
மகளைத் தொட்டிலிலும், கட்டிலிலும் போட்டு தாலாட்டிய தலைவர் பெரியார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

குழந்தையுடன் பெரியார் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “மகளை தொட்டிலிலும் பின், கட்டிலிலும் போட்டு தாலாட்டிய ஒரே தலைவன்டா எங்க பெரியார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை பாஜக இளைஞர் அணி – தமிழ்நாடு BJYM TamilNadu என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sundar G என்பவர் 2020 ஜூலை 12ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கந்த சஷ்டி கவசத்தின் அர்த்தம் பற்றி யாரோ சிலர் வீடியோ வெளியிட்டார்கள் என்பதற்காக தற்போது பெரியாரின் தலை உருட்டப்பட்ட வருகிறது. பெரியார் பற்றி அவதூறான, அசிங்கமான பதிவுகள் பல சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பெரியார் – மணியம்மை திருமணம் தொடர்பாக தொடர்ந்து பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நம்டைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவில் இது தொடர்பாக கட்டுரைகள் வெளியாகி உள்ளது. அநாகரீகத்தின் உச்சமாக பெரியார் தான் தொட்டிலில் போட்டு ஆட்டிய மகளை, திருமணம் செய்து கொண்டார் என்று பகிர்ந்து வருகின்றனர்.
பெரியார் – மணியம்மை திருமணம் உண்மைதான். அதை அவர்கள் மறைக்கவில்லை. என்ன நடந்ததோ அதைக் குறிப்பிட்டு கருத்திடுவதில் தவறு இல்லை. தான் தொட்டிலில் போட்டு வளர்த்த மகளை திருமணம் செய்து கொண்டார் என்று ஒரு குழந்தையுடன் பெரியார் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். மணியம்மையை பெரியார் ஏன் திருமணம் செய்தார் என்ற விவகாரத்துக்குள் செல்லவில்லை. மணியம்மையை பெரியார் வளர்த்தாரா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.
இது தொடர்பான தகவலைத் தேடினோம். திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ இதழான விடுதலை நாளிதழ் இணையதள பக்கத்தில் மணியம்மை பற்றிய பதிவு நமக்கு கிடைத்தது. அதில், மணியம்மை 1920ம் ஆண்டு பிறந்தார் என்றும், 1943ம் ஆண்டு பெரியாரின் அணுக்கச் செயலாளராக பணியாற்றத் தொடங்கினார் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த செய்தி பதிவில், “வேலூரைச் சேர்ந்த கனகசபை என்ற ‘பெருந் தகையார்’ பெரியாரின் நல்ல நண்பர்களில் ஒருவர். இவருக்கும் பத்மா அம்மையாருக்கும் மகளாக 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் பிறந்த வர்தான் மணியம்மையார். பெற்றோர் இட்ட பெயர் காந்திமதி. தனித்தமிழ் ஆர்வலர் கு.மு. அண்ணல் தங்கோ காந்திமதி என்ற பெயரை, அரசியல் மணி என்று மாற்றம் செய்தார். பிற்காலத்தில் தமிழக அரசியல் களத்தில் அம்மையார் எதிர்நீச்சல் போடப் போகிறார் என்பதை முன்னமே அவர் கணித்திருந்தாரோ என்னவோ, அரசியல் மணி 9ஆவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, வேலூருக்கு வந்திருந்த பெரி யாருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதுதான் முதல் சந்திப்பு. இதற்காக அரசியல் மணி பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். முதல் சந்திப்பே அவருக்குப் போராட்டமாக அமைந்தது. தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த அவர் தமிழில் புலமை பெற வேண்டும் என்பதற்காக நெல்லை மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் உள்ள சி.டி.நாயகம் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஆனால் முழுமையாகப் படிக்க இயலாமல் போயிற்று.
அம்மையாரின் தந்தை கனகசபை பெரியாருக்கு நலம் விசாரித்து கடிதம் எழுதுவது உண்டு. ஒருமுறை பெரியாரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது. “எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் கூட இருந்து உதவி செய்ய யாருமில்லை. என்னமோ என் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனை படித்த கனகசபை துடித்துப் போனார்.
தன்மகள் அரசியல்மணியை நேராகப் பெரியாரிடம் அழைத்துப் போனார். “இந்தப் பெண் தங்களுடன் இருந்து பணி செய்யட்டும்“ என்று பெரியார் கையில் ஒப்படைத்துவிட்டுத் திரும்பிவிட்டார். எத்தனை தகப்பன்களுக்கு இப்படி ஒரு துணிச்சல் வரும் என்று தெரியவில்லை.
1943ஆம் ஆண்டு முதல் அம்மையார், பெரி யாரின் அணுக்கச் செயலாளராக, தொண்டராகப் பணியாற்றத் தொடங்கினார். ஏற்கெனவே பெரி யாரின் கொள்கைகளாலும் பேராட்டம் நிறைந்த வாழ்க்கையாலும் ஈர்க்கப்பட்ட அவர் இந்தப் பணியினை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்“ எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன் மூலம் கைக் குழந்தை பருவத்தில் இருந்து மணியம்மையை பெரியார் வளர்க்கவில்லை. பெரியாரிடம் உதவியாளராக சேரும்போது மணியம்மைக்கு 23 வயதாகி இருந்து என்பது உறுதியானது. பிறகு எப்போது திருமணம் நடந்தது என்று பார்த்தபோது அதிலேயே 1949ம் ஆண்டு திருமணம் நடந்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது, 6 ஆண்டுகள் பெரியாருக்கு உதவியாளராக மணியம்மை பணியாற்றி வந்தது உறுதியாகிறது.
அதே பதிவில், ” 1949ஆம் ஆண்டு சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலை தலைமை தாங்கி நடத்தினார்.இதே ஆண்டில் ஜூலை 9ஆம் நாள் தந்தை பெரியார் மணியம்மையாரை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இதுவரை கே.அரசியல் மணி என்று அழைக்கப்பட்ட அம்மையாரை ஈ.வெ.ரா. மணியம்மை என்று பெயர் மாற்றினார் பெரியார்.
பெரியார், மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விமர்சனங்கள் எழுந்தன. பெரியார் எதிர்ப்பாளர்கள் இதனைக் கொச்சைப்படுத்தி எழுதி யும், பேசியும் வந்தனர். ஆனால் பெரியார் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை தான் எடுத்த முடிவில் மிகத் தெளிவாக இருந்தார். தனது திருமணம் பற்றி அவர் இப்படிக் கூறினார்.
“மனைவி வேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. இயக்க நலனை பொதுத் தொண்டைக் கருதி எனக்கொரு துணை வேண்டு மென்று என்னுடைய பாதுகாப்புக்காக, என்னுடைய வசதியை உத்தேசித்து, ஒரு ஸ்திரீயை சட்டப்படி எனக்கு உதவியாளராக, உற்ற நண்பராக இருக்க வசதி செய்துகொள்கிறேன்” என்றார்” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பெரியாருடன் இருக்கும் குழந்தை யார் என்று தேடினோம். ரிவர்ஸ் இமேஜ் தேடலில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, திராவிடர் கழக வழக்கறிஞர் குமாரதேவனைத் தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர், “உடல் முழுக்க அருவருப்பும், அசிங்கமும் நிறைந்தவர்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள். படத்தில் இருப்பது மணியம்மை இல்லை. திராவிடர் கழக நிர்வாகி ஒருவரின் மகள்” என்றார்.
இந்த ஆதாரங்கள் மூலம் பெரியார் மணியம்மையை குழந்தை பருவத்தில் இருந்து வளர்த்து திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது உறுதியாகிறது. மேலும் படத்தில் இருக்கும் குழந்தை மணியம்மை இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:Fact Check: பெரியார் புகைப்படத்தை வைத்து பகிரப்படும் விஷமத்தனமான தகவல்!
Fact Check By: Chendur PandianResult: False
