
‘’தமிழர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள்- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவை உண்மை என நம்பி பலரும் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு ஏப்ரல் 15ம் தேதி பகிரப்பட்டுள்ளது. இதனை எம்பெட் செய்யக்கூட முடியாதபடி செட்டிங்ஸ் வசதியை மாற்றியமைத்துள்ளனர். அவ்வளவு கவனமாக இருப்பவர் வெளியிடும் தகவலையும் சரிபார்த்து வெளியிட்டிருக்கலாம். பதிவை வெளியிட்டவரை விட, அது உண்மையா எனத் தெரியாமலே பலரும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
இவர்கள் சொல்வது போல, மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எதுவும் தவறாகப் பேசிவிட்டாரா என்ற சந்தேகத்தில் கூகுளில் சென்று தேடிப் பார்த்தோம். ஆனால், அதற்கான செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர் பற்றி தந்திடிவி வெளியிட்ட செய்தியை தேடினோம். அப்போது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஏப்ரல் 14ம் தேதியன்று, தமிழகம் வந்து சேலத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பேசியது தொடர்பாக தந்தி டிவி வெளியிட்ட செய்தி மற்றும் வீடியோ ஆதாரங்கள் கிடைத்தன.
தந்தி டிவி வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். வீடியோ இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
இந்த செய்தி மற்றும் வீடியோவில் எங்கேயும், தமிழர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள், என நிதின் கட்கரி குறிப்பிடவில்லை. அப்படி அவர் பேசியதாக, தந்தி டிவியும் சொல்லவில்லை. ஒருவேளை அவர் அப்படி கூறியிருந்தால், அன்றைய நாளில், ஊடகங்களில் இது மிகப்பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, இந்த ஃபேஸ்புக் பதிவு அரசியல் காரணங்களுக்காகச் சித்தரிக்கப்பட்ட ஒன்றாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று, இப்பதிவில் குறிப்பிடப்படும் அதே தேதியில், நிதின் கட்கரி பற்றி ஏதேனும் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டதா என தேடிப் பார்த்தோம்.
அப்போது உண்மையான நியூஸ் கார்டு கிடைத்தது. ஆனால், அதில் கூறப்பட்டிருந்த தகவல் முற்றிலும் வேறாக இருந்தது. அதாவது, ‘’விவசாயிகளுடன் பேசி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும்- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,’’ என்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது. அதனை போட்டோஷாப் செய்து, இவ்வாறு தவறாகச் சித்தரித்துள்ளனர் என சந்தேகமின்றி தெளிவாகிறது. ஆதார படங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

தந்தி டிவி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு, ஆதாரத்திற்காக கீழே மீண்டும் ஒருமுறை எம்பெட் செய்யப்பட்டுள்ளது.
Archived Link
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில், தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக, நிதின் கட்கரி பற்றி தவறான நியூஸ் கார்டை சித்தரித்து பகிர்ந்துள்ளனர் என்று, சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக தெரியவருகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. எனவே நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மையற்ற செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:தமிழர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள்: நிதின் கட்கரி பேசியது உண்மையா?
Fact Check By: Parthiban SResult: False
