கல்லீரலா… நுரையீரலா? – குழப்பம் தந்த ஃபேஸ்புக் பதிவு

சமூக ஊடகம் | Social சமூகம் மருத்துவம் I Medical

கல்லீரலின் பெருமைகள் பற்றி பதிவிட்டுள்ள ஒரு ஃபேஸ்புக் பதிவில் நுரையீரல் படம் வைக்கப்பட்டிருந்தது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பை விளக்கும் நுரையீரல் படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் ! மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது” என கல்லீரலின் பெருமைகள் பல எழுதப்பட்டிருந்தது.

இந்த பதிவை ‎உலகத் தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Ramar Vijay என்பவர் 2020 ஜூலை 12ம் தேதி வெளியிட்டிருந்தார். 

உண்மை அறிவோம்:

கல்லீரல் மனிதனின் உடலில் எவ்வளவு முக்கியம், அது செய்யும் பணி பற்றி விரிவாக, விளக்கமாக எழுதியிருந்தனர். ஒரு சிலர் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் இருந்தாலும் பெரும்பாலான தகவல் சரியானதாகவே இருந்தது. எனவே, அந்த விவகாரத்துக்குள் செல்லவில்லை. 

அதே நேரத்தில் இயல்பான, ஆரோக்கியமான நுரையீரல் படத்தையும் சிகரெட் புகைத்ததால் கருமையாக மாறிய நுரையீரலையும் ஒப்பிட்டு வெளியான படத்தை வைத்து பதிவிட்டுள்ளனர். வேறு யாராவது இது போல ஷேர் செய்துள்ளார்களா என்று தேடியபோது, இவரைப் போல இன்னும் சிலர் இந்த படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தனர். அதுவும் பல ஆண்டுகளாக இந்த படத்துடன் பதிவு ஷேர் செய்யப்பட்டு வருவதும் தெரிந்தது. பலர் கல்லீரல் படத்துடன் பதிவை வெளியிட்டிருந்தனர். இந்த படம் கல்லீரலின் படம் இல்லை என்று சொல்ல மட்டுமே ஆய்வு நடத்தினோம்.

Facebook LinkArchived Link

கல்லீரல் நம்முடைய உடலில் மிக முக்கியமான உறுப்பு. உணவு செரிமானத்துக்குத் துணை செய்வது தொடங்கி, ரத்த பிளாஸ்மா உற்பத்தி என்று ஆயிரக் கணக்கான பணிகளை அது செய்கிறது. மது அருந்துவதன் மூலம், கார்போஹைட்ரேட் உணவு அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் கல்லீரலில் பிரச்னை ஏற்படுகிறது. கல்லீரலில் ஏற்படும் முக்கிய பிரச்னையை ஃபேட்டி லிவர் என்று சொல்வார்கள். அதன்பிறகு லிவர் சிரோசிஸ் என்ற பிரச்னை ஏற்படும். அதாவது மது அருந்துதல் உள்ளிட்ட பிரச்னை காரணமாக ஏற்பட்ட பாதிப்பை கல்லீரல் தன்னைத்தானே சரிசெய்துகொள்ள முயற்சி செய்யும். அப்போது அங்கு தழும்பு போல ஏற்படும். கல்லீரல் முழுக்க சிரோசிஸ் ஏற்பட்டுவிட்டால் அதை குணப்படுத்த முடியாது. ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால் அதை சரி செய்ய முடியும். ஆரோக்கியமான கல்லீரல் மற்றும் சிரோசிஸ் பாதிப்பு அடைந்த கல்லீரல் படத்தை வைப்பதற்கு பதில் நுரையீரல் படத்தை வைத்திருப்பது தெரிந்தது.

நுரையீரலைப் பொருத்தவரை ஒரு பெரிய குழாயில் இருந்து இரண்டு பக்கமும் பிரிந்து இரு பக்கமும் நுரையீரல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. படத்தை ரிவாஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, நுரையீரல் பாதிப்பு தொடர்பாக வெளியான பல கட்டுரைகளில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டு இருப்பதை காண முடிந்தது.

bronchitiscontagiouss.blogspot.comArchived Link 1
animalia-life.clubArchived Link 2
pinterest.comArchived Link 3

ஆரோக்கியமான கல்லீரலுக்கும் சிரோசிஸ் எனப்படும் தழும்பு ஏற்பட்ட கல்லீரலுக்கும் உள்ள வித்தியாசம் தொடர்பான படத்தை தேடினோம். அது தொடர்பான படங்களும் கிடைத்தன. இதன் மூலம் கல்லீரல் என்று கூறி நுரையீரல் படத்தை வைத்து பதிவிட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கல்லீரல் படத்துக்கு பதில் நுரையீரல் படத்தை தவறாக வைத்து பதிவிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளத. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கல்லீரலா… நுரையீரலா? – குழப்பம் தந்த ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False