ஆட்டோ ஓட்டும் பிரதமர் மோடியின் சகோதரர்– ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்!

அரசியல் சமூக ஊடகம்

மோடியின் சகோதரர் ஆட்டோ ஓட்டுகிறார், தன்னுடைய குடும்பத்தினருக்குக் கூட சலுகை காட்டாத இந்தியப் பிரதமர் என்று தலைப்பிட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

MODI 2.png

Facebook Link I Archived Link 

செய்தித்தாளில் வெளியான ஒரு செய்தியைப் புகைப்பட வடிவில் பகிர்ந்துள்ளனர். அதில், பிரதமர் நரேந்திர மோடி போன்று உள்ள ஒருவர் ஆட்டோ ஓட்டுவது போன்ற படம் உள்ளது. அந்த செய்தியில், “குடும்பத்தினருக்குச் சலுகை காட்டாத இந்தியப் பிரதமர் மோடி” என்று தலைப்பிட்டு துணுக்கு செய்தி வெளியிட்டுள்ளனர்.

செய்தியில், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூத்த சகோதரர் இன்னும் ஓர் ஆட்டோ ஓட்டுநராகக் காலத்தைக் கடத்தி வருகிறார். அவர் தமது தம்பியின் பதவியைப் பயன்படுத்தி தமது வாழ்க்கையை வளப்படுத்த நினைத்ததில்லை.

அதேபோன்று, பிரதமர் மோடியும் தனது சகோதரரின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல், அவருக்குச் சலுகை எதனையும் காட்டுவதில்லை.

குடும்பத்தினருக்குச் சலுகை காட்டாத நரேந்திர மோடியைப் பிரதமராக பெற்ற இந்தியா பெருமைப்பட வேண்டும். மோடிக்குத் தலை வணங்குகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. 2019 ஏப்ரல் 16ம் தேதி Hindu Munnani Jaikarthick என்பவர் இதைப் பகிர்ந்துள்ளார்.

உண்மை அறிவோம்:பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் ஆட்டோ ஓட்டுவதாக ஒரு புகைப்படம் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையானது தானா என்று ஆய்வு செய்தோம். முதலில், நரேந்திர மோடியின் சகோதரர்கள் யார் யார் என்று ஆய்வு செய்தோம். மோடியுடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஐந்து பேர் (நரேந்திர மோடியோடு சேர்த்து ஆறு பேர்) என்று தெரிந்தது. 

MODI 3.png

தன்னுடைய சகோதரர்களுடன் நரேந்திர மோடி இருக்கும் படம் ஏதும் உள்ளதா என்று கூகுள் இமேஜில் தேடினோம். அப்போது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பயன்டுத்தப்பட்ட புகைப்படம் நமக்குக் கிடைத்தது. அந்த புகைப்படம், செய்தியைப் படித்தபோது, அது மோடியின் சகோதரர் இல்லை என்று தெரிந்தது.

ஆட்டோ ஓட்டும் நபரின் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த நபர் பற்றிய உண்மை விவரம் நமக்குக் கிடைத்தது. இந்த படம் தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ (www.factcrescendo.com) உள்ளிட்ட பலரும் உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தியது தெரிந்தது.

ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் (english.factcrescendo.com) வெளியான ஆய்வை படித்துப் பார்த்தோம். அதில், ஆட்டோ ஒட்டும் நபரின் படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது கிடைத்த ஒரு செய்தியை பகிர்ந்திருந்தனர். www.fourth.in என்ற இணையதளம் 2016ம் ஆண்டு பிரதமர் போலத் தோற்றம் அளிக்கும் ஆட்டோ டிரைவர் என்று ஓர் செய்தியை வெளியிட்டிருந்தது.

அந்த செய்தியைப் படித்துப் பார்த்தோம். அதில், தெலங்கானா மாநிலம் அடிலாபாத் நகரில் பிரதமர் நரேந்திர மோடி போன்று உருவ ஒற்றுமை கொண்ட ஒருவர் ஆட்டோ ஓட்டி வருவதாகப் புகைப்படத்துடன் கூடிய செய்தியை வெளியிட்டுள்ளனர். இதனால் அடிலாபாத் நகரில் இவர் மிகவும் பிரபலமான நபராக மாறிவிட்டார் என்றும், பலரும் இவருடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அந்த நபர் யார், அவரைப் பற்றி வேறு ஏதேனும் தகவல் உள்ளதா என்று கூகுள் செய்தோம். அப்போது மற்றொரு செய்தி கிடைத்தது. அதில், இந்த நபர் பெயர் ஷேக் அயூப் என்பது தெரிந்தது. இவர் மாநில போக்குவரத்துத் துறையில் பணியாற்றியபோது பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் அதனால் ஆட்டோ ஓட்டி வருவதும் தெரிந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேலும், அடிலாபாத்தில் டூப்ளிகேட் மோடி என்று ஒரு செய்தி வீடியோவும் கிடைத்தது. அந்த வீடியோ கீழே…

Archived Link

இதன் மூலம், படத்தில் இருப்பவர் நரேந்திர மோடியின் சகோதரர் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

நரேந்திர மோடியின் சகோதரர்கள் என்ன செய்து வருகிறார்கள் என்று ஆய்வு மேற்கொண்டோம். இந்தியா டுடே வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில், மூத்த அண்ணன் சோம்பாய் குஜராத் மாநிலம் வாத்நகரில் முதியவர்களுக்கான இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். இரண்டாவது அண்ணன் அம்ருத்பாய் ஒரு நிறுவனத்தில் ஃபிட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். மூன்றாவதாகப் பிறந்தவர் மோடி.

முதல் தம்பி ப்ரஹல்லாத் பாய் நியாய விலை (மளிகை) கடை ஒன்றை நடத்திவருகிறார். குஜராத் மாநில நியாய விலைக் கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவராக இருக்கிறார்.

நரேந்திர மோடியின் சகோதரி வசந்தி பென் குஜராத்தில் வசித்து வருகிறார். கடைசி தம்பி பங்கஜ் பாய் உடன் தான் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் வசித்துவருகிறார். இவர் செய்தி தகவல் துறையில் கிளர்க் ஆக பணியாற்றி வருகிறார். இவர்களில் யாரும் ஆட்டோ ஓட்டவில்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நரேந்திர மோடியின் சகோதரர் ஆட்டோ ஒட்டுகிறார் என்ற செய்தி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஆட்டோ ஓட்டும் பிரதமர் மோடியின் சகோதரர்– ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •