
“பல தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு ஒன்றாகவே உள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை பார்த்துள்ளது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ஓட்டு மிஷின்சாரியாக தான் வேலை செய்துள்ளது
பல தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் ஒரே மாதிரியாக உள்ளது என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
பா.ஜ.க-வின் போலோ சிங் பெற்ற வாக்குகள் 211820. காங்கிரஸ் வேட்பாளர் பெற்றது 140295. பா.ஜ.க-வின் மேனகா காந்தி பெற்ற வாக்குகள் 211829. காங்கிரஸ் வேட்பாளர் பெற்றது 140295. பா.ஜ.க-வின் உபேந்த்ரா நர்சிங் பெற்ற வாக்குகள் 211820. காங்கிரஸ் வேட்பாளர் பெற்றது 140295.
பா.ஜ.க-வின் ஹாரிஷ் திவேதி பெற்ற வாக்குகள் 211820. காங்கிரஸ் வேட்பாளர் பெற்றது 140295. பா.ஜ.க-வின் சத்யபால் சிங் பெற்ற வாக்குகள் 211820. காங்கிரஸ் வேட்பாளர் பெற்றது 140295. பா.ஜ.க-வின் சங்கமித்ரா மவுரியா பெற்ற வாக்குகள் 211820. காங்கிரஸ் வேட்பாளர் பெற்றது 140295.
பா.ஜ.க-வின் கன்வர் பரதேண்ட்ர சிங் பெற்ற வாக்குகள் 211820. காங்கிரஸ் வேட்பாளர் பெற்றது 140295 என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். இந்த பதிவை, 2019 மே 29 அன்று Sakthi Cpm என்பவர் பகிர்ந்துள்ளார். இது உண்மை என்று பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பல தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் எப்படி ஒரே மாதிரியான வாக்குகளை பெற்றிருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. இதனால், இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை ஆய்வு செய்தோம்.
முதலில், போலோ சிங் பெற்ற வாக்குகளை ஆய்வு செய்தோம். இவர் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷல் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இவருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் யோகேஷ் வர்மாவுக்கும் இடையேதான் போட்டியே இருந்துள்ளது.

போலோ சிங் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது போல் 2,11,820 வாக்குகளை வாங்கவில்லை. அவர் பெற்ற வாக்குகள் மொத்தம் 6,81,321. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் 3,90,458. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பெற்ற வாக்கு 29,465 மட்டுமே. இதன் மூலம் போலோ சிங் பற்றிய பதிவு தவறானது என்று உறுதியானது.

அடுத்து, மேனகா காந்தியின் வாக்குகளைப் பற்றி ஆய்வு செய்தோம். மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவர் வெற்றி பெற்றார் என்ற செய்தி தொடக்கத்திலேயே நமக்கு கிடைத்தது.
மேனகா காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் பெற்ற வாக்குகள் மொத்தம் 4,58,281. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 4,44,422 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 41,681. இதன் மூலம் மேனகா காந்தி பெற்ற வாக்குகள் பற்றிய தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.


மூன்றாவதாக இருந்த உபேந்திரா நரசிங்கைப் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அவரது பெயர் உபேந்திரா சிங் ராவத். இவர் உத்தரப்பிரதேச மாநிலம் பரபங்கி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியட்டார். இந்த தொகுதியிலும் பா.ஜ.க, பகுஜன் சமாஜ் இடையேதான் போட்டி இருந்துள்ளது. இவர் பெற்ற வாக்குகள் 5,35,917. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் 1,59,611. இந்த தகவலும் பொய் என்பது நிரூபணம் ஆனது.

அடுத்த நபர் ஹரிஷ் திவேதி. இவர் உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி தொகுதியில் போட்டியிட்டார். இங்கும் பா.ஜ.க-வுக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையேதான் போட்டி இருந்தது. ஹரிஷ் திவேதி 4,40,808 வாக்குகள் பெற்றுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 4,71,162 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 86,920 வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலம், இந்த தகவலும் தவறு என்று உறுதியானது.

சத்யபால் சிங் 5,25,789 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டிரிய லோக் தளம் 5,02,287 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை.

சங்கமித்ரா மவுரியா பெற்ற வாக்குகள் 5,11,352. சமாஜ்வாடி வேட்பாளர் பெற்ற வாக்குகள் 4,92,898. காங்கிரஸ் கட்சி வேட்பாளரோ 5,19,47 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

கடைசியாக, கன்வர் பரதேண்ட்ர சிங். உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் நாடாளுமன்றத் தொகுதியில் இவர் போட்டியிட்டுள்ளார். இவர், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்துவிட்டார். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் 5,59,824. பா.ஜ.க வேட்பாளர் பெற்ற வாக்குகள் 4,88,061. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் 25,833.

நாம் மேற்கொண்ட ஆய்வில் ஒவ்வொரு வேட்பாளரும் வெவ்வேறு எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றிருப்பது தெரிந்தது. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டது போன்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அவ்வளவு வாக்குகளை வாங்கவில்லை. ஒரு தொகுதியில் பா.ஜ.க தோல்வியைத் தழுவியுள்ளது. இதன் மூலம், இந்த பதிவில் உள்ள தகவல் அனைத்தும் தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பல தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 2,11,820 தானா?
Fact Check By: Praveen KumarResult: False

Thank you for the information. Sorry for forwarding a wrong message.
Thank you for your kind information