
புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்த பா.ஜ.க எம்.பி நிஷிகாந்தின் எம்.பி.ஏ சான்றிதழ் போலியானது என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. நிஷிகாந்த் தூபே மீதான குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. இந்த நிலையில் அவர் கல்விக் கொள்கையை வடிவமைத்தாரா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இவர் பெயர் ரிஷிகாந்த் துபே, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.நாடாளுமன்ற உறுப்பினர். இவரது M.B.A. கல்விச்சான்றிதழ் போலியானது என டெல்லி பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இதில் என்ன முக்கிய செய்தி என கேட்கிறார்களா?
இவர்தான் தற்போதைய புதிய கல்விக் கொள்கையை வகுத்தவர்களில முக்கியமானவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை வெள்ளிங்கிரி யாழ் என்பவர் 2020 ஆகஸ்ட் 14ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
புதியக் கல்விக் கொள்கை என்பது நிபுணர் குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் இருப்பதாக எந்த செய்தியும் வெளியானது இல்லை. இந்த நிலையில் எம்.பி.ஏ படித்துள்ளதாகக் கூறி சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க எம்.பி புதியக் கல்விக் கொள்கை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றார் என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நிஷிகாந்த் துபே கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த மனுவில் 1993ம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ படித்து தேர்ச்சி பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் தேர்ச்சி பெற்றது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தனர். அதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில போலீசும் டெல்லி பல்கலைக் கழகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு பல்கலைக் கழகம் குறிப்பிட்ட அந்த காலத்தில் அப்படி ஒருவர் படிக்கவே இல்லை என்று கூறியது.
இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜார்கண்ட் முக்தி மோட்சா வலியுறுத்தி வருகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டெல்லி பல்கலைக் கழகம் இதை வழங்கியது உண்மையா என்று துபே கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். முதலில் புதிய கல்விக் கொள்கை வடிவமைத்த குழு உறுப்பினர்கள் யார் யார் என்று பார்த்தோம். மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை உள்ளிட்டவற்றில் அவர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. கஸ்தூரி ரங்கன் தலைவராகவும், வசுதா காமத், மஞ்சுள் பார்கவா, ராம் சங்கர் குரீல், கட்டிமணி, கிருஷ்ண மோகன் திரிபாதி, மசார் ஆசிஃப், எம்.கே.ஶ்ரீதர் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக இருந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
செயலாளராக சகிலா டீ சாம்சு இருந்தார் என்றும், வரைவுக் குழுவின் உறுப்பினர்களாக மஞ்சுள் பார்கவா, கே.ராமச்சந்திரன், அனுராக் பேஹர், லீனா சந்திரன் வாடியா ஆகியோர் இருந்ததாக மத்திய கல்வித் துறை (முன்பு மனிதவள மேம்பாட்டுத் துறை) அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் நிஷிகாந்த் துபே பெயரே இல்லாத நிலையில் அவர்தான் புதிய கல்விக் கொள்கையை வடிவமமைத்தார் என்று எதன் அடிப்படையில் கூறுகின்றனர் என்பது புரியவில்லை.
நிஷிகாந்த் துபே மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக, இணை அமைச்சராகவும் கூட இருந்தது இல்லை. ஒரு வேளை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் நிலைக் குழு எதிலும் அவர் உறுப்பினராக இருந்துள்ளாரா என்று பார்த்தோம். வரைவு அறிக்கை கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு வெளியானது என்பதால், 2014-19 அல்லது அதற்கு முன்பு எப்போதாவது கல்வி சார்ந்த நிலைக் குழுவில் இருந்துள்ளாரா என்று பார்த்தோம்.
2009-14ம் ஆண்டு நிதித்துறை சார்ந்த நிலைக்குழுவில் அவர் இருந்துள்ளார். 2014 முதல் 19 வரையிலான காலக்கட்டத்தில் பொது கணக்குக் குழு, விதிகள் குழு, நிதி, சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை, மதிப்பீடு கமிட்டிகளில் அவர் உறுப்பினராக இருந்துள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதாவது புதிய கல்விக் கொள்கை வரைவு வெளியிட்ட பிறகு 2018 செப்டம்பர் மாதத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை நிலைக் குழுவிலும், திறன் மேம்பாடு ஆலோசனைக் குழுவிலும் அவர் உறுப்பினராக உள்ளார் என்பது தெரிந்தது.
இதன் மூலம், புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் நிஷிகாந்த் துபே என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்தவர் பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே என்று பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
