
இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவும் தயங்கமாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு மற்றும் திரைப்பட காட்சி இணைத்து புகைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டில், “சட்டம் அனைத்து மதத்தினருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். அதுதான் மதச்சார்பற்ற நாடு. இந்துக்களை மட்டும் சீண்டிக்கொண்டு இருந்தால் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவும் தயங்க மாட்டோம் – அமித் ஷா” என்று உள்ளது.
இந்த பதிவை, Rob In என்பவர் 2019 செப்டம்பர் 4ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில் சிறுபான்மையினரை விமர்சித்து “விரைவில் மூடுவிழா” என்று குறிப்பிட்டுள்ளார். இதை 1500க்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் மதமாற்றத் தடை சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது அது கொண்டுவரப்படும் என்று கூறுகிறது.
அதேபோல, இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், பா.ஜ.க தலைவர்கள் பலரும் வெளிப்படையாகவே இது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இந்தியாவை இந்து நாடாக மாற்றத் தயங்க மாட்டோம் என்று அமித்ஷா கூறியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. அதில் அமித் ஷா சர்ச்சைக் கருத்து என்று தலைப்பிட்டுள்ளது. இதனால், உண்மையாக இருக்கலாம் என்று நம்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
நியூஸ் 7 தமிழ் பெயரில் வெளியான நியூஸ் கார்டு அசல் போல இல்லை. பொதுவாக நியூஸ் 7 தான் வெளியிடும் நியூஸ் கார்டில் வெளியான தேதி, நேரத்தை குறிப்பிடும். ஆனால், இந்த நியூஸ் கார்டில் தேதி, நேரம் எதுவும் இல்லை. சில எழுத்துப் பிழைகளும் இருந்தன. ஃபாண்ட் கூட வித்தியாசமாக இருந்தது. நியூஸ் 7 வாட்டர் மார்க் லோகோ இல்லை.
இந்தியாவை இந்து நாடாக மாற்றத் தயங்கமாட்டோம் என்று அமித்ஷா கூறினாரா, அது தொடர்பாக செய்தியை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டுள்ளதா என்று தேடினோம். முதலில் கூகுளில் தேடினோம். அமித் ஷா கூறியதாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.
நியூஸ் 7 இணைய தளத்தில், அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடினோம். அங்கும் நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
இந்தியா இந்து நாடாக வேண்டும் என்ற விருப்பம், கருத்து பலருக்கு இருக்கலாம். அதை வெளிப்படுத்துவது அவரவர் விருப்பம். அது சரியா, தவறா என்று நாங்கள் ஆய்வு மேற்கொள்ளவில்லை. ஆனால், அமித்ஷா அறிவித்துள்ளார் என்றும் அதை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டுள்ளது என்றும் போலியாக தயாரித்து வெளியிட்டிருப்பது தவறான செயலாகும்.
நம்முடைய ஆய்வில், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க தயங்கமாட்டோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்தியாவை இந்து நாடாக அறிவிப்போம்: அமித் ஷா கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு
Fact Check By: Chendur PandianResult: False
