
கோவை குண்டுவெடிப்புக்கு அப்போது ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க தான் திட்டம் தீட்டியது என்று மு.க.அழகிரி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
தந்தி டி.வி செய்தி ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “கோவையில் குண்டு வைக்கத் திட்டம் தீட்டிக் கொடுத்ததே அப்போதைய ஆளுங்கட்சியான திமுக தான். ஸ்டாலினை இல்லை என்று சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம் – மு.க.அழகிரி” என்ற இருந்தது. இந்த நியூஸ் அட்டைக்குக் கீழ், “கோவை குண்டு வெடிப்புக்குத் திட்டம் தீட்டி கொடுத்(த)தே திமுக தான்” என்று போட்டோஷாப் முறையில் டைப் செய்யப்பட்டு இருந்தது.
இந்த பதிவை, Shekhar Kandan Devendra என்பவர் 2020 ஜனவரி 9ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரபல ஊடகங்கள் நியூஸ் கார்டை பயன்படுத்தி போலியான செய்திகள் பரவுவது அதிகரித்துள்ளது. தி.மு.க பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளிக்கிறது என்று விஷமத்தனமான பிரசாரங்கள் செய்யப்படும் சூழலில், இந்த நியூஸ் கார்டு உண்மையா பொய்யா என்று ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் நடந்தது. குண்டு வெடிப்பு காரணமாக ஏற்பட்ட அதிருப்தியில் தி.மு.க-வுக்கு அந்த தேர்தலில் 9 இடங்கள் மட்டுமே கிடைத்தது. தேர்தல் சமயத்தில் தி.மு.க எதற்கு குண்டு வெடிப்பை நிகழ்த்த வேண்டும், தேர்தல் நேரத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க-வுக்கு எதிர்ப்பாக மாறாதா… இது எல்லாம் தெரியாமலா அவர்கள் இப்படி செய்திருப்பார்கள்… என்று அடிப்படை கேள்விகள் எழுகின்றன. அரசியலுக்குள் செல்லாமல், இந்த நியூஸ் கார்டு, அழகிரி கருத்து உண்மையா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.
இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் பாண்ட் வழக்கமாக தந்தி டி.வி வெளியிடும் நியூஸ் கார்டுடன் ஒத்துப்போகவில்லை. மேலும், தந்தி டிவி ஸ்கிரீன் ஷாட் நியூஸ் கார்டுகளில் மணி செய்தி என்று ஒரு லோகோ இருக்கும். இதில் அது இல்லை. இது எல்லாம் இந்த நியூஸ் கார்டு உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்த்தின.

இதனால், தந்தி டி.வி ஃபேஸ்புக் பக்கம் சென்று அவர்கள் வெளியிட்ட நியூஸ் கார்டுகள், செய்திகளை ஆய்வு செய்தோம். அதில் அழகிரி தொடர்பான எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. இதனால், தந்தி டி.வி ஆன்லைன் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு விசாரித்தோம்.
அப்போது, “இந்த நியூஸ் கார்டு நாங்கள் வெளியிட்டது இல்லை. வழக்கமாக இப்படி நிறைய எங்கள் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி போலியான செய்திகள் பரப்பப்படுகின்றன. அதை நாங்கள் அவ்வப்போது மறுத்து வருகிறோம். இதற்கும் மறுப்பு தெரிவிக்கிறோம்” என்றார்.
நாம் தொலைபேசி மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்த சில நிமிடங்களில் தந்தி டி.வி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நியூஸ்கார்டு போலியானது என்று பதிவிட்டது.
Archived Link | Search Link |
அழகிரி இது தொடர்பாக பேட்டி ஏதும் அளித்துள்ளாரா என்று தேடினோம். நம்முடைய தேடலில் அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில், “கோவையில் குண்டு வைக்கத் திட்டம் தீட்டிக்கொடுத்ததே அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க-தான், ஸ்டாலினை இல்லை என்று சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று அழகிரி கூறினார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கோவை குண்டுவெடிப்புக்கு தி.மு.க திட்டம் தீட்டியது என்று அழகிரி கூறியதாக பரவும் செய்தி உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
