
“கனிமொழி வீடியோ வெளியானது. உச்சகட்ட அவமானத்தில் தி.மு.க. என்ன ஒரு அசிங்கம்” என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 1 | News Link | Archived Link 2 |
தி.மு.க எம்.பி-க்கள் அ.ராசா, கனிமொழி புகைப்படத்தை சேர்த்து செய்தி பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. அதில், “கனிமொழி வீடியோ வெளியானது. உச்சக்கட்ட அவமானத்தில் தி.மு.க. என்ன ஒரு அசிங்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை tnnews24.com என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை இந்துசேனை என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் SK S Sabarinathan என்பவர் 2019 நவம்பர் 8ம் தேதி வெளியிட்டுள்ளார்.
உண்மை அறிவோம்:
தி.மு.க எம்.பி-க்கள் கனிமொழி, அ.ராசா படத்துடன் வீடியோ வெளியானது, அவமானத்தில் தி.மு.க என்று தலைப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்ன வீடியோ வெளியானது என்று குறிப்பிடுகிறார்கள் என்று லிங்கை கிளிக் செய்து பார்த்தோம். அப்போது, 2019 ஜூன் 8ம் தேதி வெளியான செய்தி ஓப்பன் ஆனது. ஆனால், அதில் ஃபேஸ்புக்கில் இருந்தது போன்ற தலைப்பு இல்லை. “கனிமொழி ஆடியோ வெளியானது! உச்சக்கட்ட குழப்பம்!” என்று இருந்தது. சரி என்ன ஆடியோ வெளியானது என்று தொடர்ந்து படித்துப் பார்த்தோம்.

அதில், “தி.மு.க எம்.பி கனிமொழி தனது 2ஜி வழக்கு குறித்து காவல்துறை அதிகாரி சேட்டுடன் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. இதனை சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ளார். அவர்கள் இருவரும் பேசும் ஆடியோ முழுவதும் அரசியலை தாண்டி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ வெளியானதில் இருந்து தூத்துக்குடி மற்றும் நீலகிரி தொகுதிகளில் இடைத்தேர்தல் உறுதியாகியுள்ளது என ஆளுங்கட்சி வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன. இந்த முழு ஆடியோ 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

2014ம் ஆண்டு வெளியான ஆடியோ என்று செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், புதிய வீடியோ அல்லது ஆடியோ வெளியாகி உள்ளது தலைப்பில் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் செய்தியில், இந்த ஆடியோ வெளியானதால் தூத்துக்குடி மற்றும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் உறுதியாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இப்படி முழுக்க முழுக்க குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது.
தொடர்ந்து அந்த இணையதளத்தைப் பார்த்தபோது இதே செய்தியை தலைப்பை மாற்றி, செய்தியில் ஒரு புள்ளி கூட மாற்றாமல் 2019 நவம்பர் 9ம் தேதி வெளியாகி உள்ளது.

Article Link | Archived Link |
செய்தியை வெளியிட்ட tnnews24.com-ன் உள்நோக்கம் பற்றி நாம் ஆய்வு மேற்கொள்ளவில்லை. 2014ம் ஆண்டு வெளியான ஆடியோவை, இப்போது வெளியானது போல செய்தி வெளியிட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
ஃபேஸ்புக் தலைப்பில் உள்ளது போல், கனிமொழி வீடியோ வெளியானது, உச்சகட்ட அவமானத்தில் தி.மு.க என்று தவறான தலைப்பு வெளியிட்டுள்ளதோடு, பழைய செய்தியை புதிதுபோல வெளியிட்டு, வாசகர்களை குழப்பியுள்ளனர் என்றும் உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கனிமொழி வீடியோ வெளியானதா? ஃபேஸ்புக்கில் பரபரப்பை ஏற்படுத்திய பதிவு!
Fact Check By: Chendur PandianResult:Partly False
