
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பிஏ இந்தி கற்றுத் தரப்படுகிறது என்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

சேலம் தந்தை பெரியார் பல்கலைக் கழக லோகோவுடன் பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், வழங்கப்படும் பாடங்கள் என்ற தலைப்பின் கீழ் பி.ஏ இந்தி என்று இருந்தது.
நிலைத் தகவலில், “ஹிந்தி வேண்டான்னு இப்போ எதுக்குடா சண்டை போடுறீங்க காசு கொடுத்தா பெரியார் பல்கலைக் கழகத்திலே B.A ஹிந்தி படிக்கலாம் இது எத்தனை முட்டாளுக்கு தெரியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Ambulance Senthil என்பவர் 2020 செப்டம்பர் 8ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் இந்தி திணிப்பு உள்ள எதிர்ப்பை இந்தி எதிர்ப்பு என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். தமிழகத்தில் இந்தி படிப்பதை, கற்றுக் கொடுப்பதை யாரும் எதிர்க்கவில்லை. பிரபல இயக்குநர் வெற்றிமாறன் தான் டெல்லி விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்பதற்காக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டேன் என்று ஒரு வார இதழுக்குப் போட்டி அளித்ததைத் தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிடப்பட்டது. அதை இந்தியை கற்றுக்கொடுக்கவே தமிழகத்தில் எதிர்ப்பு என்பது போல சிலர் அறியாமையால் பதிவிட்டு வருகின்றனர்.
பெரியார் பல்கலைக் கழகத்தில் இந்தி சொல்லிக் கொடுக்கவே கூடாது என்று யாரும் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் இல்லை. பல்கலைக் கழகங்களில் இந்தி கற்றுக்கொடுப்பது தவறும் இல்லை. சென்னை பல்கலைக் கழகத்தில் இந்தி துறை உள்ளது. அங்கும் முதுகலை பட்டப்படிப்பு போன்ற நிலையில் மட்டுமே கற்றுத் தரப்படுகிறது. இப்படி தமிழகத்தின் பல பல்கலைக் கழகங்களில் இந்தி இருக்கலாம்… இல்லாமலும் இருக்கலாம்.

தமிழக பல்கலைக் கழகங்களில் இளங்கலை படிப்புகள் நேரடியாக வழங்கப்படுவது இல்லை. பல்கலைக் கழகத்தின் கீழ் இணைக்கப்பெற்ற கல்லூரிகளில் மட்டுமே இளநிலை வகுப்புகள் வழங்கப்படுகின்றன. தொலைதூர கல்வித் திட்டத்தின் கீழ் மட்டுமே இளநிலை, முதுநிலை பாடங்களை பல்கலைக் கழகங்கள் வழங்கி வருகின்றன.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், பெரியார் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பிரிவில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளதால் இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். அதன் இணையதளத்தில் ஆய்வு செய்த போது அங்கு முதுநிலை வகுப்புகள் மட்டுமே வழங்கப்படுகிறது. ஸ்கூல் ஆஃப் லேங்வேஜில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு துறைகள் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளங்கலை பாடங்கள் நடத்தப்படுகிறதா என்று பார்த்தோம். அங்கு எம்.ஏ (முதுகலை) பிரிவுக்கு மேல் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுவது தெரிந்தது.
தமிழ், ஆங்கிலமே இளங்கலை அளவில் இல்லாத போது இந்தியை மட்டும் இளங்கலைப் பிரிவில் வழங்கிவிடுவார்களா என்று தோன்றியது. ஒருவேளை, தொலைதூரக் கல்வியில் பி.ஏ பிரிவில் இந்தி கற்றுத் தரப்படுகிறதா என்று ஆய்வு செய்தோம். அதிலும் பி.ஏ இந்தி இல்லை.


பல்கலைக் கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் இந்தி கற்றுத் தரப்படுவதை எப்படி இந்த பல்கலைக் கழகம் நெறிப்படுத்தும் என்ற கேள்வி எழுந்தது. அப்போது பெரியார் பல்கலைக் கழகத்தில் இளங்கலை மொழி பாடங்களுக்கான குழுவில் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியின் இந்தித் துறைத் தலைவர்தான் பல்கலைக் கழகத்துக்கான இதர மொழிக் குழுவின் தலைவராக இருப்பது தெரிந்தது.

பெரியார் பல்கலைக் கழகத்தில் இளங்கலை இந்தி கற்றுத் தரப்படுகிறதா என்று பல்கலைக் கழகத்தைத் தொடர்புகொண்டு விசாரிக்க முயற்சி செய்தோம். பல்கலைக் கழக துணைவேந்தர், பதிவாளர் என யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. பல்கலைக் கழக தகவல் மையத்தைத் தொடர்புகொண்டு விசாரித்த போது பல்கலைக் கழகத்தில் பி.ஏ இந்தி கற்றுத் தரப்படுவது இல்லை என்று உறுதி செய்தனர்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பெரியார் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பிரிவில் கற்றுத் தரப்படுவதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பெரியார் பல்கலைக் கழகத்தில் பி.ஏ இந்தி கற்றுத் தரப்படுவதாக பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
