
‘’ஆக உன் நினைப்பெல்லாம் பிள்ளைங்க மேலதான்,’’ என்று அமைச்சர் ஜெயக்குமாரை மு.க.ஸ்டாலின் கேலி செய்வது போன்ற ஒரு நியூஸ் கார்டு புதிய தலைமுறை பெயரில் வைரலாகி வருவதை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link
Admk Fails என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மு.க.ஸ்டாலின், ஜெயக்குமார் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் கேலி செய்துகொள்வது போல உள்ளது. ஆனால், உண்மையில் ஸ்டாலின் அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், இதனை உண்மை என நினைத்து பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அதிமுக., மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பலரும் விலகி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக.,வில் இணைந்து வருகின்றனர். இதையடுத்தே, உண்மையான அதிமுக விசுவாசிகள் திமுக.,வில் இணைய வேண்டும் என மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்க்க வேடிக்கையாக இருந்தாலும் உண்மையாகவே மு.க.ஸ்டாலின் அப்படி பேசியது போல உள்ளது. அத்துடன், புதிய தலைமுறை பெயரில் இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளதால், உண்மையாக இருக்கும் என்றே பலரும் நினைத்து ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர்.
எனவே, புதிய தலைமுறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று இதுதொடர்பான செய்தி எதுவும் வெளியாகியுள்ளதா என தேடிப் பார்த்தோம். அப்போது, இதே செய்தியின் உண்மையான நியூஸ் கார்டு கிடைத்தது.

புதிய தலைமுறை மட்டுமல்ல, பல்வேறு ஊடகங்களின் பெயரில் இப்படி போலியான நியூஸ் கார்டுகளை தயாரித்து பலரும் தங்களது சுய நலத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இது மிகப்பெரிய தவறாகும். பெரும்பாலான நேரத்தில் இதில் உண்மை எது, பொய் எது என்றே தெரியாத அளவுக்கு ஃபேஸ்புக் பயனாளர்களிடையே குழப்பம் ஏற்படுகிறது. இது மக்களை திசை திருப்புவதாக உள்ளதோடு, சம்பந்தப்பட்ட ஊடகங்களின் நற்பெயரை கெடுப்பதாகவும் உள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அமைச்சர் ஜெயக்குமாரை கேலி செய்த மு.க.ஸ்டாலின்: புதிய தலைமுறை பெயரில் பரவும் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False
