வள்ளியூர் காவல்நிலையத்தில் இருக்கும் சிறுமி!- ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

சமூக ஊடகம் | Social சமூகம்

படத்தில் இருக்கும் சிறுமி தற்போது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்தில் உள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Akshara Kishor 2.png
Facebook LinkArchived Link

யாரோ ஒருவர் பகிர்ந்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். ஐயப்ப மாலை அணிந்த சிறுமி ஒருவரின் படம் உள்ளது. அதில், “இந்த படத்தில் இருக்கும் சிறுமி தற்போது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல்நிலையத்தில் உள்ளார். உங்களுக்கு உதவும் குணம் இருந்தால் பகிருங்கள். தெரிந்தால் தொடர்புக்கு 04637-220256” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த பதிவை, சுப்பிர மணியன் என்பவர் 2019 டிசம்பர் 9ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காணவில்லை என்ற அறிவிப்புகள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. அதில் பெரும்பாலானவை வதந்திகளாகவே உள்ளன. இதனால் உண்மையான பதிவுகளுக்கு கூட முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது. பதிவில் இடம் பெற்ற எண் வள்ளியூர் காவல்நிலையம் தானா என்பதை அறிய அந்த எண்ணைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசியவர்கள், “சபரிமலைக்கு மாலை போட்ட பெண் படம்தானே சார், அது பொய்யான தகவல் சார். அப்படி ஒரு சம்பவம் வள்ளியூரில் நடக்கவே இல்லை. ஏற்கனவே இது சமூக ஊடகங்களில் பரவியபோது தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீண்டும் எப்படி பரவுகிறது என்று தெரியவில்லை” என்றனர்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது மலையாள மனோரமாவில் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. இந்த சிறுமியின் படத்தைப் பயன்படுத்தி, சபரிமலையில் போலீஸ் தாக்குதலில் காணாமல் போன சிறுமி. தற்போது இந்த சிறுமி திருநெல்வேலி காவல் நிலையத்தில் உள்ளார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருவது பற்றி தெரிவித்திருந்தனர்.

Akshara Kishor 3.png
Search Linkmanoramanews.comArchived Link

இந்த சிறுமி மலையாள சினிமா மற்றும் டி.வி நிகழ்ச்சிகளில் நடிக்கும் அக்‌ஷரா கிஷோர் என்பதும், 2017ம் ஆண்டு நடந்த ஐயப்பா பக்தி பாடல் ஒன்றில் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட படம் என்பதும் தெரிவித்திருந்தனர்.

டி.வி பிரபலம் என்பதால் இவரைப் பற்றி செய்தி ஏதும் உள்ளதா என்று அக்‌ஷரா கிஷோர் என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது இந்த சிறுமிக்கு ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ பக்கம் ஒன்று இருப்பது தெரிந்தது. அதில் சபரிமலைக்கு மாலை போட்டுள்ள படம் உள்ளதா என்று தேடினோம். நம்முடைய தேடலில், 2017ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி இந்த படத்தை சிறுமி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. மேலும் ஐயப்பா பக்தி பாடல் விளம்பரத்திலும் இந்த சிறுமி படம் இருப்பது தெரிந்தது.

Akshara Kishor 4.png
Facebook LinkArchived Link

நம்முடைய ஆய்வில்,

இந்த சிறுமி வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் இருப்பதாக வெளியான தகவல் தவறானது என்று சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையம் மறுத்துள்ளது.

இந்த சிறுமி சின்னத்திரை பிரபலம் என்றும், சிறுமியின் படத்தைப் பயன்படுத்தி தவறான வதந்தி பரப்பப்பட்டு வருவதாக மலையாள மனோரமா செய்தி வெளியிட்டிருப்பதும் நமக்குக் கிடைத்துள்ளது.

சிறுமி தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த படத்தை வெளியிட்டிருப்பது நமக்கு கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “படத்தில் இருக்கும் சிறுமி வள்ளியூர் காவல்நிலையத்தில் உள்ளார்” என்று பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:வள்ளியூர் காவல்நிலையத்தில் இருக்கும் சிறுமி!- ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False