சபரிமலைக்கு மாலை போட்டதால் கழிப்பறை சுத்தம் செய்ய சொன்ன கிறிஸ்தவ பள்ளி?

சமூக ஊடகம் சமூகம்

சபரிமலைக்கு மாலை போட்டதால் பள்ளி கழிவறையை சத்தம் செய்ய கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டதாகவும், அப்போது சிறுவனின் கையில் ஆசிட் பட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

School 2.png
Facebook LinkArchived Link

சிறுவன் ஒருவனின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “மதச்சார்பற்ற திராவிட ஊடகங்கள் இதைப் பற்றி பேசினா முதலாளியிடம் பேமென்ட் கிடைக்காது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே இடையர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வகுமார். இவரது மகன் பிரமோத் பாலா (12). இடையர்காடு கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் டிஎன்டிஏ குட்ஷெப்பர்டு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான்.

கோவிலுக்கு மாலை போட்டதால் பிரமோத் பாலாவை பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன வகுப்பாசிரியர், கழிவறையை சுத்தம் செய்யும்போது, பிரமோத் பாலாவின் இடது கையில் ஆசிட் கொட்டியதில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாணவனை அனுமதித்துள்ளனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவனை பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும்படி கூறிய ஆசிரியர், மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Kulasai Dasara என்ற ஃபேஸ்புக் பக்கம் டிசம்பர் 7ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில தினங்களுக்கு முன்பு தெலங்கானாவில் சபரிமலைக்கு மாலை அணிந்து வந்த மாணவனை சேர்க்க மறுத்த கிறிஸ்தவ பள்ளி பற்றி செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து சபரிமலை மாலை அணிந்த மாணவனை கழிப்பறையை சுத்தம் செய்யும்படி கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம் கூறியதாக பகிரும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அந்த தகவல் உண்மைதானா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது தினமலர் வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. 

அதில், “துாத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே இடையர்காடு கிராமத்தில் நாசரேத் டயோஷிசன் நடத்தும் நல்மேய்ப்பர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு ஏழாம் வகுப்பு மாணவர்களை நேற்று அறிவியல் சோதனை கூடத்தை சுத்தப்படுத்துமாறு ஆசிரியர் கூறியுள்ளார். சுத்தம் செய்தபோது ஆசிட் பாட்டில் தவறி விழுந்து சிதறியதில் பிரமோத் பால், மகராஜன் காயமடைந்தனர்.இருவரும் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விதிகளை மீறி ரசாயன கூடத்தை மாணவர்கள் மூலம் சுத்தம் செய்தது குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது” என்று குறிப்பிட்டிருந்தனர். இதைப் போல தூத்துக்குடியில் இருந்து செயல்படும் உள்ளூர் இணைய ஊடகம் முதல் டைம்ஸ் ஆப் இந்தியா வரை எல்லா ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியாகி இருந்தது.

dinamalar.comArchived Link 1
timesofindia.indiatimes.comArchived Link 2
dtnext.inArchived Link 3
tutyonline.netArchived Link 4

தீவிர வலதுசாரி இணையதளமான கதிர் வெளியிட்ட செய்தியும் கிடைத்தது. அதில், “மாணவனை ஆசிட் பாட்டில் தூக்க சொன்ன ஆசிரியர் – தூத்துக்குடி கிறிஸ்தவ பள்ளியில் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: போலி மதச்சார்பின்மை பேசியவர்களே பேச்சு வருமா” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில் கூட கழிப்பறையை சுத்தம் செய்யச் சொன்னதாக இல்லை. தினமலர் வெளியிட்ட தகவலே இதிலும் இருந்தது. திராவிட ஊடகங்கள்தான் உண்மையை மறைக்கிறது என்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குற்றம்சாட்டியிருந்தனர். தீவிர வலது சாரி இணையதளம் இதை மறைக்க வேண்டியது இல்லையே… அப்படி என்றால் ஃபேஸ்புக் பதிவில் உண்மை இல்லை என்பதையே இந்த செய்தி காட்டியது.

School 3.png
kathir.newsArchived Link

இது தொடர்பாக விவரம் அறிய தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர்கள் ஏரல் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நம்பரைக் கொடுத்து நம்மை பேசச் சொன்னார்கள். அவரிடம் பேசினோம். 

“பள்ளியில் குறிப்பிட்ட அந்த வகுப்பில் படித்த எல்லா மாணவர்களையும் வேதியியல் ஆய்வகத்தை தூய்மைப்படுத்தும்படி கூறியுள்ளனர். இதில், ஒரு மாணவன் அமில பாட்டிலை எடுத்துள்ளான். அது தவறி இன்னொரு மாணவன் கையில் பட்டுள்ளது. இதில் மகாராஜா மற்றும் பிரமோத் பாலா என இரண்டு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே, அந்த சிறுவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளித்துள்ளார்கள். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். 

இந்த விவரம் அறிந்து சாதி, மதம் சார்ந்த சர்ச்சைகளை சிலர் உருவாக்க முயல்கிறார்கள். அது குறித்து எங்களுக்கும் தகவல் கிடைத்துள்ளது. அப்படி எதுவும் இல்லை. வதந்தி பரப்புகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நம்முடைய ஆய்வில், 

சிறுவர்கள் மீது ஆசிட் பட்டது தொடர்பாக முன்னணி இதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது, எதிலும் அவர்கள் கழிப்பறையைச் சுத்தம் செய்ததாக செய்தி இல்லை.

தினமலரில் கூட, ‘அவர்கள் ஆய்வுக் கூடத்தை சுத்தம் செய்யும்போது,’ என்றே குறிப்பிட்டுள்ளனர்.

தீவிர வலதுசாரி இணையதளமான கதிர் இணையதளத்தில் கூட ஆய்வுக்கூடத்தில் ஏற்பட்ட சம்பவம் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

சபரிமலை மாலை போட்டதால் கழிப்பறையை சுத்தம் செய்ய உத்தரவிட்டதாக பரவும் தகவல் தவறானது. ஆய்வுக் கூடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சிறுவர்கள் மீது ஆசிட் பட்ட சம்பவத்தை திருத்தி பொய்யான தகவலை பரப்பி வருவது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சபரிமலைக்கு மாலை போட்டதால் கழிப்பறை சுத்தம் செய்ய சொன்ன கிறிஸ்தவ பள்ளி?

Fact Check By: Chendur Pandian 

Result: False

1 thought on “சபரிமலைக்கு மாலை போட்டதால் கழிப்பறை சுத்தம் செய்ய சொன்ன கிறிஸ்தவ பள்ளி?

Comments are closed.