உச்ச கட்டம்.— பணத்தை கொடுத்து விட்டு ... தன்னுடைய காலில் .............. வேண்டும்.!.?., என்று மக்களுக்கு கட்டளையிடும் பாஜக வின் ,யோகி… என்ற தலைப்பில் ஒரு வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. பலரும் இந்த வீடியோவை வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர். இது தேர்தல் நேரம் என்பதால், யோகி ஆதித்யநாத் பற்றி சித்தரிக்கப்பட்ட வீடியோ கூட பரவ வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில், குறிப்பிட்ட வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி பரிசோதிக்க முடிவு செய்தோம். அதன் விவரத்தை இங்கே தொகுத்து தந்துள்ளோம்.

வதந்தியின் விவரம்:

உச்ச கட்டம்.— பணத்தை கொடுத்து விட்டு ... தன்னுடைய காலில் .............. வேண்டும்.!.?., என்று மக்களுக்கு கட்டளையிடும் பாஜக வின் ,யோகி…

Archive Link

இந்த வீடியோவில், யோகி ஆதித்யநாத் ஒரு மர நாற்காலியில் அமர்ந்துள்ளார். அவரை சுற்றி பொதுமக்கள் நின்றபடியும், உட்கார்ந்தபடியும் உள்ளனர். இதில், ஒருவர் வரிசையாகப் பெயர்களை படிக்க, சம்பந்தப்பட்ட மக்கள் ஒவ்வொருவராக எழுந்து வந்து, யோகி ஆதித்யநாத்தை தொட்டு கும்பிட்டுவிட்டு, பணத்தை வாங்கிச் செல்கின்றனர்.

உண்மை அறிவோம்:

உத்தரப்பிரதேச மாநில முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத் பாஜக.,வில், மோடி, அமித் ஷாவுக்கு அடுத்தப்படியாக செல்வாக்கு உள்ள தலைவராகக் கருதப்படுகிறார். இதன்பேரில், மேற்கண்ட வீடியோ, பாஜக எதிர்ப்பு சிந்தனை கொண்டவர்களால், அதிகம் பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சித்தரிக்கப்பட்டது என்பதைவிட, உண்மையாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம். இதன்படி, வீடியோவில் Amit Shah Fans எனக் குறிப்பிடப்பட்டுள்ள லோகோவை கவனிக்க நேரிட்டது. அந்த ஃபேஸ்புக் பக்கம் சென்று, இதுபோன்ற வீடியோ எதுவும் உள்ளதா என தேடினோம். அதில், கடந்த மார்ச் 13ம் தேதி, யோகி ஆதித்யநாத் பற்றிய வீடியோ ஒன்று, பகிரப்பட்டுள்ளது.

Archive Link

10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற இந்த வீடியோவில், 2 சம்பவங்கள் ஒன்றாக தொகுத்து தரப்பட்டுள்ளது. வீடியோவின் ஆரம்பத்தில், ஒரு சிறுவனுக்கு ஆதரவாக, போலீஸ் அதிகாரியிடம் யோகி ஆதித்யநாத் வாக்குவாதம் செய்கிறார். மொத்தம் 3 நிமிடங்கள் உள்ள இந்த வீடியோவின், 2வது பகுதியில் யோகி ஆதித்யநாத் பொதுமக்களுக்கு பணம் தரும் காட்சிகள் வருகின்றன. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

Old is Gold என்ற பெயரில், இந்த வீடியோவை அமித்ஷா ஃபேன்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதன்மூலமாக, இது உண்மையான வீடியோ என்பது உறுதியாகிறது. இது எப்போது நடந்த சம்பவம் என்பதை கண்டுபிடிக்க முடிவு செய்தோம். இதன்படி, #InVid உதவியுடன், வீடியோவில் இருந்து ஒரு புகைப்படத்தை பிரித்தெடுத்து, #Yandex இணையதளத்தில் தேடி பார்த்தோம். அதில், இது உண்மைதான் என்றும், இதை பதிவிட்டவரின் விவரமும் கிடைக்கப் பெற்றது. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதன்படி, அந்த வீடியோவை பகிர்ந்தவரின் பெயர் வினய் குமார் கவுதம் என்பது தெரியவந்தது. கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி அவர் இந்த வீடியோவை யூ டியூப்பில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவின் இணைப்பு இங்கே தரப்பட்டுள்ளது.

இதன்பேரில், ஏற்கனவே, TheQuint இணையதளம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பிட்ட வினய் குமார் கவுதமிடம், குயின்ட் இணையதளம் பேட்டி எடுத்துள்ளது. அதற்கு அவர், ‘’2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம், கோரக்பூரில் உள்ள விவசாய நிலங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, கோரக்பூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்ற முறையில், யோகி ஆதித்யநாத், நேரில் சென்று, ரூ.1000, ரூ.2000 என நிதி உதவி வழங்கினார். அதில், எடுக்கப்பட்ட வீடியோதான் இது,’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) யோகி ஆதித்யநாத் தற்போது உத்தரப்பிரதேச முதல்வராக உள்ளார். அவர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை.
2) ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாக யோகி ஆதித்யநாத் மீது கூறப்படும் குற்றச்சாட்டு தவறு.
3) குறிப்பிடப்படும் வீடியோ உண்மைதான். ஆனால், அது தற்போது எடுக்கப்பட்டது இல்லை.
4) குறிப்பிட்ட வீடியோ, கடந்த 2012ம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகும். அதில்கூட அவர் பொதுமக்களுக்கு நிவாரண நிதி வழங்குகிறார். ஓட்டுக்குப் பணம் தரவில்லை.
5) யோகியின் பழைய வீடியோவை எடுத்து, அவரை பாராட்டும் வகையில், அமித் ஷா ஃபேன்ஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவை எடுத்து, யோகி மீதான தவறான பிரசாரத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர்.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட வீடியோ உண்மைதான்; ஆனால், அதில் கூறப்படுவதைப் போல, யோகி ஆதித்யநாத் ஓட்டுக்குப் பணம் எதுவும் கொடுக்கவில்லை. இது தவறான செய்தி என்பது உறுதியாகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Avatar

Title:வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த யோகி ஆதித்யநாத்: வைரல் வீடியோ உண்மையா?

Fact Check By: Parthiban S

Result: False