
1962ம் ஆண்டு சீனப் போர் நடந்த போது நடன மங்கையர்களுடன் அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு இருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மேடை நாடக பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் நேரு நிற்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேரு மாமா 1962ல் சீனாவுடன் போர் ஏற்பட்ட போது ஜட்டி போட்ட உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டபோது எடுத்த போட்டோ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Raju Kumaraswamy என்பவர் ஜூன் 21, 2020 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிரிழந்த தலைவர்களைப் பற்றிய தவறான பதிவுகளை சமூக ஊடகங்களில் பரப்பி அவர்கள் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்த கடும் முயற்சி நடந்து வருகிறது. குறிப்பாக தேசத் தந்தை மகாத்மா காந்தி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி பற்றி பல்வேறு தவறான கதைகள் புனையப்பட்டு சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட கட்சியினரால் பகிரப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, ஜவஹர்லால் நேரு பெண் பித்தர் போல காட்ட பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவர் மறைந்து பல ஆண்டுகள் கழித்து புதிது புதிதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய அளவில் அவை வைரல் ஆனதைத் தொடர்ந்து நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் அது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டு கட்டுரை வெளியிடப்பட்டது.
எட்வினாவுடன் ஜவஹர்லால் நேரு நெருக்கமாக இருக்கும் படம் உண்மையா? |
பெண்ணுடன் நடனமாடிய மகாத்மா காந்தி புகைப்படம்… உண்மையா? |
நேருவை கன்னத்தில் அறைந்த வித்யானந்த் விதேவ்- ஃபேஸ்புக் பதிவு உண்மையா? |
தற்போது 1962 சீன போர் நடந்துகொண்டிருந்த போது சர்க்கஸ் நடன மங்கைகளுடன் நேரு நேரத்தை போக்கிக்கொண்டிருந்தார் என்று பதிவிட்டுள்ளனர். புகைப்படத்தைப் பார்க்கும்போதே, எடிட் செய்து நேருவை அந்த படத்தில் சேர்த்தது போல உள்ளது. அதை உறுதி செய்ய அசல் படத்தை தேடினோம்.
ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது 1920ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் தெரியவந்தது. 1920 முதல் 1960 வரை நடத்தப்பட்டுவந்த பிரபல மேடை நாடகமாக கோரஸ் லைன் என்ற நாடகத்தில் பங்கேற்ற பெண்களின் மேடைக்கு பின்புற படங்கள் என்று இந்த படத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு இணையதளம் ஒன்று வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அந்த படங்கள் மிகத் தெளிவாக இருந்தன.

குறிப்பாக நேரு நிற்பது போல ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட இடத்தில் உள்ள பெண்ணின் தலைப் பகுதியில் உள்ள தொப்பி போன்ற அலங்காரம் அரைகுறையாக அழிக்கப்பட்டு இருப்பதைக் காண முடிகிறது. இதன் மூலம் பெண்களுடன் நேரு இருக்கும் இந்த புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சீனப் போரின் போது நடன பெண்களுடன் நேரம் செலவிட்ட நேரு?- போலி புகைப்படம்!
Fact Check By: Chendur PandianResult: False
