திருப்பத்தூர் டவுனில் நள்ளிரவில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்! – ஃபேஸ்புக் வதந்தி

Coronavirus சமூக ஊடகம் | Social சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

திருப்பத்தூரில் நள்ளிரவில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் சாலைகளில் ஒன்று கூடி தொழுகை நடத்துவதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் டவுனில், ஜூம்மா மசூதி தெருவில் கடந்த இரண்டு நாட்களாக, நள்ளிரவு 1 மணிக்கு நடு ரோட்டிலேயே சுமார் 700நபர்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் உயரதிகாரிகளின் உத்திரவிற்கு கட்டுப்பட்டு, அவர்களுக்கு எந்த தொந்திரவும்!!!? மற்றும் அங்கு இரவு பணியில் இருக்கும் காவலர்கள் எவரும் தமது தொலைபேசியில் புகைப்படமோ அல்லது வீடியோவை எடுக்கக்கூடாது!?? என்ற உயர் அதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு கையை பிசைந்து நிற்கின்றனர்.. சம்மந்தப்பட்ட காவல்துறையை சேர்ந்த நண்பர் ஒருவரின் மனக்குமுறல்..” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை, Bjp Coimbatore Thondamuthur Assembly என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மே 1 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வேலூர் மாவட்டத்திலிருந்து சமீபத்தில் பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் நள்ளிரவில் கூட்டுத் தொழுகை செய்வதாக கூறப்பட்டுள்ளது. புகைப்படம் ஸ்டாக் போட்டோ என்பதை மறைத்து வெளியிட்டுள்ளனர். ஆனாலும் ஆங்காங்கே அதன் வாட்டர்மார்க் தெளிவாகவே தெரிகிறது. இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். alamy ஸ்டாக் போட்டோ நமக்கு கிடைத்தது. இந்த புகைப்படம் 2018ம் ஆண்டு மே 17ம் தேதி அலகாபாத்தில் (பிரயக்ராஜ்) எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

alamy.comArchived Link

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், இஸ்லாமியர்கள் கூடுவதை யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று மேலிடம் உத்தரவிட்டதால் போலீசார் கையை பிசைந்து நிற்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தனர். எனவே, இதை ஒரு கோப்புப் படமாக பயன்படுத்தியிருக்கலாம்.

நள்ளிரவில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி தொழுகை செய்வதை போலீசார்தான் எடுக்க முடியவில்லை என்றால், மற்ற மக்கள் எடுக்க முடியாமலே போய்விடும், ஊடகங்கள் இதைப் பற்றி செய்தி வெளியிடாமல் இருப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக செய்தி ஏதும் உள்ளதா என்று தேடினோம். ஆனால், தினமலர் உள்ளிட்ட எந்த ஒரு ஊடகத்திலும் அப்படி எந்த ஒரு செய்தி வெளியாகவில்லை.

Search Link

இதுதொடர்பாக, திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரெண்ட் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர்கள் இது தொடர்பாக எங்கள் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம அளித்துள்ளோம். இது தவறான தகவல். அப்படி ஒரு சம்பவம் திருப்பத்தூரில் நடைபெறவில்லை என்றனர்.

அவர்கள் ட்விட்டர் பக்கத்தை தேடிப் பார்த்தபோது அந்த பதிவு கிடைத்தது. அதில், “இந்த புகைப்படம் அலகாபாத்தில் எடுக்கப்பட்டது. பொய்யாக திருப்பத்தூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது என்று பகிர்ந்து வருகின்றனர். இந்த வதந்தியைப் பரப்பியவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பொய்யான செய்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

Archived Link

நம்முடைய ஆய்வில்,

இந்த புகைப்படம் உ.பி-யில் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் திருப்பத்தூரில் நள்ளிரவில் தொழுகை நடத்துவதாக பரவும் தகவல் தவறானது என்று மாவட்ட போலீஸ் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வதந்தியை ட்விட்டரில் பரப்பியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், திருப்பத்தூரில் நள்ளிரவில் இஸ்லாமியர்கள் சாலையில் திரண்டு தொழுகை நடத்துவதாக பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:திருப்பத்தூர் டவுனில் நள்ளிரவில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்! – ஃபேஸ்புக் வதந்தி

Fact Check By: Chendur Pandian 

Result: False