ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு சொந்த விமானத்தில் சென்றாரா மு.க.ஸ்டாலின்?

அரசியல் | Politics தமிழகம்

‘’ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு சொந்த விமானத்தில் சென்ற மு.க.ஸ்டாலின்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link 

பாரதிய ஜனதா தமிழக ஆதரவாளர்கள் – Tamilnadu BJP Supporters என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சி சார்பாக, ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றுள்ளார். 

இந்த பதவியேற்பு நிகழ்வில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பங்கேற்றார். இதுபற்றிய செய்திகள் பல ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.

TribuneIndia Link Hindustan Times Link 

இந்த சூழலில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியாகியுள்ளது. இதில் குறிப்பிடுவதுபோல உண்மையிலேயே மு.க.ஸ்டாலின் சொந்த விமானத்தில் ஜார்க்கண்ட் சென்றாரா என விவரம் தேடினோம்.

அப்போது, மேற்கண்ட புகைப்படம் கடந்த 2018ம் ஆண்டு சேலம் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட ஒன்று என தெரியவந்தது. 

Twitter Post Link Archived Link 

இதன்படி, 2018ம் ஆண்டு நவம்பரில் தனது உதவியாளர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக, தனது குடும்பத்தினருடன் தனி விமானத்தில் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றிருக்கிறார். அந்த விமானம் சன் குழுமத்திற்குச் சொந்தமானது எனக் கூறி, ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதனை மேற்கோள் காட்டி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை விமர்சனம் செய்திருக்கிறார். அதில் அவர், மு.க.ஸ்டாலினின் சொந்த விமானம் என குறிப்பிட்டதை பலரும் உண்மை என நம்பி இன்றளவும் ஷேர் செய்து வருகிறார்கள். 

இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. 

TopTamilNews Link MK Stalin Twitter Link 

இதுதவிர, மத்திய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தின் அனுமதி பெற்று, தென்னிந்திய அளவில் சொந்தமான விமானம், ஹெலிகாப்டர் வைத்திருப்போர் பற்றிய பட்டியல் விவரத்தை பார்வையிட்டோம். அதில் எங்கேயும் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை. அந்த பட்டியலின் விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

DGCA Approved List

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில், 2018ம் ஆண்டு நவம்பரில் தனது உதவியாளர் வீட்டு திருமண நிகழ்வில் பங்கேற்க, சேலம் சென்றிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படத்தை தற்போதைய நிகழ்வுக்கு ஏற்ப தவறாகச் சித்தரித்து பகிர்ந்துள்ளனர்.
2) அரசியல் செல்வாக்கு மிக்க நபர்கள் தங்களது பெயரில் நேரடியாக எந்த முதலீடும் செய்ய மாட்டார்கள். பினாமி பெயரில்தான் செய்வார்கள்.
3) தனிபர் விமானங்கள் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்குள் சென்றுவர வேண்டுமெனில், மத்திய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெறுவது அவசியமாகும். மு.க.ஸ்டாலின் பெயரில் விமானம்/ஹெலிகாப்டர் எதுவும் மத்திய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் பதிவு செய்யப்படவில்லை.   

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு சொந்த விமானத்தில் சென்றாரா மு.க.ஸ்டாலின்?

Fact Check By: Pankaj Iyer 

Result: False