மதுரை சித்திரை திருவிழாவை தள்ளி வைக்கச் சொன்னாரா எச்.ராஜா?

அரசியல் சமூக வலைதளம்

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மதுரை சித்திரை திருவிழாவை தள்ளிவைக்கச் சொன்னதாகக் கூறி, அவரது புகைப்படத்துடன் வெளியான பதிவு ஒன்றை, ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவை சுமார் 4,400க்கும் அதிகமானோர் உண்மை பற்றி யோசிக்காமல் பகிர்ந்துள்ளனர். எனினும், இந்த பதிவை பார்க்கும்போதே சித்தரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என தோன்றியதால், இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம்.

வதந்தியின் விவரம்:

இந்த நாயை என்ன பண்ணலாம்?

Archive Link

இந்த நாயை என்ன பண்ணலாம்? என தலைப்பிட்டு, ‘’மதுரையில் தேர்தலை தள்ளிவைக்கத் தேவையில்லை, சித்திரை திருவிழாவை தள்ளி வைக்கலாம். அல்லது திருவிழாவுக்கு, இந்த வருடம் தடைவிதிக்கலாம். ஒரு வருடம் ஆற்றில் அழகர் இறங்கவில்லை என்றால், மதுரை ஒன்றும் அழிந்துவிடாது,’’ என்று பதிவு எழுதி, அதனுடன் எச்.ராஜாவின் புகைப்படத்தையும் சேர்த்து, ‘எச்.ஐ.வி.ராஜா – பாஜக வேட்பாளர்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சையான கருத்துகளை வெளியிடுவதும், அதற்கு அரசியல் கட்சியினரும், சமூக வலைதள பயன்பாட்டாளர்களும் விமர்சனம் முன்வைப்பதும் வழக்கமான ஒன்றுதான். சமீபத்தில் கூட சென்னை உயர்நீதிமன்றம் பற்றி தவறான கருத்தை முன்வைத்து, அவர் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். பின்னர், இதுபற்றி அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, விளக்கம் அளித்ததும் பல தரப்பிலும் விவாதிக்கப்பட்ட சம்பவமாக அமைந்தது. இதுபற்றிய செய்தி விவரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இதுபோலவே, சித்திரை திருவிழா பற்றியும், எச்.ராஜா, சர்ச்சைக்குரிய வகையில், பேசியுள்ளாரா என்ற சந்தேகம் நமக்கு எழுந்தது. இதுபற்றி கூகுளில் தேடி பார்த்தோம். அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், சித்திரை திருவிழாவையும், சிபிஎம் கட்சி உறுப்பினரான எழுத்தாளர் வெங்கடேசனையும் இணைத்து, சில வார்த்தைகள் கூடுதலாக, கிடைத்தன. இதன்பேரில், வெங்கடேசன் பற்றியும் தேடினோம்.

அப்போது, சமீபத்தில் எழுந்த ஒரு சர்ச்சையின் விவரம் கிடைத்தது. அதாவது, மதுரை நாடாளுமன்ற தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, போட்டியிடும் சு.வெங்கடேசன், சித்திரை திருவிழாவை தள்ளிவைக்க வேண்டும், ஒரு வருடம் அழகர் வைகை ஆற்றில் இறங்காவிட்டால் மதுரை ஒன்றும் அழிந்துவிடாது என்று கூறியதாக, ஃபேஸ்புக்கில், #PingChandru என்பவர் பதிவிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி, குறிப்பிட்ட நபர் மீது போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார்.  

இதுபற்றி ஏற்கனவே நாம் ஒரு உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளோம். அதில், சு.வெங்கடேசனின் மறுப்பு, போலீஸ் புகாரின் நகல் ஆகிய ஆதாரங்களை சேர்த்து, விரிவாக ஆராய்ந்து, இது ஒரு வதந்திதான் என நிரூபித்துள்ளோம். அந்த செய்தியை படிக்க விரும்பினால், இங்கே கிளிக் செய்யவும்.   

சு.வெங்கடேசன் பற்றிய வதந்தி பதிவுடன், எச்.ராஜா பற்றி வெளியான வதந்தியையும் ஒப்பிட்டு பார்த்தோம். அதில், 2 பதிவுகளுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை தெரியவந்தது. ஆம். #PingChandru பதிவிட்ட அதே பதிவை எடுத்து, குறிப்பிட்ட இடத்தில், சு.வெங்கடேசனின் புகைப்படத்தை நீக்கிவிட்டு, எச்.ராஜாவின்  புகைப்படத்தைச் சேர்த்து, எழுத்து மாறாமல் அப்படியே பகிர்ந்துள்ளனர். ஆதார புகைப்படங்களை கீழே பார்க்கவும்.

இவ்விரு பதிவுகளையும் உற்று கவனித்தால், அதில் உள்ள ஒற்றுமை விளங்கும். சு.வெங்கடேஷ் சொல்லியதாகக் கூறி எழுதப்பட்டுள்ள வார்த்தைகளில், ‘மதுரை ஒன்றும் அழிந்துவிடாது,’ என்பதற்கு பதிலாக, மதுரை ஒன்று அழிந்துவிடாது என #PinkChandru எழுத்துப் பிழையுடன் எழுதியுள்ளார். அதனை அப்படியே மாறாமல், நாம் குறிப்பிடும் நபரும் காப்பி அடித்துள்ளார். ஆனால், புகைப்படம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது.

இது தவிர, எச்.ராஜா என்பதற்கு, எச்.ஐ.வி.ராஜா என பெயர் எழுதப்பட்டுள்ளது. இதன்மூலமாக, குறிப்பிட்ட நபர் எச்.ராஜா மீது தனிப்பட்ட வன்மம் உள்ளவர் என உறுதியாகிறது. உடனே, Jeawul Megrus என்ற அந்த நபரின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு சென்று பார்த்தோம். அதில், அவர் எஸ்டிபிஐ என்ற இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியின் ஆதரவாளர் என்பது தெரியவந்தது. குறிப்பிட்ட நபர் பகிரும் கருத்துகள் அனைத்தும், பாஜக, அஇஅதிமுக, இந்துத்துவ எதிர்ப்பு சார்ந்தவையாகவே உள்ளன. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) எச்.ராஜா அல்லது சு.வெங்கடேசன் என யாருமே இத்தகைய கருத்தை தெரிவிக்கவில்லை.
2) சு.வெங்கடேசன் பற்றி ஒரு நபர் தவறாகச் சித்தரித்து வெளியிட்ட பதிவை அப்படியே காப்பி அடித்து, பாஜக., கூட்டணி கட்சிகளுக்கு பதிலடி தரும் வகையில், எச்.ராஜாவின் புகைப்படத்தை சேர்த்து, இந்த பதிவை வெளியிட்டுள்ளனர்.
3) இந்த பதிவை வெளியிட்டவர் பாஜக எதிர்ப்பாளர் என்றும், எஸ்டிபிஐ கட்சியின் ஆதரவாளர் என்றும் உறுதியாகிறது.
4) நாடாளுமன்ற தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் தவறான கருத்துகளை மாறி மாறி பகிர்வது வழக்கமாக உள்ளது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், இந்த பதிவு சித்தரிக்கப்பட்டது; தவறானது என உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  

Avatar

Title:மதுரை சித்திரை திருவிழாவை தள்ளி வைக்கச் சொன்னாரா எச்.ராஜா?

Fact Check By: Parthiban S 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •