
‘’நிர்மலா சீதாராமனுக்கு நெருக்கடி கொடுப்பேன்,’’ என்று நிதின் கட்கரி பேசியதாக, ஒரு செய்தியை சமயம் தமிழ் இணையதளம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Samayam Tamil இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதனுடன், சமயம் தமிழின் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் இணைக்கப்பட்டுள்ளது.

உண்மை அறிவோம்:
இந்த செய்தியின் தலைப்பை பார்க்கும்போது, நிர்மலா சீதாராமனுக்கு எதோ புதிய நெருக்கடி கொடுத்து, அவரை பதவியில் இருந்து நீக்குவேன் என்று நிதின் கட்கரி சொல்வதைப் போல உள்ளது. ஆனால் செய்தியின் உள்ளே படிக்க படிக்க அதன் உண்மையான அர்த்தம் வேறு ஒன்றாக இருப்பது தெரியவந்தது. ஆம், ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டால் கார் விற்பனை அதிகரிக்கும் என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், இதுபற்றி நிதியமைச்சர் நிர்மலாவிடம் கோரிக்கை வலியுறுத்தப் போவதாக நிதின் கட்கரி பேசியிருக்கிறார். இதன்படி, பரபரப்பிற்காக செய்தியின் தலைப்பை ஒரு விதமாக வைத்து எழுதியுள்ளதாக, தெரியவருகிறது.

இதையடுத்து, கட்கரி சமீபத்தில் இப்படி எங்கேனும் பேசியுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்தது. அதன்பேரில் விரிவான தேடல் மேற்கொண்டோம். அப்போது, SIAM Conclave நிகழ்ச்சியில் அவர் பேசிய விவரம் கிடைத்தது. அதில், ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஆட்டோமொபைல் துறை சந்தித்துள்ள பிரச்னைகளை சமாளிக்கும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் எடுப்பேன், என்றுதான் கட்கரி பேசியிருக்கிறார். இதுபற்றி படிக்க இங்கே 1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யவும்.

எனவே, பரபரப்பை அதிகரிப்பதற்காக வார்த்தைகளில் கனம் கூட்டி இந்த செய்திக்கு தலைப்பு வைத்துள்ளதாக தெரியவருகிறது. இதனை படிக்கும்போது, நிதின் கட்கரிக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் இடையே எதோ மோதல் நடப்பதுபோன்ற அர்த்தம் உண்டாகிறது. இதனால் வாசகர்கள் குழப்பமடைய நேரிடுகிறது. இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட செய்தியில் தலைப்பு தவறாக உள்ளதென்று, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியின் தலைப்பு தவறாக உள்ளதென்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை, உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நிர்மலா சீதாராமனுக்கு நெருக்கடி கொடுப்பேன் என்று நிதின் கட்கரி சொன்னாரா?
Fact Check By: Pankaj IyerResult: False Headline
