FACT CHECK: உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியருக்கு கரண்ட் ஷாக் கொடுத்து தாக்கிய காவி கும்பல் என்று பரவும் தகவல் உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவரைத் திருடன் என்று கூறி 9 பேர் கொண்ட காவி கும்பல் கரண்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்தது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ சாட் பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் வீடியோ ஒன்றை அனுப்பி, அது பற்றி உண்மை விவரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த இணைப்பைத் திறந்து பார்த்த போது 2017ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி அந்த வீடியோ பதிவிடப்பட்டு இருந்தது. இந்த வீடியோவை Habeeb Rahman என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் பதிவிட்டிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அதில், “உ.த்தர பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞனை மின்சாரம் பாய்ச்சி சித்ரவதைசெய்த காவிக்குண்டர்கள்…அதிர்ச்சி காணொளி. உ. பியில் முஸ்லிம் இளைஞர் ஒருவரை திருடன் என்று கூறி சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்ட 9 பேர் அடங்கிய காவிக்கும்பல் மிகக்கொடூரமாக கைகளை கட்டிவைத்து மின்சாரத்தைக்கொண்டு அவரது உடலை சித்திரவதை செய்த நிகழ்ச்சி அனைவரையும் உறைய வைத்துள்ளது. தாமதமாக ஸ்தலத்திற்குவந்த பொலிஸார் 5 பேரை கைதுசெய்திருப்பதாக, வழமைபோன்று செய்தி வெளியிடுகின்றார்கள். காவிகளின் அல்லது அவர்களின் ஏவல் கூலிகளின் கொட்டம் தினம் ஒரு ரூபத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது” என்று இருந்தது.

இப்போது ஏன் அதைப் பற்றிக் கேட்கிறார் என்று பார்த்த போது, பலரும் இப்போதும் அந்த வீடியோவை வைரலாக ஷேர் செய்து வருவது தெரிந்தது. எனவே, அந்த வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

ஆஜ்தக் என்ற இந்தி ஊடகம் வெளியிட்ட வீடியோவை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்டுள்ளனர். இந்தியில் இருப்பதால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லை. வீடியோ பதிவிடப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் ஆயிரக் கணக்கானோர் அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளனர். தற்போதும் தொடர்ந்து பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர். 

இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று அறிய கூகுளில் உத்தரப்பிரதேசம், இஸ்லாமிய இளைஞர், திருட்டு, கரண்ட் ஷாக் போன்ற கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது 2017ம் ஆண்டு வெளியான செய்திகள், வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. வீடியோவை முதலில் பார்த்தோம். அதில் அந்த இளைஞரிடம் சிலர் விசாரணை நடத்துவது போல இருந்தது. அப்படி விசாரணை நடத்துபவர்களில் சிலர் இஸ்லாமியர்கள் போலவும் இருந்தனர். 

Youtube

மிரர் நவ் வெளியிட்ட வீடியோவை பார்த்தோம். அதில், குற்றம்சாட்டப்பட்டவர், அதிகாரி, டாக்டர் என அனைவரும் அளித்த இந்தி பேட்டியை அப்படியே வெளியிட்டிருந்தனர். அதன் ஆங்கில மொழி பெயர்ப்பையோ, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றோ அதில் குறிப்பிடவில்லை.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்களில் இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது. அதில், இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தின் சாரைமீர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஷெர்வா என்ற கிராமத்தில் நிகழ்ந்தது. மொபைல் போனை திருடிவிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த நபருக்கு கரண்ட் ஷாக் கொடுக்கப்பட்டுள்ளது. மொபைல் திருடியதாக சந்தேகப்படும் நபரின் பெயர் சிவ்குமார். கரண்ட் ஷாக் வைத்ததாக யூசுப் மற்றும் யூசுப்பின் உறவினர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் என்று இருந்தது.

அசல் பதிவைக் காண: hindustantimes.com I Archive 1 I indianexpress.com I Archive 2

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த செய்தியில் ட்விட்டரில் ஆஜ்தக் வெளியிட்டிருந்த வீடியோ பதிவுக்கு உத்தரப்பிரதேச மாநில போலீசார் அளித்த பதில் ட்வீட் இருந்தது. இது குறித்து நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டோம்.

அதில், “கோபால் தாஸ் என்பவரின் மகன் சிவ்தாஸ் மீது மொபைல் திருட்டு குற்றம்சாட்டி கை, கால்களை கட்டி கரண்ட் ஷாக் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக குற்றவாளிகள் மீது இந்த இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றனர். மேலும், இந்தியில் பரவிய வீடியோ, மற்றும் ஆதாரங்களைப் பார்த்துவிட்டு, மொபைல் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு கரண்ட் ஷாக் வைக்கப்பட்ட நபரின் பெயர் சிவ்குமார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு கரண்ட் ஷாக் வைத்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றனர்.

Archive

பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் பற்றி இஸ்லாமிய இளைஞர்கள் தவறாகப் பேசியதாகவும், அதை சிவ்குமார் எதிர்த்ததாகவும்… அதனால் அவரை கடத்திக் கொண்டு சென்று கரண்ட் ஷாக் கொடுத்தார்கள் என்று பா.ஜ.க ஆதரவு ஊடகத்தில் செய்தி வெளியிட்டிருந்தனர். போலீஸ் தரப்போ யூசுப் என்பவரின் கடையில் சிவ்குமார் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு மொபைல் போனை திருடிவிட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிவ்குமாருக்கு கரண்ட் ஷாக் வைக்கப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அசல் பதிவைக் காண: opindia.com I Archive

கரண்ட் ஷாக் வைக்கப்பட்டதை வீடியோவாக எடுத்த அந்த இளைஞர்கள் அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் வைரல் ஆகவே, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து யூசுப் உள்ளிட்டவர்களை கைது செய்தது போலீஸ் என்று கூறப்படுகிறது. கரண்ட் ஷாக் வைக்கப்பட்ட நபர் இஸ்லாமியர் என்றோ, அவருக்கு ஷாக் வைத்தது வலதுசாரி அமைப்பைச் சார்ந்தவர்கள் என்றோ எந்த ஒரு பதிவும் ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை. உண்மை இப்படி இருக்க, இஸ்லாமிய இளைஞருக்கு இந்துக்கள் இணைந்து கரண்ட் ஷாக் கொடுத்தார்கள் என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நம்முடைய ஆய்வில் பாதிக்கப்பட்ட இளைஞரின் பெயர் சிவ்குமார் என்றும் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் யூசுப் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. போலீசில் அளித்த புகாரில் தன்னுடைய பெயர் சிவ்குமார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்று போலீஸ் கூறியுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இஸ்லாமிய இளைஞருக்கு காவி குண்டர்கள் கரண்ட் ஷாக் வைத்தார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமிய இளைஞருக்கு கரண்ட் ஷாக் கொடுத்த இந்து அமைப்பினர் என்று பரவும் வீடியோ பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியருக்கு கரண்ட் ஷாக் கொடுத்து தாக்கிய காவி கும்பல் என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False