
பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், தேதி, நேரம் எதுவும் இல்லை. அதில், “தொடர்ந்து பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் விடுதலை சிறுத்தை கட்சியின் அங்கீகாரம் ரத்த (ரத்து) செய்ய தமிழக அரசு ஆளுனரிடம் பரிந்துரை” என்று உள்ளது.
இந்த பதிவை, புழுதிக்குளம் மறவர்குலம் பரமக்குடி என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 செப்டம்பர் 27ம் தேதி வெளியிட்டுள்ளது. நிலைத் தகவலில், “விரைவில் தடை செய்யப்படும் #விசிக. முதல்வர் உறுதி. மிக்க நன்றி முதல்வரே…” என்று குறிப்பிட்டுள்ளனர். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தொலைக்காட்சியின் நியூஸ் கார்டை பயன்படுத்தி தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த நியூஸ் கார்டு கூட போலியானதாகவே தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பயன்படுத்தி வந்தது. தற்போது பிரேக்கிங் நியூஸ் என்று குறிப்பிடுவதற்கு பதில் பிக் பிரேக்கிங் என்றுதான் அது செய்திகளை வெளியிட்டு வருகிறது.
1) பிழையுடன் நியூஸ் கார்டு உள்ளது. ரத்து என்பதற்கு பதில் “ரத்த” என்று உள்ளது.
2) வழக்கமாக எந்த தேதியில், எப்போது அந்த நியூஸ் கார்டு வெளியானது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால், இந்த நியூஸ்கார்டில் தேதி, நேரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
3) விடுதலைச் சிறுத்தைகள் என்பதுதான் கட்சியின் பெயர், ஆனால், இதில் விடுதலைச் சிறுத்தை என்று எழுதப்பட்டுள்ளது.
இதனால், இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியாகிறது. இருப்பினும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தடை செய்யும் அளவுக்கு தமிழக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா, அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதா, கிடைத்த தகவல் அடிப்படையில் போலியாக நியூஸ் கார்டை உருவாக்கி வெளியிட்டுள்ளார்களா என்று தேடினோம்.
கூகுளில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தடை விதிக்க தமிழக அரசு ஏதேனும் பரிந்துரை செய்துள்ளதா என்று தேடினோம். ஆனால், அதுபோன்று எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
Search Link |
தொடர்ந்து தேடியபோது, சமீபத்தில் பாலியல் வழக்கு ஒன்றில் சேலத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது தெரிந்தது. அதன் அடிப்படையிலேயே இந்த நியூஸ் கார்டு பகிரப்பட்டிருக்கலாம் என்று தெரிந்தது.
AsiaNet News Tamil | Archived Link |
ஒரு கட்சியை தடை செய்ய தமிழக அரசுக்கு தடை உள்ளதா என்று சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் குமாரதேவனிடம் கேட்டோம். அப்போது, “கட்சியை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை. வாக்கு சதவிகிதம், வெற்றி போன்ற விதிமுறைகள் படி கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. ஆனால், தடை செய்யும் அதிகாரம் அதனிடமும் இல்லை. கட்சிகளை தடை செய்யும் அதிகாரத்தை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வருகிறது.
படம்: வழக்கறிஞர் குமாரதேவன்
தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்து எல்லாம் ஒரு கட்சியை தடை செய்துவிட முடியாது. சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. அதற்கு, சட்டத்துக்குப் புறம்பான காரியங்களில் தொடர்ந்து ஒரு அமைப்பு ஈடுபட்டு வருகிறது என்பதை நிரூபிக்க வேண்டும். தற்போது பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிர்வாகி என்று கூறப்படுகிறது. கைது நடவடிக்கை அடிப்படையிலேயே ஒரு கட்சிக்கு தடைவிதிக்கப்படும் என்றால், நாட்டில் ஒரு கட்சி கூட இருக்காது” என்றார்.
நம்முடைய ஆய்வில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது. வி.சி.க-வை தடை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. கட்சியை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:வி.சி.க-வை தடை செய்ய தமிழக அரசு பரிந்துரை?- பரபரப்பு ஃபேஸ்புக் பதிவு!
Fact Check By: Chendur PandianResult: False
