
‘’3 நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால் சுங்கச்சாவடி கட்டணம் கிடையாது,’’ என்று கூறி கடந்த சில ஆண்டுகளாகவே பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் பகிரப்பட்ட பதிவை மெமரீஸ் முறையில் ஜூலை 19, 2020 அன்று மறுபகிர்வு செய்துள்ளனர். இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார்.
எனவே, இந்த செய்தி எப்படி பரவியது என பார்ப்பதற்காக, ஃபேஸ்புக்கில் தகவல் தேடினோம். அப்போது, இதுபற்றி தினமலர் ஊடகம் செய்தி வெளியிட்ட விவரம் கிடைத்தது.

உண்மை அறிவோம்:
கடந்த 2010ம் ஆண்டு முதலே இந்த தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், 2017ம் ஆண்டில், இதுதொடர்பாக, பஞ்சாப் வழக்கறிஞர் ஒருவர் RTI-ன் கீழ் விளக்கம் கேட்டதாகவும், அதன் பேரில் பதில் அளித்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால், சுங்கக் கட்டணம் தேவையில்லை எனக் கூறியிருந்தது.
இதனை பல்வேறு ஊடகங்களும் இந்திய அளவில் இந்த விதிமுறை செல்லும் என்று கூறி செய்தி வெளியிட தொடங்கின. அதுதான் மேலே உள்ள தினமலர் செய்தி லிங்கில் கூறியுள்ள தகவலும்.
ஆனால், இந்த தகவல் பற்றி பல குழப்பம் பரவ தொடங்கியுள்ளதால், பின்னர் ஊடகங்கள் தாங்கள் வெளியிட்ட செய்தியை திருத்தம் செய்தன. இந்த விதிமுறை பஞ்சாப் மாநிலத்திற்கு உள்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று, அதில் கூறப்பட்டதுதான் சாராம்சம்.

மேலும், இதுதொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் விளக்கம் அளித்திருக்கிறது.

இதுவரை நாம் செய்த ஆய்வின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) பஞ்சாப் மாநிலத்திற்கு உள்பட்ட நெடுஞ்சாலைகளில்தான் 3 நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால் சுங்கக் கட்டணம் செலுத்த தேவையில்லை எனக் கூறப்பட்டிருந்தது.
2) அதனை இந்தியா முழுவதற்கும் பொருந்தும் என்பது போல ஊடகங்கள் செய்தி வெளியிட, அதனை மற்றவர்களும் உண்மை என நம்பி தகவல் பகிர்ந்து வருகிறார்கள். இந்த விசயம் பரபரப்பானதாக மாறியதால், 2017ம் ஆண்டே இதுபற்றி NHAI விளக்கம் அளித்து, சர்ச்சையை முடித்து வைத்துவிட்டது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி இது தவறான தகவல் என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மூன்று நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால் சுங்கச் சாவடி கட்டணம் கிடையாதா?
Fact Check By: Pankaj IyerResult: False
