‘’இந்தியா என்பதன் அர்த்தம் பற்றி ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரியில் விளக்கம் கூறப்பட்டுள்ளது,’’ எனக் கூறி, ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

Ponni Ravi என்பவர் ஆகஸ்ட் 24, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில் , ‘’அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் பெயர் ஆங்கிலத்திலும் மாறாமல் உள்ளது. ஆனால், இந்தியாவின் உண்மையான பெயர் பாரதம் ஆகும். அதனை நாம் ஆங்கிலத்தில் Bharat என அழைக்காமல், India என அழைக்கிறோம். அதற்கு, ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரியில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இதன்படி, I-Independent, N-Nation, D- Declared, I- In, A- August, என அர்த்தம்,’’ என்று எழுதியுள்ளார். இதே செய்தியை மேலும் பலர் கடந்த சில ஆண்டுகளாகவே, ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் கூறுவதுபோல உண்மையிலேயே, India என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரியில் என்ன அர்த்தம் என விவரம் தேடினோம். அப்போது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் கூறியுள்ள தகவல் தவறானது என தெரியவந்தது.

இதுபற்றி ஆக்ஸ்ஃபோர்டு நடத்தும் lexico.com ஆன்லைன் டிக்‌ஷனரியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதன்படி, ‘’மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா நோக்கி படையெடுத்த வந்த மன்னர்கள், வர்த்தகர்கள் பலரும் வழியில் சிந்து நதியை கடந்து வரவேண்டியிருந்தது. சிந்து நதியை கடந்தால்தான் இந்திய நிலப்பரப்பில் கால்பதிக்க முடியும். அதனால், சிந்து நதியை அடுத்ததாக, சிந்து நதிக்கு மறுகரையில் உள்ள நாடு என, மேற்கத்திய நாடுகள் வர்ணிக்க தொடங்க, அது படிப்படியாக, சிந்து என்பது இந்து, இந்துஸ்தான், இந்தியா என உருமாற்றம் பெற்றுவிட்டது,’’ என்றுதான் ஆக்ஸ்ஃபோர்டு ஆன்லைன் டிக்‌ஷனரியில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இதேபோல, விக்கிப்பீடியா உள்ளிட்ட பல்வேறு தகவல் களஞ்சியங்களும் இவ்வாறே குறிப்பிடுகின்றன.

ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரியில் இந்து நதியை ஒட்டி வசிப்பவர்கள், இந்து நதியின் மக்கள் என்று கிரேக்கர்கள் அழைத்த காரணத்தால் படிப்படியாக, அந்த பெயர் உருமாறி இந்தியா என்று நிலைத்துவிட்டதாகவே குறிப்பிடப்பட்டுள்ள சூழலில், இந்தியா என்றால், ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திரம் பெற்ற நாடு என அர்த்தம் என்று கூறி, தவறான வதந்தியை ஃபேஸ்புக்கில் சிலர் பரப்பி வருவது இதன்மூலம் உறுதியாகிறது. ஹரப்பா, மொஹஞ்சதாரோ போன்றவற்றை Indus civilization என ஆங்கிலத்தில் அழைப்பதற்கு இதுவே அடிப்படை காரணம்.

அதிகாரப்பூர்வமாக, இந்திய அரசு, இந்தியா என்ற பெயரைத்தான் ஆங்கிலத்தில் பயன்படுத்தி வருகிறது. இதுபற்றி இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்கூட நீங்கள் படிக்க முடியும். அதுபற்றி படிக்க இங்கே 1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யவும்.

அதேசமயம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பாரத் என்றும் அழைப்பது உண்டு. ஆனால், ஆங்கிலத்தில் இந்தியா, என்றுதான் சொல்லப்படுகிறது. அதற்கான அர்த்தம், ஏற்கனவே சொன்னது போல இந்து நதியை ஒட்டி வசிக்கும் மக்கள் என்பதுதான் ஆகும்.

இந்திய அரசியலமைப்பு, இந்தியா, பாரத் மற்றும் இந்திய ஐக்கிய நாடுகள் என்ற பெயரை பயன்படுத்துகிறது. எந்த இடத்திலும் ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திரம் பெற்றதால்தான் இந்தியா எனப் பெயர் வந்ததாக, இந்திய அரசு குறிப்பிடவில்லை.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், இந்தியா என்பதற்கு, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் கூறப்படுவது போன்ற விளக்கம் எதையும் ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரி வெளியிடவில்லை என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்தியா என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு டிக்சனரியில் விளக்கம் கூறப்பட்டுள்ளதா?

Fact Check By: Pankaj Iyer

Result: False