மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிலையில் "பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இல்லை. விலை உயர்வு, வரி உயர்வு தான் உள்ளது" என்று அண்ணாமலை கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிருபர் அண்ணாமலையிடம் "பட்ஜெட் சம்பந்தமா" என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு அண்ணாமலை, "பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இல்லை. விலை உயர்வு, விலை உயர்வு, விலை உயர்வு, வரி உயர்வு, வரி உயர்வு, வரி உயர்வு" என்று கூறுகிறார்.

நிலைத் தகவலில், "பட்ஜெட் குறித்த கேள்விக்கு ஆடு அண்ணாமலையின் பதில் 👇 நாதஸ் திருந்திட்டானா.? #BJPBetraysTamilnadu" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மத்திய பட்ஜெட்டை ஜூலை 23, 2024 அன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் பற்றி நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. விலை உயர்வும், வரி உயர்வும்தான் உள்ளது என்று அண்ணாமலை கூறியது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை ஏமாற்றிய பாஜக என்று ஹேஷ்டேக் போட்டு இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2024 ஜூலை 23 அன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டை அண்ணாமலை விமர்சித்தது போன்ற தோற்றத்தை இந்த பதிவு ஏற்படுத்துகிறது.

"மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது, வளர்ச்சிக்கான பட்ஜெட். நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் நிதி அறிக்கை உள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் முதன்மையானதாக இந்த பட்ஜெட் உள்ளது. இது அனைவரையும் உள்ளடக்கிய பட்ஜெட்” என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகழ்ந்திருந்தார். அவரது புகழ்ச்சிக்கு அப்படியே எதிராக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு உள்ளது.

மத்திய பட்ஜெட்டை ஆளும் கட்சியை சார்ந்தவரே விமர்சிக்க மாட்டார். இது தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை விமர்சித்த வீடியோவாக இருக்கும். பழைய வீடியோவை இப்போது பகிர்ந்திருக்கலாம் என்பதால் இதை ஆய்வு செய்தோம்.

அண்ணாமலை பேட்டி அளித்த தகவலை அப்படியே கூகுள் மற்றும் யூடியூபில் டைப் செய்து தேடினோம். அப்போது, 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பட்ஜெட்டை விமர்சித்து அண்ணாமலை அளித்த பேட்டி அது என்பது தெரியவந்தது.

ABP Nadu என்ற ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் அண்ணாமலை அளித்திருந்த பேட்டி 2022 மார்ச் 9 அன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில், "BJP Annamalai Speech | விலை உயர்வு.. வரி உயர்வு..இது தான் பட்ஜெட்..அண்ணாமலை ஆவேசம் | TN Budget 2022" என்று தலைப்பிட்டிருந்தனர். இதுவே, இந்த பேட்டி தமிழ்நாடு பட்ஜெட்டை பற்றியது என்பதை உறுதி செய்கிறது.

தொடர்ந்து அந்த பேட்டியைப் பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இடம் பெற்ற காட்சியைத் தொடக்கத்திலேயே வைத்திருந்தனர். நிருபரின் கேள்விக்கு அண்ணாமலை "பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இல்லை. விலை உயர்வு, விலை உயர்வு, விலை உயர்வு, வரி உயர்வு, வரி உயர்வு, வரி உயர்வு. இந்த இரண்டும் மட்டும் தான் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பார்ப்பீங்க" என்று சொல்கிறார். முழு பேட்டியையும் பார்த்தோம். வீடியோவின் 2.55வது நிமிடத்தில் அந்த கேள்வி வருகிறது. "பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இல்லை. விலை உயர்வு, விலை உயர்வு, விலை உயர்வு, வரி உயர்வு, வரி உயர்வு, வரி உயர்வு. இந்த இரண்டும் மட்டும் தான் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பார்ப்பீங்க. வேற எதுவும் இருக்காது" என்று கூறுகிறார். அத்துடன் அந்த பேட்டி முடிகிறது.

2022ம் ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக அண்ணாமலை அளித்த பேட்டியை எடிட் செய்து, 2024 மத்திய பட்ஜெட் தொடர்பாக அண்ணாமலை விமர்சனம் என்பது போன்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2022 தமிழ்நாடு பட்ஜெட்டை அண்ணாமலை விமர்சித்த வீடியோவில் இருந்து தேவையான பகுதியை மட்டும் எடிட் செய்து எடுத்து 2024 மத்திய பட்ஜெட்டை அண்ணாமலை விமர்சித்தது போன்று சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மத்திய அரசின் பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று அண்ணாமலை விமர்சித்தாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False