புதுச்சேரி அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

சமூகம் சர்வதேசம்

புதுச்சேரி காங்கிரஸ் அரசை தரங்கெட்ட ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்ததாகவும், இதனால் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி முறிவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

STALIN 2.png
Facebook LinkArchived Link

புதுச்சேரி நாராயணசாமி படத்தின் அருகில், “யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரிக்கு முதலிடம் – மத்திய அரசின் தரவரிசைப் பட்டியல்” என்று உள்ளது. அதற்கு கீழ், மு.க.ஸ்டாலின் படத்தின் அருகில், “தரங்கெட்ட ஆட்சிக்கு தரத்தில் முதல் இடமா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்” என்று உள்ளது. இவற்றுக்கு கீழ், காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி முறிவு?” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, DMK Fails என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 டிசம்பர் 28ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

புதுச்சேரிக்கு மத்திய அரசு விருது அறிவித்ததை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்  விமர்சித்தது போன்று ஒரு கருத்தை இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். 

தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு நல்லாட்சி வழங்கும் மாநிலங்களுக்கு புள்ளிகள் வழங்கி, அவற்றை வரிசைப் படுத்தி மத்திய அரசு, ஜி.ஜி.ஐ. (குட் கவர்னன்ஸ் இன்டெக்ஸ்) என்ற பெயரில் பட்டியலிட்டுள்ளது. இதை, மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைதீர்ப்புத் துறை மற்றும் நல்ல நிர்வாகத்துக்கான மையம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. இதில் பெரிய மாநிலங்கள் பிரிவில் தமிழகமும் யூனியன் பிரதேசங்கள் பிரிவில் புதுச்சேரியும் முதலிடம் பிடித்தன.

dailythanthi.comArchived Link

இதில் வேளாண்மைப் பிரிவில் தமிழகத்துக்கு 9வது இடமும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவில் 14வது இடமும், சமூக நலன் மற்றும் மேம்பாட்டில் 9வது இடமும், மனிதவள மேம்பாட்டு மற்றும் பொருளாதார மேலாண்மையில் 5வது இடமும், சுற்றுச் சூழலில் 3வது இடமும், பொது சுகாதாரத்தில் 2வது இடமும், நிதிநிர்வாகம் மற்றும் பொதுப் பாதுகாப்பில் முதல் இடமும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. விவசாயம், தொழில், சமூக நீதி என முக்கியமான துறையில் பின்னுக்குத் தள்ளப்பட்ட தமிழகம் எப்படி மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் முதலிடம் பிடிக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூட கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.

அதில் புதுச்சேரி அரசை அவர் விமர்சித்தாரா என்று ஆய்வு செய்தோம். மு.க.ஸ்டாலின் தன்னுடைய அறிக்கைகளை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வெளியிடுவது வழக்கம். அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம். அவருடைய முழு அறிக்கையும் நமக்கு கிடைத்தது. அதில், மு.க.ஸ்டாலின் முழுக்க முழுக்க தமிழக அரசைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டது தெரிந்தது. அவருடைய அறிக்கையில் புதுச்சேரி என்று ஒரு வரி, ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை என்பதும் தெரிந்தது.

Archived Link 1DMK – Dravida Munnetra Kazhagam – FB PageArchived Link 2

தமிழக அரசை விமர்சித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையின் பகுதியை எடுத்து, புதுச்சேரி அரசை பற்றி கூறியதாக வெளியிட்டிருப்பது தெரிந்தது. இதன் அடிப்படையில் இந்த பதிவு உண்மையும் பொய்யும் கலந்து வெளியான பதிவு என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு கொஞ்சம் உண்மையும் பொய்யான தகவலும் சேர்த்து உருவாக்கப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:புதுச்சேரி அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False