இங்கிலாந்தை இந்து நாடாக மாற்ற ரிஷி சுனக் கோமாதா பூஜை செய்தாரா?

இந்தியா சர்வதேசம் மதம்

இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக் கோமாதா பூஜை செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ நாடான இங்கிலாந்தை கோமாதா பூஜை செய்து இந்து நாடாக மாற்றுகிறார் என்று சிலர் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக் தன் குடும்பத்தினருடன் பசுக்களுக்கு பூஜை செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், “கோமாதா பூஜை செய்யும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்..! இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்ற இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தனது மனைவியுடன் சேர்ந்து கோமாதா பூஜை செய்து வழிபாடு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Update News 360 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 அக்டோபர் 26ம் தேதி பதிவிட்டுள்ளது.

உண்மைப் பதிவைக் காண: Facebook

காவி தமிழன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் ரிஷி சுனக் பசு வழிபாடு செய்யும் வீடியோவை பகிர்ந்து, நிலைத் தகவலில், “கிறிஸ்தவ நாடான இங்கிலாந்தில் பிரதமர் கோமாதா பூஜை செய்து அந்த நாட்டை இந்து நாடாக மாற்றுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். இவற்றை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ஒருவரின் தனிப்பட்ட உரிமை தொடர்பான விஷயங்களில் ஃபேக்ட் செக் செய்ய முடியாது. அதே நேரத்தில், இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக் முதல் காரியமாக பசு வழிபாடு செய்தார் என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். மக்களை மதம் மாற்றுவதே தவறு என்று போராடுபவர்கள் ஒரு படி மேலே சென்று, கிறிஸ்தவ நாடான இங்கிலாந்தை பசு வழிபாடு செய்து இந்து நாடாக மாற்றுகிறார் என்று எல்லாம் பகிர்ந்து வரவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

Archive

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு எடுக்கப்பட்டது இல்லை என்று தெரிந்தது. பிரதமர் பதவிக்கு அவர் போட்டியிட்ட போது, கட்சிக்குள் கட்சியின் புதிய தலைவர் மற்றும் அடுத்த பிரதமர் யார் என்ற தேர்தல் நடந்த போது அவர் பசு வழிபாடு நடத்திய போது எடுக்கப்பட்ட வீடியோ என்று தகவல் கிடைத்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இதே வீடியோ 2022 ஆகஸ்ட் 23ம் தேதி சில யூடியூப் பக்கங்களில் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. அந்த வீடியோக்களில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் ரிஷி சுனக் பசு வழிபாட்டில் ஈடுபட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த தேர்தலில் ரிஷி சுனக் தோல்வியையேத் தழுவினார்.

இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்ற தேர்தல் முடிவுகள் செப்டம்பர் 5, 2022 அன்று வெளியாகியது. அதில் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து அக்டோபர் 25ம் தேதிதான் ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக நியமிக்கப்பட்டார். ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்பதற்கு ஒன்றரை மாதத்துக்கு முன்பு இந்த பூஜை செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. இதன் மூலம், இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக், கோ பூஜை செய்து இங்கிலாந்தை இந்து நாடாக மாற்றினார் என்று பரவும் தகவல் எல்லாம் விஷமத்தனமானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக் பசு வழிபாடு செய்தார் என்றும் இங்கிலாந்து நாட்டையே இந்து மதத்துக்கு மாற்ற ரிஷி சுனக் பசு வழிபாடு செய்தார் என்றும் பரவும் பதிவுகள் தவறானவை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இங்கிலாந்தை இந்து நாடாக மாற்ற ரிஷி சுனக் கோமாதா பூஜை செய்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False