
திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பேரணியின்போது எடுக்கப்பட்ட படம் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
பாரதிய ஜனதா கட்சிக் கொடியுடன் மக்கள் செல்லும் மிகப்பெரிய அளவிலான மக்கள் பேரணி மற்றும் பிரம்மாண்ட பொதுக் கூட்டப் படங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
நிலைத் தகவலில், “திருப்பூர் குலுங்கியது. சி.ஏ.பி, என்.ஆர்.சி-க்கு ஆதரவாக கூடிய கூட்டம். திராவிடம் அதிர்ந்தது. நாங்களும் போராடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, ஸ்ரீனிவாசகம் பா.ஜ.க என்பவர் 29 டிசம்பர் 2019 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான கூட்டம் நடந்தது. அதில், ஆயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். அதை வைத்து ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல வித பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த பதிவில் திருப்பூர் குலுங்கும் அளவுக்குக் கூட்டம் வந்தது என்று குறிப்பிட்டு நான்கு படங்களைப் பகிர்ந்துள்ளனர். பேரணியாக செல்லும் படத்தைப் பார்த்தபோது, அதில் உள்ளவர்கள் தமிழர்கள் போலவே இல்லை. சில பெண்களின் உடை பார்க்கும்போது வட இந்தியா அல்லது வட கிழக்கு இந்தியா போலத் தெரிந்தது.

க்ளோஸ்அப் படம் ஒன்றைப் பார்க்கும்போது அந்த பெண்கள் எல்லாம் வடகிழக்கு பெண்கள் என்பது தெரிந்தது. ஒருவர் கையில் அஸ்ஸாமி மொழியில் எழுதப்பட்ட அட்டையை வைத்திருந்தது தெரிந்தது. இவை எல்லாம் இந்த படம் திருப்பூரில் எடுக்கப்பட்டதாக இருக்காது என்று சந்தேகத்தை கிளப்பியது.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படத்தை அஸ்ஸாமைச் சேர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா என்பவர் பதிவிட்டிருந்ததும், அதை மத்திய உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான அமித்ஷா ரீட்வீட் செய்திருப்பது தெரிந்தது.

Archived Link |
ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்ட பதிவைப் பார்த்தோம். அதில், இந்த பேரணி டிசம்பர் 27ம் தேதி அஸ்ஸாமில் Jagi Road-ல் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

Twitter Link | Archived Link |
இதன் மூலம் அஸ்ஸாமில் எடுக்கப்பட்ட சிஏஏ ஆதரவு பேரணி படத்தை பகிர்ந்து, திருப்பூரில் நடந்த பேரணி என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளதாக, தெரியவருகிறது. அதேசமயம், திருப்பூரில் சிஏஏ ஆதரவு பேரணி நடைபெற்றது உண்மைதான்.
எனவே, மேற்கண்ட பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், உண்மை, பொய் கலந்துள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பேரணியின் படமா இது?
Fact Check By: Chendur PandianResult: Partly False
