததால் அந்நாட்டில் இந்திய தேசிய கொடி ஒளிர்விக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
சுவிஸ், இந்திய தேசிய கொடி, ஆல்ப்ஸ் மலை, லேசர் ஒளி ஆகிய கீவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு கூகுளில் தேடியபோது இது தொடர்பான செய்திகள் நமக்கு கிடைத்தன. இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியில் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்திய தேசியக் கொடி மேட்டர்ஹார்ன் மாலை சிகரத்தில் ஒளியூட்டப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் Zermatt - Matterhorn இந்த லேசர் ஒளிரூட்டலை மேற்கொண்டது தொடர்பாக ட்வீட்டையும் வெளியிட்டிருந்தனர்.
இதில் Zermatt என்பது என்ன என்று பார்த்தபோது மேட்டர்ஹாரன் மலை சிகரத்தில் உள்ள நகராட்சி என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பல நாட்டு கொடிகளும் ஒளிர்விக்கப்பட்ட செய்தி கிடைத்தது.
அந்த ட்வீட் பதிவில், "எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும் இந்தியர்களுக்கு நம்பிக்கை மற்றும் உறுதியை அளிக்கும் நோக்கத்துடன் சுவிட்சர்லாந்தின் லேண்ட் மார்க்கான மேட்டர்ஹார்னில் இந்திய தேசியக் கொடி" என்று குறிப்பிட்டிருந்தனர். எந்த இடத்திலும் ஹைட்ராக்ஸி மாத்திரை பற்றி குறிப்பிடவில்லை.
இந்த படத்தை சுவிட்சர்லாந்துக்கான இந்திய தூதரகமும் வெளியிட்டிருந்தது. அதை பிரதமர் மோடியும் ரீட்வீட் செய்திருந்தார். எதிலுமே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுவிட்சர்லாந்து அரசு இந்திய கொடியை ஒளிரூட்டியது என்று குறிப்பிடவில்லை.
இந்தியா சுவிட்சர்லாந்துக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை ஏற்றுமதி செய்கிறதா என்று தேடினோம். அப்போது எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து என 55க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதி செய்யப்படவதாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால், சுவிட்சர்லாந்துக்கு அந்த மாத்திரையை ஏற்றுமதி செய்வது தொடர்பாக எந்த தகவலும் இல்லை.
சுவிஸ் நாட்டுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை விநியோகம் செய்வது யார் என்று தேடியபோது, சுவிட்சர்லாந்தில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் உலகின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான Novartis அந்நாட்டுக்கான குளோரோகுயின் மாத்திரையை வழங்குவது தெரியவந்தது. கடந்த மார்ச் 29ம் தேதியே இந்த நிறுவனம் 130 மில்லியன் டோஸ் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வழங்கியதாக தெரியவந்தது.
நம்முடைய ஆய்வில்,
சுவிஸ் நாட்டின் மேட்டர்ஹார்ன் சிகரத்தில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தேசிய கொடி ஒளிர்விக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமை, நம்பிக்கையை வலியுறுத்தி இந்திய தேசியக் கொடி ஒளிர்விக்கப்பட்டதாக இதை மேற்கொண்ட மலைசிகர கிராம நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுவிஸ் நாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனம் அந்நாட்டுக்குத் தேவையான ஹைட்ராக்ஸி குரோரோகுயின் மாத்திரையை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சுவிஸ் நாட்டுக்கு இந்தியா ஹைட்ராக்ஸி குரோரோகுயின் ஏற்றுமதி செய்ததற்காக அந்த நாட்டின் மலைச் சிகரத்தில் இந்திய தேசிய கொடி ஒளிர்விக்கப்பட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை கொடுத்ததால் சுவிஸ் மலையில் இந்திய கொடிக்கு மரியாதையா?
Fact Check By: Chendur PandianResult: False