நீதிமன்றமே சொன்னாலும் 8 வழிச்சாலை அமைப்போம்: பொன்.ராதாகிருஷ்ணன் பற்றிய செய்தி உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

நீதிமன்றமே சொன்னாலும் சேலம் 8 வழிச் சாலை அமைப்பது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived link

மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் படத்துடன், “நீதிமன்றமே சொன்னாலும் 8 வழிச் சாலை வருவது உறுதி” என்று உள்ளது. பார்க்க, தனியார் செய்தித் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போல உள்ளது. இதன் “கீழே, இப்பவே இப்படி என்றால், ஜெயித்த பிறகு மக்களின் நிலை? மீண்டும் ஒரு முறை பி.ஜே.பி ஆட்சி அமைந்தால் தமிழ்நாடு என்ற ஒன்று இல்லாமல் போய்விடும். சிந்திப்பீர் செயல்படுவீர்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவை, இக்பால் ரஷீத் என்பவர் ஏப்ரல் 16ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். தேர்தல் நேரம் என்பதால் இது அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது.

உண்மை அறிவோம்:

‘நீதிமன்றமே சொன்னாலும் 8 வழிச் சாலை வருவது உறுதி’ என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறுவது போன்ற படம் தனியார் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போல இருந்தது. படத்தின் கீழே, தனியாக இப்போவே இப்படி என்றால், ஜெயித்த பிறகு மக்களின் நிலை? என்ற பதிவு தனியாகவும் இருந்தது.

மேலே உள்ள படத்தில் இருந்த லோகோ சத்தியம் தொலைக்காட்சி போல தெரிந்து. இதனால், சத்யம் தொலைக்காட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு, நியூஸ் கார்டு ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம்.

PON RADHAKRISHNAN 2.png

அப்போது மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற அசல் படம் கிடைத்தது.

Archived link

ஏப்ரல் 15ம் தேதி, சத்தியம் தொலைக்காட்சி இணைய தளத்தில் வெளியான செய்தியில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டு இருந்த படம். அதில், “8 வழிச் சாலை திட்டத்தை யார் நினைத்தாலும் கண்டிப்பாக தடுக்க முடியாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டு இருக்கிறார்” என்று இருந்தது.

மேலும் அந்த செய்தியில், “நீதிமன்ற தடை என்பது தற்காலிகமானது. சிலரின் தூண்டுதலின் பேரில் தடை வந்துள்ளது. 8 வழிச் சாலை என்பது வளர்ச்சித் திட்டம். அதனால், கட்டாயம் செயல்படுத்தப்படும்” என்று கூறியதாக இருந்தது.

இது தொடர்பாக வேறு ஏதேனும் செய்தி வெளியாகி இருக்கிறதா என்று பார்த்தபோது, தந்தி தொலைக்காட்சியின் வீடியோ நமக்குக் கிடைத்தது.

PON RADHAKRISHNAN 3.png

அதிலும் “யார் தடுத்தாலும் 8 வழிச் சாலை அமையும்” – பொன் ராதாகிருஷ்ணன் என்று இருந்தது.

அந்த செய்தி மற்றும் வீடியோவை பார்த்தோம். அதில், “சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளதே” என்று நிருபர்கள் கேட்கின்றனர். அதற்கு பதில் அளித்த பொன் ராதாகிருஷ்ணன், “மக்கள் விரும்பும்போது யாரும் எதுவும் தடை செய்ய முடியாது” என்கிறார்.

உடன் நிருபர்கள், “மக்கள் விரும்பாததால்தானே தடை வந்துள்ளது?” என்று எதிர்க் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு பொன் ராதாகிருஷ்ணன், “உறுதியான வளர்ச்சித் திட்டம், தூண்டுதலின் பேரில் நடக்கிறது என்றால் அது வேறு விஷயம். நான் அந்த விஷயத்துக்குள் நுழைய விரும்பவில்லை. மத்திய அமைச்சர் தெளிவாக சொல்லியிருக்கிறார். மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் அது நடக்கும்” என்று கூறியுள்ளார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், நீதிமன்றமே கூறினாலும் 8 வழி திட்டம் வரும் என்றோ, யார் தடுத்தாலும் 8 வழி சாலை அமையும் என்றோ பொன் ராதாகிருஷ்ணன் கூறவில்லை. மக்கள் விரும்பும்போது யாரும் எதுவும் தடை செய்ய முடியாது என்றும், மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று மட்டுமே கூறியுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

செய்தி நிறுவனங்கள் தவறான தலைப்பு மற்றும் நியூஸ் கார்டு வெளியிட்டதால், அது உண்மை என்று நம்பி இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:நீதிமன்றமே சொன்னாலும் 8 வழிச்சாலை அமைப்போம்: பொன்.ராதாகிருஷ்ணன் பற்றிய செய்தி உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False