
பெண் ஒருவரின் மார்பின் மீது போப் பிரான்சிஸ் முத்தமிடுவது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பெண் ஒருவரின் மார்பின் மீது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் முத்தமிடுவது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “போப்பாண்டவர் பாவமன்னிப்பு கொடுக்கும் போது கிளிக்கியது. பெரிய பாவமன்னிப்பா இருக்குமோ..” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, 2019 ஜூன் 30ம் தேதி BJP Veppanapalli Constituency பாஜக வேப்பணபள்ளி சட்டமன்ற தொகுதி ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இது உண்மை என்று கருதி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
படத்தைப் பார்க்கும்போதே மார்ஃபிங் செய்யப்பட்டது என்பது தெரிந்தது. அதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொண்டோம். இந்த பதிவுக்கு பலரும் கமெண்ட் செய்திருந்தனர். அதில் ஒருவர், தி.மு.க எம்.பி கனிமொழியை இயேசுவின் தாய் மரியாவைப் போல மார்ஃபிங் செய்து வெளியிட்டிருந்தார். பலரும் இது போலியான பதிவு என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஒருவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு படத்தில் இருக்கும் காட்சியின் உண்மைப் படத்தை வெளியிட்டிருந்தார். ஆனாலும், பதிவு நீக்கப்படவில்லை. அவதூறு பிரசாரம் செய்யும் நோக்கிலேயே பதிவிடப்பட்டிருப்பது தெரிந்தது.
படத்தை yandex.com பதிவேற்றித் தேடினோம். அப்போது அந்த பெண்ணின் உண்மையான புகைப்படம் மற்றும் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் பற்றிய உண்மை கண்டறியும் ஆய்வுகள் நமக்குக் கிடைத்தன.

2015ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி மிரர் என்ற ஆங்கில செய்தி இணையதளம் வெளியிட்ட செய்தி நமக்குக் கிடைத்தது. அதில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவின் படம் கிடைத்தது. ஆனால், அதில் போப் பிரான்சிஸ் இல்லை.
அந்த செய்தியில், “பராகுவே நாட்டிற்கு போப் பிரான்சிஸ் வருகை தந்தார். சாலையில் அவரை வரவேற்க மக்கள் திரண்டிருந்தனர். அப்போது, உள்ளாடை அணியாத கவர்ச்சி மாடல் ஒருவரும் அங்கு வந்தார். அவர் போப் பிரான்சிஸை சந்திக்கப் போவதாக கூறியிருந்தார்.
அவரைக் கண்ட மக்கள் அந்த பெண்ணை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த பெண் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட்டு வருவதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். விமானத்தில் விமானி அறைக்குச் சென்று விமானம் ஓட்டுவது போலச் செயல்பட்டுள்ளார். இதற்குக் கண்டனம் எழவே, அடிமனதில் இருந்து மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், தன்னுடைய அங்கங்களை போட்டோஷாப் செய்து வெளியிட்டு கண்டனத்துக்கும் ஆளாகி இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த செய்தி மற்றும் படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
போப் பிரான்சிஸை இந்த பெண் சந்தித்ததாக எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் இந்த படம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்து வெளியான ஆய்வுக் கட்டுரை நமக்கு கிடைத்தது. அதில், போப் வருகையின்போது உள்ளாடை அணியாத பெண்ணுக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்ற செய்தியின் படத்தை எடுத்து, போப் பிரான்சிஸ் குழந்தைகளுக்கு முத்தமிடும் படத்தை எடுத்து ஒன்று சேர்த்து போட்டோ ஷாப் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
போப் பிரான்சிஸ் முத்தமிடுவது போன்று படம் ஏதாவது உள்ளதா என்று தேடினோம். குழந்தைகளுக்கு அவர் முத்தம் கொடுக்கும் ஆயிரக் கணக்கான படங்கள் நமக்கு கிடைத்தன. அவற்றில் இருந்து மிகச் சரியான படம் எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ஆயிரக்கணக்கான படங்களில் சில மேற்கண்ட ஃபேஸ்புக் படத்தில் உள்ள படத்துடன் ஒத்துப்போயின.

நம்முடைய தேடலில், மலையாளம் ஃபேக்ட் கிரஸண்டோ (www.malayalam.factcrescendo.com) இந்த படம் தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தி இந்த படம் போலியானது என்று உறுதி செய்த தகவலும் நமக்கு கிடைத்தது. அந்த செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நம்முடைய ஆய்வில்,
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் மார்பிஃங் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
பராகுவே நாட்டிற்கு போப் பிரான்சிஸ் சென்றபோது, உள்ளாடை அணியாமல் வந்த பெண் வெளியேற்றம் என்ற செய்தியில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள பெண்ணின் படம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் குழந்தைகளுக்கு முத்தமிடும் படம் நமக்கு கிடைத்துள்ளது.
இந்த படம் போலியானது என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாள பிரிவு உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தியுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பெண்ணின் மார்பில் போப் பிரான்சிஸ் முத்தமிடுவது போன்ற புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“பெண்ணின் மார்பகத்தில் முத்தமிட்ட போப் பிரான்சிஸ்!” – வைரல் போட்டோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
