திரௌபதி பட இயக்குனர் மோகன் பற்றி ஏசியாநெட் தமிழ் வெளியிட்ட செய்தி உண்மையா?

சினிமா தமிழகம்

‘’இனி வரும் காலங்களில் திரௌபதி போன்ற படத்தை எடுக்க விரும்பவில்லை என்று கூறிய இயக்குனர் மோகன்,’’ எனும் தலைப்பில் ஏசியாநெட் தமிழ் வெளியிட்டிருந்த ஒரு செய்தி காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 1 Asianet Tamil Link Archived Link 2

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்து பகிர்ந்துள்ளனர்.

அந்த செய்தியை திறந்து படித்தபோது, செய்தியின் உள்ளே, ‘’எதிர்ப்புகளை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளேன் என்று கூறி வந்த இயக்குனர் மோகன், தற்போது கூறியுள்ள அதிரடி கருத்து “திரெளபதி” ஆதரவாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதாவது, தான் வாழ்ந்த பகுதிகளில் நடந்த உண்மை சம்பவங்களை கொண்டே “திரெளபதி” படத்தை எடுத்துள்ளதாகவும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற படங்களை எடுக்க விருப்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தனக்கு சாதிய படத்தை எடுக்க விருப்பமில்லை என்பது போல் மோகன் காட்டிக்கொண்டாலும், “திரெளபதி” படத்திற்கு வந்த கண்டனங்களே அவரை இப்படி யோசிக்கவைத்துவிட்டதாக போராளிகள் பெருமை கூறிவருகின்றனர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

உண்மை அறிவோம்:
கடந்த ஜனவரி 3, 2020 அன்று, திரௌபதி எனும் தமிழ்ப் படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டது. இது வெளியான சில மணிநேரத்திலேயே ஆதரிப்பவர்களைவிட எதிர்த்துப் பலரும் காரசாரமான கருத்துகளை வெளியிட்டதால் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பு நிகழ்ந்தது.

அத்துடன், படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர தொடங்கியது. எதிர்ப்பு எவ்வளவு இருந்தாலும் இந்த படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வேன் என அதன் இயக்குனர் மோகன் உறுதிபட ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் சாதி ரீதியான மோதலுக்கு வழிவகுக்கிறார் என்று பலரும் கண்டனம் தெரிவிப்பது தொடர்கதையாக உள்ளது. 

இத்தகைய பரபரப்பான சூழலில்தான் மேற்கண்ட செய்தியை ஏசியாநெட் தமிழ் இணையதளம் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த செய்திக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து, கமெண்ட் பகிர்ந்ததை காண முடிகிறது. இப்படியான போலி செய்தியை திட்டமிட்டே வெளியிடுவது ஏன் என்றும் வாசகர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதையடுத்து, படத்தின் இயக்குனர் மோகனின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் (Mohan G Kshatriyan) சென்று பார்வையிட்டோம். அவர், ‘’ஏசியாநெட் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்படுவது தவறான தகவல். எனது சொந்த கருத்து அல்ல,’’ எனக் கூறி மறுப்பு தெரிவித்ததைக் காண முடிந்தது. 

Facebook Claim Link Archived Link 

எனவே, சம்பந்தப்பட்ட இயக்குனரின் கருத்தைப் பெறாமலேயே, அவரே இதற்கு நேரடி மறுப்பும் தெரிவித்துள்ளார். இதன்மூலமாக, ஒரு தவறான செய்தியை அவசர கதியில் வெளியிட்டு ஃபேஸ்புக் வாசகர்களை ஏசியாநெட் தமிழ் குழப்பியுள்ளதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:திரௌபதி பட இயக்குனர் மோகன் பற்றி ஏசியாநெட் தமிழ் வெளியிட்ட செய்தி உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •