Fact Check: 50 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலரா இது?

சமூக ஊடகம் | Social சமூகம்

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலர், என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

சமூக ஊடகங்களில் வந்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளது போல உள்ளது. சங்கு போல தோற்றம் அளிக்கும் ஒன்றின் மீது, “50 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் திரிசங்குமலர் அனைவரும் பார்த்து மகிழுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தை ‎தோட்டம் Garden விவசாயம் Farming என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sudarsanam Sudarsanam Sudarsanam என்பவர் 2020 செப்டம்பர் 18ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சாதாரண மலர்களை எல்லாம் அரிய வகை மலர்கள், 50, 100 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் மலர் என்று கூறி சமூக ஊடகங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். அந்த வரிசையில் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலர் என்று குறிப்பிட்டு இந்த படத்தை பலரும் பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம். இதற்கு முன்பு வெளியான கட்டுரைகளைகள் கீழே…

45 ஆண்டுக்கு ஒரு முறை காணப்படும் நாகபுஷ்பா என்று பரவும் வதந்தி!
99 ஆண்டுகளுக்கு ஒரு முறை இமய மலையில் பூக்கும் சிவலிங்கப் பூ இதுவா!
400 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் மகாமேரு
400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் பகோடா மலர்

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது இது ஜப்பான், ஆஸ்திரேலிய கடற்பகுதியில் காணப்படும் ஒரு வகையான சங்கு என்று குறிப்பிட்டு பல செய்திகள் நமக்கு கிடைத்தன. இந்த சங்கின் பெயர் ஹர்டோமுரெக்ஸ் டெரமாச்சி (Hirtomurex teramachii) என்று தெரிய வந்தது.  மேலும், இந்த சங்கை விற்பனைக்கு கூட சில இணையதளங்கள் வைத்திருப்பதைக் காண முடிந்தது.

gastropods.comArchived Link 1
thelsica.comArchived Link 2

மேலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த படத்தை ஜப்பானின் ஆழ்கடல் உயிரியல் ஆராய்ச்சியாளர் Chong Chen என்பவர் இந்த படத்தை பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. அவருடைய கலெக்‌ஷனில் ஏராளமான வடிவங்களில் விதவிதமான சங்குகள், சிப்பிகளை வைத்திருப்பதைக் காண முடிந்தது.

Facebook LinkArchived Link

திரிசங்கு மலர் என்று ஏதும் உள்ளதா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு மலரும் இருப்பதாக தகவல் கிடைக்கவில்லை. திரிசங்கு என்று சங்கு ஏதும் உள்ளதா என்று பார்த்தோம்.

தினமலர் நாளிதழில் சங்குக்குள் சங்கு என மூன்று சங்குகள் கொண்ட திரிசங்கு ஒன்று சிவகிரி மடாலயத்தில் உள்ளதாக படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தனர். அதற்கும் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படத்தில் உள்ள சங்குக்கும் தோற்றத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதைக் காண முடிந்தது.

dinamalar.comArchived Link

இதன்மூலமாக, படத்தில் இருப்பது 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் இல்லை, ஆழ்கடலில் வாழும் விலங்கு வகையைச் சேர்ந்த சங்கு என்பது உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:50 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலரா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False