
ப.சிதம்பரத்தால் அச்சடிக்கப்பட்ட டபுள் நம்பர் நோட்டுக்கள் மட்டும் சுமார் லட்சம் கோடி என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதன் கீழ், “சிதம்பரத்தால் அச்சடிக்கப்பட்ட டபுள் நம்பர் நோட்டுக்கள் மட்டும் சுமார் 6 லட்சம் கோடி – ரகுராம் ராஜன்” என்று உள்ளது.
நிலைத் தகவலில், “இது தவிர, பாகிஸ்தானில் அச்சடித்த கள்ள நோட்டுக்கள் எத்தனை லட்சம் கோடிகளோ? குடும்ப குல தெய்வத்துக்கே வெளிச்சம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை Sridhran Sivaraman என்பவர் செப்டம்பர் 17, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த பதிவில் இரண்டு விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். டபுள் நோட்டு என்று நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அதற்கு எந்த ஒரு ஆதாரமும் அளிக்கவில்லை.
இரண்டாவதாக, பாகிஸ்தானில் கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். அதை தெளிவாகக் கூறாமல், ரகசியமாக எதையோ சொல்ல வருவதைப் போல குறிப்பிட்டுள்ளனர். 2019 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் சிதம்பரம் தொடர்பாக ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் பரவியது. ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரத்தை சிதம்பரம் பாகிஸ்தானுக்கு விற்றுவிட்டதாகவும் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய நிருபர்களை தொலைத்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்பட்டது.
ஆனால், அது வதந்தி என்று நம்முடைய தமிழ் ஃபேக்ட் கிரஸண்டோவில் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஒருவேளை அந்த வதந்தியைப் பற்றி கூறுகிறார்களோ என்னவோ… அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
டபுள் நோட்டு அச்சடிக்கப்பட்டதாக ரகுராம் ராஜன் கூறியதாக உள்ள பதிவு உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 6 லட்சம் கோடி டபுள் நம்பர் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டதாக அவர் ஏதும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளாரா என்று தேடினோம். ஆனால், எப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
தொடர்ந்து தேடியபோது காங்கிரஸ் ஆட்சியில் அச்சடிக்கப்பட்ட டபுள் சீரியல் நம்பர் போலி நோட்டுக்கள் என்று தீவிர வலதுசாரி ஆதரவு இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், ரகுராம் ராஜன் குற்றச்சாட்டு என்றோ 6 லட்சம் கோடி அளவுக்கு முறைகேடு என்றோ குறிப்பிடவில்லை.
அதே நேரத்தில், ரிசர்வ் வங்கியே கள்ள நோட்டு அச்சடித்தது என்ற வகையில் அந்த கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. 2010ம் ஆண்டு ரிசர்வ் வங்கியில் சி.பி.ஐ ரெய்டு நடத்தி இதை கண்டுபிடித்ததாக குறிப்பிட்டு இருந்தனர். ரிசர்வ் வங்கியில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியதா என்ற ஆச்சரியம் நமக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக தேடியபோது எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.
Postcard News Link | Archived Link |
ரிசர்வ் வங்கியில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியதா என்று தேடியபோது அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், ரிசர்வ் வங்கி அச்சடித்ததைக் காட்டிலும் அதிக ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி கிடைத்தது.
அதில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல் என்று குறிப்பிட்டிருந்தனர். 2000ம் ஆண்டு புதிய 1000 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. நாசிக் மற்றும் பெங்களூரூவில் உள்ள ரிசர்வ் வங்கியின் அச்சகத்தில் 1000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படுகின்றன. மொத்தம் 4462 மில்லியன் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. ஆனால், ரிசர்வ் வங்கியின் கணக்குப்படி 4462 கோடி நோட்டுக்கள் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதிகப்படியாக உள்ள 9.7 மில்லியன் நோட்டுக்கள் எப்படி வந்தன என்று அதில் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நோட்டுக்களின் மதிப்பு ரூ.970 கோடி.
TOI News Link | Archived Link |
இது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் கூறுகையில், “இது பெரிய எண்ணாகத் தெரியலாம். ரூபாய் நோட்டு என்று வருகையில், கோடிக் கணக்கான ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும்போது இதுபோன்ற வித்தியாசம் ஏற்படுவது இயற்கைதான். இதில் பிரச்னை ஏதும் இல்லை” என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த தகவல் கூட டபுள் சீரியல் நோட்டுக்களை அச்சடிக்கப்பட்டது என்ற மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுடன் ஒத்துப்போகவில்லை. இது முற்றிலும் வேறு பிரச்னையாக இருக்கிறது.
ப.சிதம்பரத்தின் மீது ரகுராம் ராஜன் புகார் கூறியதாக எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் ரகுராம் ராஜன் நெருக்கமாக இருக்கிறார் என்று எதிர் தரப்பினர் குற்றம்சாட்டிய தகவல் நமக்கு கிடைத்தது. ப.சிதம்பரத்தின் ஏற்பாட்டின்பேரில் ராகுல் காந்தியின் ஆலோசகராக ரகுராம் ராஜன் மாறிவிட்டார் என்று எதிர் தரப்பினர் வெளியிட்ட செய்தி நமக்கு கிடைதது. அவர்கள் பார்வையில் ரகுராம் ராஜன், காங்கிரஸ் ஆதரவாளராக இருக்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எப்படி புகார் கூறுவார் என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
Kathir News Link | Archived Link |
நம்முடைய ஆய்வில், 6 லட்சம் கோடி அளவுக்கு டபுள் சீரியல் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டதாக ரகுராம் ராஜன் எங்கும் கூறவில்லை.
டபுள் சீரியல் நோட்டுக்களை அச்சடிக்கும்படி ப.சிதம்பரம் கூறியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
பாகிஸ்தான் கள்ள நோட்டு விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கு என்ன தொடர்பு என்று விளக்கவில்லை. அதே நேரத்தில் முன்பு ப.சிதம்பரத்தை தொடர்புபடுத்தி பரவிய தகவல் வெறும் வதந்தி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ப.சிதம்பரம் அச்சடித்த டபுள் நம்பர் நோட்டுக்கள்! – பகீர் ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Chendur PandianResult: False
