நித்யானந்தாவை கிறிஸ்தவ மதத்தில் சேரும்படி அழைத்தாரா சிஜே ஜெபா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’நித்யானந்தாவை கிறிஸ்தவ மதத்தில் சேர அழைத்த பாதிரியார் சி.ஜே. ஜெபா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

News N

எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த டிசம்பர் 8, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’நித்யானந்த சுவாமி மற்றும் அவருடைய சீடர்கள் இப்போது கிறிஸ்தவத்திற்கு மாறி ஊழியம் செய்தால் அவர் மீது நடத்தப்படும் சட்டரீதியான மற்றும் ஊடக ரீதியான தாக்குதல்கள் நிறுத்தப்படும், பிரபல பாதிரியார் CJ Zeba ஃபேஸ்புக்கில் அறிக்கை,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் குறிப்பிடப்படும் தகவல் உண்மைதானா என்ற சந்தேகத்தில் சிஜே ஜெபாவை தொடர்புகொள்ள முயற்சித்தோம். ஆனால், ஜெய்ப்பூர் பயணத்தில் இருப்பதால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதேசமயம், அவர் இதுதொடர்பாக, ஃபேஸ்புக்கில் விளக்கம் ஒன்றை அளித்திருப்பதாக, தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் (CJ Zeba) சென்று தகவல் தேடினோம். 

இதன்படி, தமிழ்நாடு கிறிஸ்தவ கவுன்சிலின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளதால் சிஜே ஜெபாவை அரசியல் ரீதியாக டார்கெட் செய்யும் வகையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதுபோன்ற வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்து, அதே டிசம்பர் 8ம் தேதியன்று, சிஜே ஜெபா வெளியிட்ட பதிவு ஒன்றின் விவரமும் நமக்கு காண கிடைத்தது.

அதில், ‘’நித்யானந்தாவின் இந்த நிலைக்கு கிறிஸ்தவர்கள்தான் காரணம் என பல இந்து சகோதரர்கள் தகவல் பரப்பி வருகின்றனர். இதில் எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது. நித்யானந்தாவின் வளர்ச்சி பிடிக்காத அவரது சொந்த சமூகத்தினரே பணத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய பிரச்னையை ஏற்படுத்தியுள்ளனர். இதில் சம்பந்தம் இல்லாமல் கிறிஸ்தவர்களை தொடர்புபடுத்தி பேசுவது ஏற்புடையதல்ல,’’ என, சிஜே ஜெபா குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது ஃபேஸ்புக் பதிவின் முழு விவரம் கீழே ஆதாரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது. 

Facebook Claim Link Archived Link 

இந்த அறிக்கையின் கடைசி பத்தியில், ‘’ நித்தியானந்தா செய்த பாவத்தை குறித்து பேசி அவரை புண்படுத்துவது கிறிஸ்தவர்களின் எண்ணம் அல்ல. நித்தியானந்தாவின் மனம் திரும்புதலையே கிறிஸ்தவம் விரும்புகிறது,’’ என்றும் சிஜே ஜெபா குறிப்பிட்டிருக்கிறார்.

Sathiyam TV News LinkArchived Link 

இதனை நம்பி நாமும் முதலில் தவறு என ரேட்டிங் கொடுத்திருந்தோம். ஆனால், தற்போது இதுதொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது. எனவே, எங்களது செய்தியின் ரேட்டிங்கை மாற்றிக் கொள்கிறோம். இதன்படி, சத்தியம் டிவி வெளியிட்ட செய்தி ஒன்றில், குறிப்பிட்ட சிஜே ஜெபா கமெண்ட் பகிர்ந்திருக்கிறார். அதில், நித்யானந்தா கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி அழைப்பு விடுத்திருப்பதைக் காண முடிகிறது.

அதேசமயம், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதைப் போல, ‘நித்யானந்தா கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் அவர் மீது நடத்தப்படும் சட்ட ரீதியான, ஊடக ரீதியான தாக்குதல்கள் நிறுத்தப்படும்,’ என்று சிஜே ஜெபா எங்கேயும் குறிப்பிடவில்லை. 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரிய வந்த உண்மையின் விவரம்,

1) சிஜே ஜெபா, சத்தியம் டிவி வெளியிட்ட செய்தி ஒன்றின் கமெண்ட் பகுதியில் நித்யானந்தா கிறிஸ்தவத்தில் சேர வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறார்.
2) பிறகு அவரே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா விசயத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என பதிவிட்டிருக்கிறார்.
3) இப்படி பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையும் காட்டுவதுபோல இரட்டை வேடமிட்டு, மற்றவர்களை உசுப்பேற்றும் நபர்களால்தான் நாட்டில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதற்கு இந்த சம்பவம் நல்ல உதாரணம்.
4) இந்த சிஜே ஜெபா என்பவர் பற்றி முழு விவரம் தெரியாமல் தவறான ரேட்டிங் தரும் நிலைக்கு நாமும் தள்ளப்பட்டோம். தற்போது அதனை மாற்றிக் கொள்கிறோம். 

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் பகிரப்பட்டுள்ளதாக, நிரூபணமாகிறது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:நித்யானந்தாவை கிறிஸ்தவ மதத்தில் சேரும்படி அழைத்தாரா சிஜே ஜெபா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False