வைகோ, திருமாவளவன் எம்பி பதவிக்கு ஆபத்தா?- உண்மை அறிவோம்!

அரசியல் சமூக வலைதளம்

‘’வைகோ, திருமாவளவன் எம்பி பதவிக்கு ஆபத்து,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில் கிடைத்த விவரங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1News LinkArchived Link 2

ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியை இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் வைரலாக பகிர தொடங்கியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியின் தலைப்பில், ‘’அப்படின்னா, இது திமுகவுக்கு வச்ச குறியா, வைகோ, திருமா நிலை என்னாகும், பரபரக்கும் சின்ன பிரச்னை,’’ எனக் கூறியவர்கள், செய்தியின் லீடில், ‘’வைகோ, பாரிவேந்தர் ரவிக்குமார், கணேசமூர்த்தி இவர்களின் நிலை என்னாகும்,’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், செய்தியின் உள்ளே, பாரிவேந்தர், கணேசமூர்த்தி, ரவிக்குமார், சின்ராஜ் போன்ற மாற்று கட்சியினர் திமுக கூட்டணியில் திமுக.,வின் சின்னமான உதய சூரியனில் போட்டியிட்ட விவகாரம் நீதிமன்ற கேள்விக்கு ஆளாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது, செய்தியின் தலைப்பு, லீடு ஒரு விதமாகவும், செய்தியின் உள்ளே ஒரு விதமாகவும் கன்டென்ட் சேர்க்கப்பட்டுள்ளது. இதைப் படிக்கும்போது, வைகோ, திருமாவளவன் போன்றவர்களின் எம்பி பதவிக்கு ஆபத்து வந்துவிட்டதோ என்ற எண்ணம் எழுகிறது.

இதன்படி, மேற்கண்ட செய்தியை வெளியிட்டவரும், இதனை பகிரும் வாசகர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விசயம், வைகோ, திருமாவளவன் ஆகியோரின் எம்பி பதவிக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆம், ரவிக்குமார் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக.,வை சேர்ந்தவர்கள் என்பதால், அந்த கட்சிகளின் தலைவர் என்ற முறையில், திருமாவளவன், வைகோ வேண்டுமானால் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கலாம். ஆனால், அவர்களின் எம்பி பதவிக்கு இதனால் எந்த ஆபத்தும் வர வாய்ப்பில்லை.

2019 மக்களவை தேர்தலில் மாற்று கட்சியை சேர்ந்திருந்தாலும், திமுக.,வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி வேட்பாளர்கள் ஐஜேகேவை சேர்ந்த பாரிவேந்தர் பச்சமுத்து, விடுதலை சிறுத்தைகளின் ரவிக்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சின்ராஜ், மதிமுக.,வின் கணேசமூர்த்தி ஆகியோர் மட்டுமே.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில், சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார்.

இதேபோல, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எந்த சின்னத்திலும் போட்டியிடவில்லை. அவர் நேரடியாக, திமுக கூட்டணி சார்பாக, மதிமுக.,வின் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மை விவரம்,

1) வைகோ, திருமாவளவன் ஆகியோரின் எம்பி பதவிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
2) இதில், திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வென்று, மக்களவை எம்பியாக உள்ளார்.
3) வைகோ, தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக ராஜ்ய சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

எனவே, மேற்கண்ட செய்தியின் தலைப்பு, லீடு தவறு என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியின் தலைப்பு, லீடு தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:வைகோ, திருமாவளவன் எம்பி பதவிக்கு ஆபத்தா?- உண்மை அறிவோம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False Headline

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •