சீனா தாக்கியதில் பலியான இந்திய ராணுவ வீரர் இவரா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

சீன ராணுவ வீரர்கள் தாக்கியதில் பலியான இந்திய ராணுவ வீரர் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

ராணுவ சீருடையில் இறந்து கிடக்கும் நபரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழகத்தில் வாழும்… இந்திய ராணுவத்துக்கு எதிராகப் பதிவிடும் அந்நிய கைக்கூலிகளே….இந்த ஒரு படத்தைப் பாருங்கள்….அப்போதும் உங்கள் மனம் மாறவில்லை எனில் நீங்கள் மனிதப்பிறவிகளே அல்ல….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Radhakrishnan Radha என்பவர் 2020 ஜூன் 19ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இறந்து கிடப்பவர் சீன தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர் என்று வெளிப்படையாக கூறவில்லை.

ஆனால், “இறந்து கிடக்கும் வீரரின் படத்தைப் பாருங்கள்… அப்போதும் உங்கள் மனம் மாறவில்லை எனில் நீங்கள் மனிதப் பிறவிகளே இல்லை” என்று இந்திய ராணுவத்துக்கு எதிராக பதிவிடுபவர்களை நோக்கி கோபத்துடன் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும்போது, பதிவாளர் இறந்து கிடப்பது இந்திய ராணுவ வீரர் என்றே குறிப்பிடுகிறார் என்று யூகிக்க முடிகிறது. 

எல்லையில் இறந்த ராணுவ வீரர்களின் படங்களை அரசு வெளியிடவில்லை. எந்த ஒரு ஊடகமும் வெளியிடவில்லை. அப்படி இருக்கும்போது இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்ற கேள்வி எழுந்தது. மேலும் இறந்து கிடக்கும் நபரைப் பார்க்கும்போது ராணுவ வீரர் போல தெரியவில்லை.

அவருடைய உடை, தோற்றத்தைப் பார்க்கும்போது பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இந்திய ராணுவத்தில் சீக்கியர்கள் உள்ளிட்ட ஒரு சில பிரிவினரைத் தவிர மற்றவர்கள் தாடி வளர்க்க அனுமதி இல்லை. 

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது காஷ்மீரில் சோஃபியான் பகுதியில் நடந்த என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்த படத்தை பலரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலோ, எந்த ஒரு செய்தி ஊடகத்திலோ இந்த படத்தை வெளியிடவில்லை. 

Archived Link

அதே நேரத்தில் மூன்று அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் தரப்பில் ஜூன் 16ம் தேதி காலை 6 மணி அளவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்த பதிவுகள், படங்களை ஆய்வு செய்தோம். ஒருவர் மிகத் தெளிவான படங்களை வெளியிட்டிருந்தார்.

அந்த படத்தை பெரிதுபடுத்தி பார்த்தபோது இறந்து கிடந்த மூன்று பேரும் ராணுவ உடை அணிந்திருக்கவில்லை. ராணுவ வீரர்களுக்கான எந்த அடையாளமும் அவர்களிடம் இல்லை. 

Archived Link 1pbs.twimg.comArchived Link 2

இந்த புகைப்படங்களை ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் பதிவிட்டிருந்தனர். அதில் சோஃபியானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள். ஜம்மு காஷ்மீர் போலீசார் தொடர்ந்து இது போல பயங்கரவாதிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

எந்த ஒரு பதிவிலும் இவர்கள் ராணுவ வீரர்கள் என்று குறிப்பிடவில்லை. காஷ்மீரில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் கூட ஜூன் 16ம் தேதி காலை 8 மணி அளவில், இவர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தனர்.

Archived Link

இந்திய ராணுவ வீரர்கள் பலி தொடர்பான செய்தி எப்போது முதலில் வெளியானது என்று பார்த்தபோது, ஜூன் 16 பிற்பகலில்தான் முதலில் செய்தி வெளியானது. பிற்பகல் 1 மணி அளவில் முன்னணி ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்ததை காண முடிந்தது.

பிடிஐ ஏஜென்சி கூட பிற்பகல் 2 மணி அளிவில்தான் முழு செய்தியையும் வெளியிட்டிருந்தது. சீன ராணுவம் தாக்கியதில் இந்திய வீரர்கள் இறந்தார்கள் என்ற செய்தி வெளியாவதற்கு முன்பே, காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதாக, சமூக ஊடகங்களில் படம் வெளியாகி இருந்தது. 

zeenews.india.comArchived Link 1
ptinews.comArchived Link 2

கொல்லப்பட்ட பயங்கரவாதியின் படத்தை வெளியிட்டு இந்திய ராணுவ வீரர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயன்றது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சீனா தாக்கியதில் பலியான இந்திய ராணுவ வீரர் இவரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False