மோடியை கிண்டல் செய்த மலையாளம் டி.வி ரியாலிட்டி ஷோ?- ஃபேஸ்புக்கில் பரவும் வீடியோ

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

பிரதமர் மோடி மற்றும் ரூ.500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று வெளியிடப்பட்ட அறிவிப்பைக் கிண்டல் செய்து மலையாளம் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் பாடல் பாடப்பட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Modi 2.png

Facebook Link I Archived Link 1 I Archived Link 2

“இந்த மாதிரி ஒரு பாடல் பாட தமிழ் சேனல் அனுமதிப்பாங்களா… கேரளா கெத்துதான்” என்று குறிப்பிட்டு சூப்பர் சிங்கர் போன்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். தமிழில் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் வரும் பாடல் ஒன்றில் வார்த்தைகளை மாற்றி மோடி மற்றும் ரூ.1000, 500 மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கிண்டல் செய்து பாடுகின்றார் இளைஞர் ஒருவர். 

மொத்தம் 40 விநாடிகள் மட்டுமே இந்த வீடியோ ஓடுகிறது. எந்த டி.வி சேனலில் எப்போது இந்த பாடல் பாடப்பட்டது என்று தகவல் இல்லை. சேனலின் லோகோ மறைக்கப்பட்டு இருந்தது. இந்த வீடியோவை நாட்டுநடப்பு என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஆகஸ்ட் 5ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவை முதலில் ஆய்வு செய்தோம். அவருடைய வாய் அசைப்பும் பாடலின் வரியும் ஒட்டாமல் இருந்தது. இதனால், இந்த பாடல் எடிட் செய்யப்பட்டது என்று தெரிந்தது. இதை உறுதி செய்ய ஆதாரங்கள் கிடைக்கிறதா என்று தேடினோம்.

வீடியோவின் சில காட்சிகளை மட்டும் படமாக மாற்றி, அதை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஆனால் எந்த ஒரு தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை. இதனால், yandex.com ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த இளைஞரின் பெயர் ஶ்ரீஹரி என்றும் இவர் மழவில் மனோரமா என்ற மலையாள டி.வி சேனலில் ‘சூப்பர் ௪’ என்ற நிகழ்ச்சியில் பாடியது தெரிந்தது. அந்த நிகழ்ச்சியில் இவர் பாடிய மாங்குயிலே பாடல் எம்பி3 வடிவில் நமக்கு கிடைத்தது.

Modi 3.png

Search Link 1 I Search Link 2

எனவே, கூகுளில், மழவில் மனோரமா சேனலில் ஒளிபரப்பான ஶ்ரீஹரி மாங்குயிலே பாடல் என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது, யூடியூபில் வெளியான அந்த பாடல் நமக்கு கிடைத்தது. 2018 மார்ச் 27ம் தேதி இந்த வீடியோவை மழவில் மனோரமா சேனல் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தது.

Modi 4.png

Search Link

அந்த பாடலை ஆய்வு செய்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாடகர் குரலுக்கும் மலையாள டி.வி சேனல் பாடலின் குரலுக்கும் வித்தியாசம் இருந்தது. அந்த பாடலில், கரகாட்டக்காரன் படத்தில் வரும் பாடலை அப்படியே ஶ்ரீஹரி பாடினார். எந்த இடத்திலும் அவர் மோடியை பற்றியோ, பண மதிப்பு இழப்பு நடவடிக்கைப் பற்றியோ கிண்டல் செய்து பாடவில்லை.

குறிப்பாக நமக்கு கிடைத்த மலையாள டி.வி சேனல் வீடியோவில் 1.45 நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் வீடியோ பகுதி தொடங்குகிறது. 

யூடியூப் வீடியோவில் சரியாக 1.55வது நிமிடத்தில் பாடலுக்கு பின்னணி பாடகி சுஜாதா தலையாட்டுவார். அதே காட்சி, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் வீடியோவின் 10வது விநாடியில் வருகிறது.

Archived Link

இதன் மூலம், மழவில் மனோரமா தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவை எடுத்து, பின்னணி பாடலை மட்டும் மாற்றி மோடியை கிண்டல் செய்யும் ஆடியோவை சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெரிகிறது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மோடியை கிண்டல் செய்து மலையாள டி.வி சேனலின் ரியலிட்டி ஷோவில் பாடல் பாடப்பட்டது என்ற வீடியோ போலியானது என்று உறுதி செய்யப்படுகிது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மோடியை கிண்டல் செய்த மலையாளம் டி.வி ரியாலிட்டி ஷோ?- ஃபேஸ்புக்கில் பரவும் வீடியோ

Fact Check By: Chendur Pandian 

Result: False

1 thought on “மோடியை கிண்டல் செய்த மலையாளம் டி.வி ரியாலிட்டி ஷோ?- ஃபேஸ்புக்கில் பரவும் வீடியோ

  1. But unmaiya thana editing version la sollirupanga. Athu thappu panravangaluku kindala theriyum ???

Comments are closed.